நம்முடைய பேச்சு.....


ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்பவும், அநாச்சார இருளில் மூழ்கிக் கிடப்பவர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வரவும் இணையத்தில் இனிய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நமது கொள்கைச்சகோதர பதிவாகிய 'வெளிச்சம்' வலைப்பதிவில் வெளியான அருமையான கட்டுரை ஒன்றை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.
-----------------------------------------------------------------------------------
நம்முடைய பேச்சு.....
ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது.
அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும்.
மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும்.
தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது.
நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன.
மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)நூல்: முஸ்லிம் (4020)
பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரி (6780)
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்நூல்: முஸ்லிம் (118)
யாகாவாராயினும் நாகாக்க!நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)நூல்: அஹ்மத் (14870)
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.அல்குர்ஆன் (17:53)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.அல்குர்ஆன் (28:55)
வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.அல்குர்ஆன் (25:72)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (6018)நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்நூல்: அஹ்மத் (19403)
பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம்.
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)நூல்: அஹ்மத் (17902)
நன்றி: வெளிச்சம் http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_14.html#links

அதிர்ஷ்டக் கற்கள்


அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.
பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது. அதை எடுக்கும் போதே அந்தக் கையின் விரல்களில் அணிந்திருக்கும் ‘அதிருஷடக் கல் மோதிரம்’ ஃபோகஸ் செய்யப்படுகிறது. நீங்களும் அதிருஷ்ட சாலியாக வேண்டுமா? என இப்படி பலவித விளம்பரங்கள் இன்று நம்மை நோக்கி வருகின்றன.
வாழ்வில் பிரச்சனையா?
செல்வம் சேர்க்க வேண்டுமா?
ஆண்மை சக்தி குறைவா?
மண வாழ்வில் பிரச்சனையா?
வெளி நாடு செல்ல வேண்டுமா?
“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கற்கள் உண்டு அதை அணிந்து கொண்டால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் நம்புவது வடிகட்டிய முட்டாள் தனமும் மூட நம்பிக்கையும் ஆகும். வேதனையான விஷயம் என்னவென்றால் தாம் மெத்தப் படித்தவர் என்றும், டாக்டர் என்றும் பொறியாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்கள் கூட தங்களின் அறிவை அடகு வைத்துவிட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து இந்த மூடநம்பிக்கையின் பால் ஆட்கொண்டு விடுகின்றனர்.
ஆனால் சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலே இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி இவ்வாறு நம்பிக்கை கொள்வதே மிகப் பெரும் பாவமாகும். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனறியாமல் ஓர் ஆணுவும் அசையாது என்பதாகும். மேலும் இந்த வகையான கற்களுக்கும் மோதிரங்களுக்கும் எந்த சக்தியுமில்லை என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:17)
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல்-குர்ஆன் 35:2)
எனதருமை முஃமினான சகோதர, சகோதரிகளே! இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் சகல காரியங்களும் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. இதில் எந்த ஒரு முஃமினுக்கும் சந்தேகம் இல்லை. இதில் சந்தேகம் வரவும் கூடாது. அவனுடைய நாட்டமில்லாமல் அணுவும் அசையாது என்றிருக்க அவனை மட்டுமே வணங்கி முற்றிலும் அவனையே சார்ந்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நாம் எப்படி அவனை விடுத்து அவனுடைய படைப்பான கற்களிடமும், சட்சத்திரங்களிடமும், கிரகங்களிடமும் நம்பிக்கை கொள்வது?
முன்சென்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலர் இவ்வாறு கற்களுக்கும், சிலைகளுக்கும் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சக்தியுண்டு என்று நம்பி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வழிபட்டதால் தானே அவர்களை ‘காஃபிர்கள்’ என்று இறைவன் கூறினான்?
“தன் மீது அசுத்தம் படிந்தால் தானே சுத்தம் செய்து கொள்ள சக்தியில்லாத, தமக்குத் தாமே எதுவுமே செய்து கொள்ள இயலாத கற்களை”, ‘உங்களின் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யப் போகின்ற அதிருஷ்டக் கற்கள்” என்று கூறி நவீன காலத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் டி.வி. போன்ற மீடியாக்களின் உதவியுடன் விற்பனை செய்து வருகின்றனர். துரதிருஷ்ட வசமாக படிப்பறிவில்லா பாமரர்களும் மெத்தப் படித்த மேதாவிகளும்? இந்தப் போலியான கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாந்து விடுகின்றனர்.
ஒருவர் இந்த அதிருஷ்டக்கல் என்பதை அணிந்துக் கொண்டால் அவைகள் அவருக்கு நலவுகளைத் தருகின்றது என்று நம்பிக்கை கொள்வாராயின் அது படுபயங்கரமான, இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத ‘ஷிர்க்’ என்று சொல்லப்படக் கூடிய மாபெரும் பாவமாகும். காரணம் என்னவெனில், அந்த அதிருஷ்டக் கல் மோதிரம் அணிந்து கொள்பவர் பின்வரும் மாபெரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்.
1) மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் சக்தியையும் மீறி இந்த அதிருஷ்டக் கற்களே தமக்கு நன்மை தீமைகளை அளிக்கின்றது என்று நம்புகிறார்.
2) அல்லது அந்த அதிருஷடக் கற்களை அணிந்து கொண்டதன் காரணத்தால் அல்லாஹ் வேறு வழியில்லாமல் அவருக்கு நன்மைகளையே தருகின்றான் என்று நம்புகிறார். (நவூதுபில்லாஹ்! இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்)
ஒருவர் இதை மறுத்தாலும் இது தான் உண்மையாகும். மேற்கண்ட இரண்டில் ஒரு காரணத்திற்காகத் தான் ஒருவர் இவ்வகையான கற்களுடைய மோதிரங்களை அணிகிறாரே தவிர வேறில்லை. எனவே இது ‘ஷிர்க்’ எனப்படும் மாபெரும் பாவமாகும்.
எனென்றால் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் அவனையே சார்ந்திருக்கின்றன. அவைகள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளக் கூட சக்தியற்றவைகளாக இருக்கின்றன.
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடிவிட்டால் அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது. அதைப் போல அல்லாஹ் ஒருவருக்கு ஒரு தீமையை நாடிவிட்டால் அதை அவனைத்தவிர வேறு எதுவும் அதாவது அதிருஷ்டக் கற்களோ, தட்டு, தகடு, தாயத்து அல்லது இது போன்ற எதற்குமே சக்தியில்லை. இவைகளை அணிந்து கொண்டாலும் இவைகளால் அவனுடைய சக்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:107)
மாறாக, இவைகளை அணிந்து கொண்டால் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் கேட்பதற்கு பதிலாக இந்த கற்கள், தட்டு, தகடு மற்றும் தாயத்து போன்றவைகளின் மீது நம்பிக்கை வைத்ததற்காக இறைவனின் கோபத்திற்குள்ளாக நேரிடும். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாகவும்).
மேலும் ஒருவருடைய பிறந்த தேதிக்கும் நட்சத்திரத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. நட்சத்திரங்கள் ஒருவருடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று நம்புவதும் மூட நம்பிக்கையும் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையும் மாபெரும் பாவமுமான ‘ ஷிர்க்’ என்னும் இணைவைத்தலுமாகும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொண்ட முஃமினான ஒருவர் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
அல்லாஹ் கூறுகிறான்: -
39:65 அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்).
39:66 ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்-குர்ஆன் 39:65-66)
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். (அல்-குர்ஆன் 10:106)
எனவே எனதருமை முஃமினான சகோதர சகோதரிகளே! யார் அல்லாஹ்வுடைய வேதத்தையும் அவனுடைய தூதருடைய வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழ்கிறாரோ அவர் வழிதவற மாட்டார். ஆனால் எவர் வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன் 3:160)

சூனியம் என்பது உண்டா?

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 'இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்' என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.இறை நம்பிக்கையில் ஏற்படும் இடற்பாடுகளை இனங்காட்டி மக்களை மீட்டெடுக்க வந்த நபிமார்களின் பெயரிலேயே இறை நம்பிக்கையில் ஊருவிளைவிக்கும் காரியம்தான் இந்த சூனிய நம்பிக்கையின் மூலம் நடைப்பெறுகிறது.
சூனியத்தை நம்பும் முஸ்லிம்கள் முதலாவது விளங்க வேண்டிய விஷயம் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை அத்தகைய நம்பிக்கையை குர்ஆன் வலுவாக மறுக்கிறது என்பதேயாகும். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று 'நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா..?' என்ற தலைப்பில் ஏற்கனவே நமது இணையத்தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (இங்கு கிளிக் செய்துப் படிக்கவும்) இதில் தெளிவு கிடைத்து விட்டால் இந்த நம்பிக்கையில் பாதிக்கு மேல் குறைந்து விடும்.
அப்படியானால் சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்ற கேள்வி வருகிறது. இனி அது குறித்து விளங்குவோம்.'சூனியம் என்று எதுவுமே இல்லை' என்று இஸ்லாம் மறுக்கவில்லை. சூனியம் இருப்பதாக இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.
சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.
நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.
'கணவன் - மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்' என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.
இந்த சூனியம் பேச்சுக்களின் காரணமாக உருவாவதாகும். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவை ஏற்படுத்த அந்த கணவன் மனைவியை சுற்றியுள்ளவர்கள் மனங்களில் ஷைத்தான் இவர்கள் பற்றிய தீய எண்ணங்களை ஏற்படுத்துவான். இதன் கெடுதியை உணராதவர்கள் தங்கள் மனங்களில் ஷைத்தானால் ஏற்படுத்தப்பட்ட தீய எண்ணங்களை தங்கள் வாய்களால் வெளிப்படுத்துவார்கள். விளைவு குடும்பங்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை வெடித்து கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை தலைத்தூக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டால் அவர்கள் செய்யும் சாதாரண சின்ன தவறுகள் கூட பூதகரமாக தெரியும். யாரால் இத்தகைய பேச்சும் பிரச்சனையும் உருவாகியது என்று சிந்திக்க விடாத அளவுக்கு ஷைத்தான்களின் திட்டம் வலுவாக இருக்கும். இதை உணராத அந்த கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தர்கா, மந்திரவாதி, சூனியக்காரன், சாமியார் என்று அலையும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த சந்தர்ப்பங்களில் இறைவனைப் பற்றிய நினைவும் நம்பிக்கையும் குறைந்து போய் அவனுக்கு எதிரான அவன் தடுத்துள்ள எல்லாக் காரியங்களையும் செய்யும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சூனியத்தின் வேலையாகும்.
பேச்சுக்களால் ஏற்படும் சூனியத்தில் கணவன் - மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி (ஸல்) வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.நபி(ஸல்) அவர்களுடன் ஆய்ஷா(ரலி) ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி(ஸல்) ஓய்வெடுக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறியவில்லை. ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள். நடந்த எது ஒன்றும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா(ரலி)க்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாருமே இல்லை. சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா(ரலி) அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள். போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அது அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து 'சுப்ஹானல்லாஹ்' என்கிறார். இந்த சப்தத்தில் ஆய்ஷா(ரலி) விழித்துக் கொள்கிறார்கள். அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார்.
வேறொரு ஆணுடன் ஆய்ஷா(ரலி) வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா(ரலி) அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி(ஸல்) அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை - சஞ்சலத்தை - ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.'ஆய்ஷாவே! நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்' என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, 'ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா'என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. 'சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்' என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் நபியுடைய மனைவியையும் பாதித்தது. அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன.
இந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.'இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.' (அல் குர்ஆன் 24:15) இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின. (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)மனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.'இறை விசுவாசிகளே! (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)
இறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரி! இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது' என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் (5325) இடம் பெற்றுள்ளது)
பேச்சுக்கலையால் மனங்களை பாழ்படுத்தும் சூனியம் போன்றே கண்களுக்கு கொடுக்கும் தீவிர பயிற்சியாலும் மனித மனங்களில் பயங்களை உருவாக்கி சூனியம் செய்து விடலாம். இத்தகைய சூனியம் ஃபிர்அவ்ன் என்ற கொடியவன் வாழ்ந்த காலத்தில் பிரபல்யமாக இருந்தது.இறைத்தூதர் மூஸா(அலை) ஃபிர்அவ்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் போது மூஸா(அலை) அவர்களை தோற்கடிக்க சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் துணைக்கு அழைக்கிறான். இதைக் குர்ஆன் வரிசையாக சொல்கிறது.பிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். ''நாங்கள் மூஸாவை வென்று விட்டால் அதற்குறிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமா..'' என்றார்கள். அவன் கூறினான், ''ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று.'' மூஸாவே நீர் முதலில் எறிகிறீரா.. நாங்கள் எறியட்டுமா..'' என்றுக் கேட்டார்கள். அதற்கு மூஸா ''நீங்கள் எறியுங்கள்'' என்றார். அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படியான திறமையான சூனியத்தை அவர்கள் செய்தனர். (அல் குர்ஆன் 7:113-116)அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தபோது சூனியத்தால் நெளிந்தோடுவது போல் மூஸாவிற்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.(மூஸாவே) பயப்படாதீர், நிச்சயமாக நீர்தான் மேலோங்குவீர்! என்று (இறைவன்) நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 20:66-68)உம் கையில் இருப்பதை கீழே எறியும். அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரர்கள் எங்கு சென்றாலும் வெற்றிப் பெற மாட்டார்கள் என்று கூறினோம்.மூஸா எறிந்த உடன் சூனியக்காரர்கள் கற்பனை செய்த யாவற்றையும் அது விழுங்கி விட்டது. (அல் குர்ஆன் 7:117, 20:69)சூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, அங்கேயே சிறுமைப் படுத்தப்பட்டவுடன் உண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள். (அல் குர்ஆன் 7:119-121)
இந்த வசனங்களிலிருந்து பேசப்படும் சூனியம் அல்லாமல் செய்யப்படும் சூனியத்தின் நிலை என்னவென்று தெளிவாகிறது.மனிதர்களிடம் ஏராளமான திறமைகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வர முறையான தீவிர பயிற்சித் தேவைப்படும். அத்தகைய பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு கலையே மெஸ்மெரிஸம் என்ற கண்கலையாகும். இந்த கலையை பயிற்சியின் மூலம் பெற்றவர்கள் தங்கள் கண்களால் சில காரியங்களை தற்காலிகமாக செய்துக் காட்ட முடியும். இத்தகைய பயிற்சிப் பெற்றவர்கள் தான் மூஸா(அலை) காலத்தில் சூனியக்காரர்கள் என்ற பெயரில் இருந்துள்ளனர். அவர்களின் சூனியக்கலையைப் பற்றி இறைவன் கூறியுள்ள வார்த்தை ஊன்றி கவனிக்கத் தக்கதாகும். 'மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படி செய்தனர்' என்கிறான். எதுவுமே இல்லாத போது கூட இருட்டில் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று பயந்த மக்கள் கூறுவது போன்ற ஒரு மாய தோற்றத்தை தான் அந்த சூனியக்காரர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.
இயற்கைக்கு மாற்றமாக நடக்கும் எது ஒன்றும் மக்களிடம் பயத்தையோ அல்லது ஆச்சரியத்தையோ உருவாக்கும். மூஸா உட்பட அங்கு குழுமி இருந்த மக்களுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கில் தான் அவர்கள் தங்கள் கண் கட்டி வித்தையை அரங்கேற்றினார்கள். இறைவனின் நாட்டப்படி மூஸா(அலை) வென்றவுடன், 'சூனியக் காரர்களின் கற்பனை தோற்கடிக்கப்பட்டது என்கிறான் இறைவன்' சூனியம் என்பது உண்மை என்றால் அதை கற்பனை என்று இறைவன் கூற மாட்டான். இறைவன் கற்பனை என்று கூறியதிலிருந்தே அவர்கள் செய்தது மெஸ்மெரிஸம் - கண்கட்டி வித்தைதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.
தங்கள் சூனியம் தோல்வியடைந்தவுடன் இனி இந்த பொய் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்ததோடு மூஸாவின் செயலும் அவரது அழைப்பும் சத்தியமானது என்று அவர்களின் அறிவு அவர்களுக்கு சொல்லி விடுகிறது. அதனால்தான் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவர்களால் இஸ்லாத்தை ஏற்க முடிந்தது. ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உயிர்விட முடிந்தது.
சூனியக்கலை உண்மைதான் என்று அந்த சூனியக்காரர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் மூஸாவிடம் தோற்றாலும் பிறரிடம் அதை செய்துகாட்டி வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அது ஒரு போலித்தனமான தற்காலிகமான கலை என்பதை விளங்கலாம்.
இன்றைக்கும் கூட ஆங்காங்கே மணலை கயிறாக திரிப்பது, தண்ணீரை பாலாக்குவது, மண்ணிலிருந்து குங்குமம் வரவழைப்பது போன்ற வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். பயிற்சியின் வழியாகவும், செட்டப் மூலமாகவும் இவை நடத்தப்படுகின்றன.சூனியத்தால் எதையும் செய்துக் காட்டிவிட முடியும் என்று கூறும் இந்த சூனியக் காரர்கள் தங்களுக்கு தேவையானதையே சூனியத்தால் செய்துக் கொள்ள முடியாமல் சூனியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இதையெல்லாம் சிந்திக்கும் போது சூனியம் என்பது கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் ஒரு போலியான கலை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த சூனியத்தை விட நாம் மேலே விளக்கியுள்ள பேச்சு வழி சூனியம்தான் அபாயகரமானதும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்பு தேடக் கூடியதுமாகும். இந்த இரண்டு வகை சூனியத்தை தாண்டி வேறு சூனியம் எதுவுமில்லை. இருப்பதாக நம்புவது குர்ஆனையும் நபிவழியையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிமுக்கு அழகல்ல.
சந்தேகமும், பலவீனமும் உள்ளவர்களிடம்தான் இத்தகைய சூனியங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அர்த்தம் பொதிந்த இரண்டு பாதுகாப்பு சூராக்களை இறைவன் இறக்கி வைத்துள்ளான்.'குல் அவூது பிரப்பில் ஃபலக்' 'குல் அவூது பிரப்பின்னாஸ்' இவற்றின் அர்த்தத்தை படித்து விளங்கும் எவரும் சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.'இறைவனின் நாட்டமின்றி இதன் மூலம் அவர்கள் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. (அல் குர்ஆன் 2;102)

வேத புத்தகங்கள்

இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
இன்று இஸ்லாமியர்கள் மத்தியிலே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புத்தகங்களில் அதிகமானவை இஸ்லாம் என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டு இஸ்லாமிய விரோதப் புத்தகங்களாகத்தான் இருக்கின்றன.
சல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரீனும் மட்டுமல்ல இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோரால் பெருமதிப்பு மிக்கதாக மதிக்கப்படும் எத்தனையோ புத்தகங்கள் இஸ்லாத்தில் சேறு பூசுவதற்காகவே புறப்பட்டவைதான்.
ரவ்ளா ஷரீபில் கனவில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஸலவாத்து, நெருப்பு ஸலவாத்து(ஸலாத்து நாரியா), பெரியார்களின் சம்வங்கள் மூலம் பெரியார் பூசைக்கான புத்தகங்கள். இப்படி இன்னோரன்ன கதைகள். இவர்களெல்லாம் தனக்குத் தாமே வேறு 'மௌலானாக்கள்' என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். விலை போவதற்கு அவைதான் ஷரத்துக்கள்!
மன்ஸில் என்ற பெயர்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனிதனின் மார்க்கமாகப் பொருந்திக் கொண்ட இஸ்லாத்தின் முழுமுதல் வேதப் புத்தகத்திற்கு 'அல்-குர்ஆன்' என்ற பெயரை அழகாகக் சூட்டியிருக்கிறான். இவர்கள் அந்தப் பெயருக்குச் சவாலாக 'மன்ஸில்' என்று சூட்டியிருக்கிறார்கள். இந்த வழிகேடர்கள் தானும் கெட்டு அப்பாவி பாமர மக்களையும் வழிகேட்டிலாக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் ஏழாண்டுகள் அரபி மத்ரஸாக்களில் கல்வி கற்றார்களா?
அல்-குர்ஆனின் சில அத்தியாயங்களை அச்சிட்டு அதற்கு முன்னும் பின்னும் ஓதுவதற்கென்று குர்ஆனல்லாத சிலதையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அல்-குர்ஆனை விட இதைத்ததான் இன்றைய முஸ்லிம்களில் பலர் வைத்துக் கொண்டு பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கு விளக்கம் கேட்டால் இதை ஊக்குவிப்பவர்கள் சொல்லும் காரணம் குர்ஆனை வுளு இல்லாமல் தொடக்கூடாது, ஆகவே, குர்ஆன் வசனங்களைவிட அதிகமாக ஸலவாத்துக்கள், துஆக்கள் என்று வேறு சிலவற்றை அச்சிட்டு வுளு இல்லாமல் தொடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று காரணம் சொல்கிறார்கள்.
அறியாமைக்கும் ஓர் அளவுண்டு! மனிதன் தேவையில்லாமல் போட்டுக் கொண்ட சட்டம் எப்படி வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமல் இருக்கிறது என்பதையாவது சிந்திக்க வேண்டாமா? அந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பார்க்க வேண்டாமா?அல்லாஹ்வின் அறிவுக்கே சவால் விடும் இந்த ஏழுவருட வகுப்புகளுக்குச் சென்று வந்த அறிஞர்கள் அல்-குர்ஆனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு பாத்திஹா ஓதி சம்பாதிப்பதற்காகவா இந்தக் குர்ஆன் அருளப்பட்டது? மரண வீடுகளில் ஓதி இறந்தோருக்குச் சாட்டுவதற்காகவா இந்தக் குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கப்பட்டது? அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போது மன்ஸில் என்றொன்றைத் தொடங்கி 'சொற்பக் கிரயத்திற்கு' விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் பார்க்கும் போது மேலெடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ் இந்தக் காலத்திற்கு எவ்வளவு பொருத்தமாகவுள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரக்கூடியதாயிருக்கும்.
இப்படிப்பட்ட திருகுதாளங்கள் செய்து மக்களை வழிகெடுப்பதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. அப்படிப்பட்ட பித்ஆக்களுக்கு வழிகாட்டுவதிலிருந்தும் அவற்றைச் செய்வதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொண்டோமானால் அதுவே சுட்டெரிக்கும் கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இன்ஷா அல்லாஹ் ஒரு காரணியாகவிருக்கும்.வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை
நன்றி: தமிழ் முஸ்லிம்.காம்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.
பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.
அவைகள்: -
1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.
2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)
இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.
ஜோதிடக் கலை: -
இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.
ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: -
1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.
இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.
2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.
இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.
இராசிப்பலன்கள்: -
ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.
படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.
எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -
1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.
ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.
ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.
ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?
ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.
ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
அல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.
1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்3) கப்பலில் வழி காட்டியாகவும்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.
“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.
“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)
அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.
நன்றி: சுவனத் தென்றல்.காம்

ஷியாயிஸம்


அகில உலக அளவிலும் இஸ்லாத்தின் மிகப் பெரிய கொள்கை மாறுபாடாகக் கருதப்படுவது 'ஷியாயிஸம்' என்பதுதான். முஸ்லிம்களின் அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியாக அன்றுமுதல் இன்றுவரை இடற்பாடுகளை நாம் சந்திப்பதற்கு ஷியாயிஸம் முக்கியப்பங்கு வகிப்பது நாம் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்று,
இஸ்லாத்தின் புரிந்துணர்வில் பல மாறுபாடுகளை கண்ட ஷியாக்கள் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அவர்களின் கொள்கை புரிந்துணர்வு எடுத்துக் காட்டப்பட வேண்டும், பிறரை எச்சரிக்கைப் படுத்த வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கான் போன்ற நாடுகளில் ஷியாக் கொள்கையின் தாக்கம் (இதுதான் ஷியாக் கொள்கை என்று அந்த மக்கள் அறியாமலே) பரவலாக ஆட்கொண்டுள்ளதை அவர்கள் இஸ்லாத்தை வெளிபடுத்தும் போது தெரிந்துக் கொள்ளலாம். தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.
எனவே அதுபற்றி ஓரளவு தமிழ் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கட்டுரை.
ஷியா என்பது ஒரு அரபுப் பதமாகும். இலக்கண அடிப்படையில் இதற்கு 'பிரிவு' என்று பொருள். குர்ஆனில் பரவலாக இந்தப்பதம் பிரிவினர் (குரூப்) வழிதோன்றல் போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட படுமோசமான அரசியல் நெருக்கடிகள் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்தது. ஆதரவு - எதிர்ப்பு என்ற கோஷங்கள் எழுந்த போது அலி(ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் (பிரிவு) களமிறங்கியது. அன்றைக்கு இவர்களை கூட்டிக் காட்ட 'ஷியதுஅலி' அலியின் ஆதரவாளர்கள் (அலி பிரிவினர்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் 'ஷியது அலி'யில் இருந்த அலி என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'ஷியா'வாக சுருங்கியது. அதுவே அவர்களை சுட்டிக் காட்டும் பெயராகவும் நிலைத்து விட்டது.
பொதுவாகவே அரசியல் கொந்தளிப்பு - நெறுக்கடி ஏற்படும் போது பொய்கள் சர்வசாதாரணமாக பிறப்பெடுத்து சமூகத்தை மொத்தமாக ஆட்கொள்ளும் என்பது நாம் அனுபவ ரீதியாக அறிந்த ஒன்றுதான். இதே நிலை அன்றைக்கும் நீடித்தது. அலியின் ஆதரவாளர்கள் என்று களமிறங்கியவர்கள் தங்களையும் தங்கள் தரப்பையும் நியாயப்படுத்திக் கொள்ள பொய்களை துணிந்து பரப்பினர். (அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) அன்றைக்கு இஸ்லாம் என்ற கொள்கையே மிகப் பெரும் ஆதிக்கம் செய்துக் கொண்டிருந்ததால் கொள்கைத்தனமான பொய்களே மக்களை வெகுவாக கவரும் என்பதை உணர்ந்தவர்கள் அதையே கடைபிடித்தனர். தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்காக இவர்கள் இத்தகைய பொய்களை பரப்பினாலும் அந்தப் பொய்கள் பலகாலகட்டங்களை கடந்தும் ஒரு பிரிவினரை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே ஷியா என்பது 'ஷியதுஅலி' (அலி குரூப்) என்று துவங்கி அரசியலுக்காக பொய்களை புனைந்து பின்னர் 'ஷியா' என்றாகி அந்த பொய்களின் மீதே நிலைத்து விட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அவர்களின் அரசியல் ரீதியான பொய்கள் கொள்கை ரீதியாக எப்படியெல்லாம் வியாபித்தது என்பதில் சிலவற்றை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்."ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்" என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,"அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்" என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்" என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை" என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது "கதீர்ஃகம்" என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து "இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்."யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும். அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.இதை அறிந்த சுன்னத் ஜமாத்தில் உள்ள சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.
ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.''தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார். அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238 ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 ''நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார். அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261 ''உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27 நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ''முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்கள். தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள். அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197 அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள். காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245 அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246 (அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 296 எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள். அல் உஸுலு மினல் காபி பக்கம் 258 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்கள். அல் உஸுலுமினல் காபி பக்கம் 398 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாது. அல் உஸுலுமினல் காபி பக்கம் 402 எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர். குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) ''வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்கள். அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261 இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்கள். கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470 ''யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம். பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள். அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ''வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார். தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இப்படி நிறைய எழுதலாம். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் புரிந்துக் கொள்ளும் சில உதாரணங்களே இவை. பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.
நன்றி: இது தான் இஸ்லாம்.காம்
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை

ஹதீதுகளின் பாகுபாடுகள்


ஹதீதுகளின் பாகுபாடுகள்
இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
"நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்" என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்கு, பொய்யான ஹதீதுகள் இட்டுக்கட்டப்படும் என்ற முன்னறிவிப்பைத் தருகின்றது. ஆகவே, ஹதீது என்று சொன்னவுடன் அதன் தரத்தைப் பற்றி ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். பொய்யான ஹதீதுகள், மறுமையை மறந்து, இவ்வுலக சுகபோகங்களை விரும்பியவர்களால், இட்டுக்கட்டப்பட்டவை என்பது தெளிவான ஒரு விஷயம்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சில முனாபிக்கீன்கள் இஸ்லாத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நல்லாட்சி நடத்திய 4 கலீபாக்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் பேராசையோடும் பொய்யான ஹதீதுகள் புனையப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன. அது உருமாறி, மார்க்கத்தை அற்ப உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியவர்களால், பொய்யான ஹதீதுகள் புதுப்பொலிவைப் பெற்று மக்களிடையே சகஜமாக உலாவர ஆரம்பித்தன.
ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை, 4 இமாம்களது கால கட்டத்தில் பொய்யான ஹதீதுகள் நடைமுறையில் இருந்து வந்தாலும், அவற்றின் விபரீதப்போக்கு உச்சத்தை அடையவில்லை. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஹதீதுகளைத் தரம் பிரிக்கும் முயற்சி நடைபெறவில்லை, அதற்கடுத்த காலகட்டத்தில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன. பலர் சுய வேட்கையோடு அவற்றை நெய்வார்த்து வளர்த்து வந்தனர். ஆகவே, ஹதீதுகளைத் தரம்பிரிக்கும் அவசியம் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டது.
இந்தக் கலைக்கு வித்திட்டவர் இமாம்களுள் ஒருவரான ஹிஜ்ரி 241 ல் மரணமடைந்த இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று சொல்லலாம். அவரது மாணவரான இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அவர்கள் திரட்டிய பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை இரவு பகலென்று பாராமல் அலசி ஆராய்ந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தனர். அதே போல் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், தாங்கள் திரட்டிய லட்சக்கணக்கான ஹதீஸ்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, உண்மையான ஹதீஸ்கள் என்று கண்ட சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் மட்டும் பதிவு செய்தனர்.இதற்குப் பின் தோன்றிய சில ஹதீஸ்களை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களையும் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் விஷயமாக, ராவிகள் விஷயமாக, இஸ்நாது விஷயமாகத் தங்களுக்குக் கிடைத்த விவரஙகளையும் தங்களது நூல்களிலேயே பதிவு செய்து வைத்தனர். அதன் பின் தோன்றிய சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் அறிவிப்போடு பதிவு செய்தனரே அல்லாமல், அவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு அவர்கள் குறிப்பிடாததற்கு "அஸ்மாவுர் - ரிஜால்" கலை வளர்ந்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வரிசையில் வரக்கூடிய நபர்கள் அனைவரது சரித்திரங்களும் பெரும்பாலும் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன.ஒரு ஹதீஸைப்பற்றிய ஐயம் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பாளர்களின் வரிசையையும், அவர்களின் குணாதிசயங்களையும் ஆராய்ந்து அந்த ஹதீஸின் தரத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன.மர்ஃபூஃ, முஸ்னது, முத்தஸில் போன்ற பிரிவு வாரியான அடிப்படையில் ஸஹீஹான ஹதீதுகளையும், முதல்லஸ், முர்ஸல், முன்கத்தஃ, மவ்கூஃப் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் லயீஃபான ஹதீதுகளையும், முன்கர் போன்ற அடிப்படையில் மவ்லூவான ஹதீதுகளையும் தரம்பிரித்து பாகுபடுத்தி நிர்ணயம் செய்து காட்டப்படுகின்றன.
ஆக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே, குர்ஆன் - ஹதீஸ்களுக்கு முரண்பட்ட தக்லீத், தஸவ்வுஃப் தத்துவங்கள் இஸ்லாத்தின் பேரால் நுழைக்கப்படுவதற்கு முன்பே, ஹதீஸ்கலை வல்லுனர்களாலும், 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்களாலும் ஹதீஸ்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு தெள்ளத் தெளிவாக மேற்கூறியபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய 4 இமாம்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவாகளின் வழிகாட்டுதலுக்கு விரோதமாக சில சுய நலமிகளால் மத்ஹபுகள், தரீகாக்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியோர்களால், தெளிவாக ஆராயப்பட்டு, அவர்களது கிதாபுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் ஸஹீஹ், லயீஃப், மவ்லூஃ என்று சொல்லுகிறோமெயல்லாமல், எங்கள் இஷ்டத்திற்கு நாங்களாக கூட்டி குறைத்து எதையும் சொல்லவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஆராயப்பட்டு, வடித்தெடுக்கப்பட்டு லயீஃப் என்றும் மவ்லூஃ என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பிரித்திறிவிக்கப்பட்டு அன்றைய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தும், மீண்டும் எப்படி இந்த லயீஃபான, மவ்லூஃஆன ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்து ஆழவேருன்றிக் கொண்டன? அதற்கு முன்னால் "பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஏன் செயல்படக்கூடாது?" என்று பலர் ஐயங்களைப் கிளப்புவதால் அது பற்றிய காரணத்தை முதலில் பார்ப்போம்.
அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளனர்.அதாவது அந்த ஹதீஸில் குறிப்பிட்ட விஷயத்தை நபி(ஸல்) சொன்னதாக திட்டவட்டமாகத் தெரியும் போது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும்" என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்ற சந்தேகம் தோன்றும்போது என்ன செய்வது? நாம் எப்படி நடந்து கொள்வது? அதற்கு திருக்குர்ஆன் நமக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது."உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றக் கூடாது." (அல்குர்ஆன் 17:36)திட்டவட்டமாக நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியாதபோது அதனைப் பின்பற்றுவது கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் கூறிவிடுகிறான். அவ்வாறு பின்பற்றுவதை தடை செய்கிறான். பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தவரை திட்டவட்டமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்ல முடியாத நிலை, அதனால் பலவீனமான ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படுவது கூடாது என்று தெரிகின்றோம்.
நபி(ஸல்) அவர்களும் இதுபற்றிக் குறிப்பிடும்போது "உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு! சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு!" என்று கூறியுள்ளார்கள். இதனை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது புகாரி நூலில் "வியாபாரங்கள்" என்ற பாடத்திலும் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் "கியாமத்" என்ற பாடத்திலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னத்திலும் அறிவிக்கின்றனர்.இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும், சந்தேகத்திற்குரியவைகளைப் பின்பற்றுவதை தடைசெய்து விடுகின்றது. இந்தக் கருத்தைச் சொல்லக் கூடிய இன்னும் பல ஹதீஸ்களும் வந்துள்ளன.எனவே எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸின் கருத்துடன் மோதாவிட்டாலும் அதில் சந்தேகம் இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அதனைப் பின்பற்றக்கூடாது என்பது தெளிவு.அவ்வாறிருக்க பலவீனமான சில ஹதீஸ்களை திர்மிதி போன்ற இமாம்கள் ஏன் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்? என்ற ஒரு கேள்வியும் சிலரால் கிளப்பப்படுகிறது.
அன்றைய காலத்தில் "பலவீனமான ஹதீஸ்கள்" ஆதாரப்பூர்வமானவை என்ற முத்திரையுடன் உலாவந்தன. அதனை அடையாளம் காட்டி அதன் உண்மை நிலையை உணாத்திடவே அந்த இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து அடையாளம் காட்டுகின்றனர்.உதாரணமாக "நஜாத்" தனது இதழ்களில் கதைகளின் பின்னணியில் என்று எழுதுகின்றது. அந்தக் கதைகள் ஏதோ ஆதாரமற்றவைபோல் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்படுகின்றன. அது சரியானாதல்ல என்று அடையாளம் காட்டுவதற்காக அந்தக் கதைகளை எழுதி நாம் விமர்ச்சிக்கவில்லையா? அது போல்தான் சில ஹதீஸ்களை இமாம்கள் பலவீனமானது என்று அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடுகின்றனர்.
முன்கரான ஹதீதுகள்:-
அடுத்து முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம். குர்ஆன் வசனங்களுக்கோ, உண்மையான ஹதீதுகளுக்கோ முரண்படுகின்ற ஹதீதுகள் "முன்கரான" - இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் என்று கணிக்கப்படுகின்றன.
இந்த முன்கரான, மவ்லூஃஆன ஹதீதுகளை வைத்துச் செயல்படும் போது, குர்ஆன் வசனங்களையோ, உண்மை ஹதீதுகளையோ புறக்கணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது அறிவுடையோர் செய்யும் செயல் அன்று.
உதாரணமாக, "ரமழான் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்ற, ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு உண்மை ஹதீது, 'ஸிஹாஹ்ஸித்தா' முதல் 15 ஹதீது கிதாபுகளில் "ரமழான் இரவுத் தொழுக" பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாபிர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீது, நபி(ஸல்) ரமழான் இரவில் 11 ரக அத்துகள் தொழ வைத்தார்கள்", என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீதை ஊர்ஜிதம் செய்கின்றது. மேலும் உபை இப்னு கஃபு(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சம்பவத்தை எடுத்துச் சொன்ன போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக அங்கீகரித்த இன்னொரு ஹதீது, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் அறிவிப்புக்கு இன்னும் அதிக வலுவைத் தருகின்றது.
ஆக இந்த மூன்று உண்மை ஹதீதுகளும், நபி(ஸல்) அவர்களின் ரமலான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துகள் மட்டுமே என்பதைத் தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.இந்த நிலையில் பைஹகி, தப்ரானி போன்ற நூல்களில் காணப்படும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீதில் நபி(ஸல்) ரமழான் இரவில் 23 ரகஅத்துகள் தொழுததாகக் காணப்படுகின்றது. ஆக முன்னால் நாம் பார்த்த மூன்று ஹதீதுகளுக்கும் முரணாக இந்த ஹதீது காணப்படுகின்றது. அதனால் இந்த ஹதீதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
அப்படி ஆராயும்போது 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்கள், இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் வரும், அபூஷைபா இப்றாஹிம் இப்னு உதுமான், **ஹனம் இப்னு உதைபா கூபி** ஆகிய இருவரும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். பொய்யர்கள் என்று அறிவித்திருப்பது தெரிய வருகின்றது. அதனால் ஹதீதுக் கலை வல்லுனர்கள் இந்த ஹதீதை "முன்கரான ஹதீது' என்று அறிவிக்கின்றனர்.
ஆக சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் ஹதீதுக்கு எதிராக இந்த 23 ரகஅத் என்ற ஹதீது இருப்பதால், இந்த 23 ரகஅத் ஹதீதை ஹதீதுக் கலை வல்லுனர்கள் தங்களது ஆதாரப்பூர்வமானன நூல்களில் நிராகரித்துள்ளனர்.
முரண்பட்ட கருத்துக்கள்:-
அடுத்து உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி) தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்ட, ஸாயிப் இப்னு யஸீதால்(ரழி) அறிவிக்கப்படும் ஒரு சம்பவம் முஅத்தா இமாம் மாலிக்கில் காணப்படுகின்றது. அதற்கு அடுத்து அதே முஅத்தா இமாம் மாலிக்கில், "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத்துகள் தொழுது வந்தார்கள்" என்ற சம்பவம் யஸீதுப்னு ரூமானால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரழி) அவர்கள் 23 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டதாகவும், தொழுததாகவும் ஒரு சில கிதாபுகளில் பதிவாகி உள்ளன. ஆக உமர்(ரழி) அவர்களைத் தொட்டும் முரண்பட்ட இரு கருத்துக்கள் (11 ரகஅத், 23 ரகஅத்) காணப்படுகின்றன.இவர்களை நிராகரித்தவர்கள்* அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) யஹி இப்னு முயின் அபூஜர்ஆ, அபூ ஹாதம் ராஸி, தகபி.** இப்னு ஜெளசி, அபூ ஹாதம் ராஸி, தகபி.இப்போது இந்த முரண்பட்ட இரு கருத்துக்களை ஆராய்வோம்.
உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். நபி(ஸல்) 11 ரகஅத் தொழுதிருக்க, அதற்கு மாற்றமாக உமர்(ரழி) அவர்கள் மீது நாம் நல்லெண்ணமே கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் எண்ணத்தை உமர்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கனவில் கூட நாம் நினைக்க முடியாது. 23 ரகஅத் சம்பவத்தை ஆராயும் போது அறிவிப்பாளர்களில் பல பலவீனங்களைப் பார்க்க முடிகின்றது. உதாரணமாக, "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள்" என்று அறிவிக்கும் யஜீதுப்னு ரூமான், உமர்(ரழி) அவர்களின் காலத்தில் பிறக்கவே இல்லை. பஸீதுப்னு ரூமானின் இறப்பு ஹிஜ்ரி 130 என்று அஸ்மாவுர்ரிஜால் கலை வல்லுனர் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளனர்.உமர்(ரழி) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 24. யஸீதுப்னு ரூமான் ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருந்தாலும், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவே முடியாது. ஆக தொடர்பு இல்லை. இப்படி உமர்(ரழி) 23 ரகஅத் தொழுதார்கள், தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள், உமர்(ரழி) காலத்தில் 23 ரகஅத் தொழப்பட்டது ஆகிய அனைத்து அறிவிப்புகளும் உண்மைச் சம்பவத்திற்கும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் மாற்றமாக அமைந்துள்ளன.அப்படியே, ஒரு வாதத்திற்காக உமர்(ரழி) காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதை நாம் மார்க்கமாகக் கொள்ள முடியாது. காரணம் உமர்(ரழி) காலத்தில் மக்கள் பல தவறான மார்க்க முரணான காரியங்களிலும் ஈடுபட்டிருந்திருப்பர், ஈடுபட்டிருந்திருக்கலாம். இதையெல்லாம் மார்க்கத்திற்குரிய ஆதாரங்கள் என்று எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
ஆனால் மக்கள் 23 ரக்அத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாகத் தொழுது வந்ததை மாற்றி, உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி 11 ரகஅத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள், என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது. உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி நடந்தார்கள் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டுமேயல்லாது, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு விரோதமாக 23 ரக்அத் தொழத் துணை போனார்கள் என்று நாம் ஒரு போதும் எண்ண முடியாது.
நாம் செய்ய வேண்டியது என்ன?இன்னும் ஒரு வாதத்திற்கு உமர்(ரழி) அவர்களே 23 ரகஅத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்?நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 11 ரகஅத் தொழுதார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 ரகஅத் பற்றிய அறிவிப்பு அதற்கு முரணாகக் காணப்படுகின்றது. 23 ரகஅத்தை விட்டு 11 ரகஅத்தை எடுத்துக் கொள்பவர்கள் உமர்(ரழி) அவர்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள், அதே அடிப்படையில் 11 ரக்அத்தை விட்டு 23 ரகஅத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களையே அவமதிக்கிறார்களே? இது நியாயம் தானா?
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கே முதலில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது கலிமா "லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என்பதே அல்லாமல் "லாயிலாஹ இல்லல்லாஹ், உமர் ரஸுலுல்லாஹ்" அன்று. நிச்சயமாக உமர்(ரழி) அல்லாஹ்வின் ரஸுல் அல்லர். நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் இப்படித்தான் நடந்தார்கள் என்பது தெளிவாக இருந்தால், அதை விட்டுவிட்டு நாம் வேறு யாரையும் பின்பற்ற மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் "எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷித்தீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று சொல்லியிருக்கிறார்களே, என்று யாராவது கேட்டால் அதற்குரிய பதிலாவது,நபி(ஸல்) அவர்கள்"எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று தனது சுன்னத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் சொல்லி இருக்கிறார்களே அல்லாமல், "எனது சுன்னத்தை விட்டுவிட்டு, எனது குலபாயே ராஸிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்" என்றோ, "எனது சுன்னத்திற்கு மாற்றமாக எனது குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்," என்றோ சொல்லவில்லை.
இப்படிச் சொல்லி இருந்தால் நபி(ஸல்) அவர்களின் 11 ரகஅத்தை விட்டு விட்டு உமர்(ரழி) அவர்களின் சுன்னத் (அப்படிச் சொல்லப்படுகிறது, உண்மை அல்ல) 23 ரகஅத்தை எடுத்துக் கொள்ளலாம்.அப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ளபடி நடப்பதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் எத்தனை ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது தெளிவில்லாமல் இருந்தால் மட்டுமே, உமர்(ரழி) அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
அதாவது ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்தால் மட்டுமே, குலபாயே ராஷிதீன்கள் சுன்னத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்பது தெளிவாக இருக்கும் போது, அந்த விஷயத்தில் குலபாயே ராஷித்தீன்களின் சுன்னத்திற்கு இடமே இல்லை. அதுவும் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்து என்று சொல்வதிலிருந்து ஆட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தை அமுல்படுத்துவதில் காலத்திற்குக் காலம் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்கும் விஷயங்களிலும், இது சாத்தியமே அல்லாமல், வணக்க வழிபாடு அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகும்.
காரணம் வணக்க வழிபாடுகளை விதிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். நபி(ஸல்) அவர்களுக்கும் இதில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நபி(ஸல்) மார்க்க உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்னும் உண்மையை, குர்ஆனின் பல வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. (3:20, 5:92, 5:99, 16:35, 16:82, 24:54, 29:18, 6:17, 69:44) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வோடு வஹியின் தொடர்போடு இருந்ததனால் இது சாத்தியமாயிற்று.குலபாயே ராஷிதீன்கள் வஹியின் தொடர்புடையவர்கள் அல்லர். ஆகவே குலபாயே ராஷிதீன்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் உட்பட்டே இருந்திருக்க வேண்டும். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான முடிவுகளை ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்ய நேரிட்ட போது குர்ஆனைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் அவர்கள் திருத்தப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது, அதை மறுத்த உமர்(ரழி) அவர்களின் கூற்று குர்ஆனின் வசனங்களைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஹர் தொகையை மட்டுப்படுத்தி ஆணை பிறப்பித்த போது, ஒரு சாதாரண பெண்மணியால் குர்ஆன் வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. இதுபோல் அவர்கள் செய்த தீர்ப்புக்களில் சில, உண்மையான ஹதீதுகள் கொண்டு நிராகரிக்கப்பட்டன. உதுமான்(ரழி), அலி(ரழி) இவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிச்சில சம்பவங்கள் நடைபெற்று குர்ஆன், ஹதீதைக் கொண்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் விபரம் இங்கே தரப்படவில்லை.
தவறுவது மனித இயல்புஇந்தச் சம்பவங்கள் அனைத்தும் குலபாயே ராஷிதீன்களோ, ஸஹாபாக்களோ, இமாம்களோ, மற்றும் பெரியார்களோ, குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக மார்க்கத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்ற மாபெரும் உண்மையை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
இப்படி நாம் எழுதிய மாத்திரத்தில், முன் சென்ற பெரியார்களை நாம் அவமதிப்பதாகவும், எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இமாம்களெல்லாம் தவறு செய்திருப்பார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர். அப்படியானால் இமாம்களெல்லாம் தவறே செய்யாதவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனரா? இந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய குற்றம் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. தவறே செய்யாத தனித்தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவனுக்குச் சொந்தமான தனித் தன்மையை இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், இமாம்களை அல்லாஹ்வாக்குகின்றனர்.
மரணிக்காதவன் என்ற, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனித்தன்மையை உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்கியபோது, அபூபக்கர்(ரழி) அவர்கள் "யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்து விட்டார்" என்று அறிவித்ததன் மூலம், அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனித்தன்மையை மனிதர்களுக்குக் கொடுப்பதை வணக்கம் என்றே குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த அடிப்படையில், இமாம்கள் தவறே செய்யதவர்கள் என்று நம்புகிறவர்கள் இமாம்களை வணங்குகிறார்கள் என்றே பொருள். காரணம் தவறே செய்யாத தனித் தன்மையை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை. அவர்களிலும் சில அசம்பாவிதங்களை இடம் பெறச் செய்து அவற்றை வஹி மூலம் திருத்துவது கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டியதோடு, அந்தத் தவறே செய்யாத தனித்தன்மை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை நிலை நாட்டியிருக்கிறான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் அப்படிச் சில சம்பவங்கள் இடம் பெற்று, அல்லாஹ் திருத்தியுள்ள வசனங்களை இன்று நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை. "ஆதம்(அலை) தவறு செய்தார். ஆதமுடைய மக்களும் தவறு செய்பவர்களே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தெளபா செய்பவர்கள்" என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கும் இதைத் தெளிவுபடுத்துகின்றது. நபிமார்களுக்கே சொந்தப் படுத்தப்படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அந்தத் தனித்தன்மையை குலபாயே ராஷிதீன்களுக்கோ, ஸஹாபாக்களுக்கோ, இமாம்களுக்கோ, நாம் சொந்தப்படுத்த முடியுமா என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்! ஒரு போதும் முடியாது. ஆகவே குர்ஆனுக்கோ, ஹதீதுகளுக்கோ மாற்றமாக யாருடைய சொல் இருந்தாலும், அதைவிட்டுவிட்டு குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுவதே நேர்வழி நடப்பதாகும். குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக நேர்வழி நடந்த யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே நம்ப வேண்டும்.
இந்த அடிப்படையில், 23 ரகஅத் ரமலான் தொழுகை உமர்(ரழி) அவர்கள் தொழுதிருக்க மாட்டார்கள். தொழ வைக்கக் கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே உமர்(ரழி) செய்திருந்தால், நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார்கள். மனித இயல்பின் காரணமாக நடந்த அசம்பாவிதமாக இருக்கும் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்களையே பின்பற்றி 11 ரகஅத் தொழுவதே சிறப்பாகும்.
பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மார்க்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை இந்த இதழில் காண்போம்.
பழமையை, நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்தள்ளது. ஷைத்தான், உண்மைக்கு முரணாணதை மக்கள் மனங்களில் விதைத்துவிடுகிறான். மக்களும் அவற்றில் முழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் "அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை" என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர் வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்தது.
இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைதான் அவர்களை, குர்ஆன் ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.உதாரணமாக "பராஅத்" இரவின் விசேஷ அமல்கள் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதும், பலவீனமானதுமாகும்" என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காண முடிகின்றது.
இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், "பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன்வருவதில்லை.மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த, மனப்பான்மையை மேலும் வளாத்தனர். 'கோயபல்ஸ்' தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று நம்ப வைத்தனர்.
வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே என்ற பெயரால், மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில், பாமர மக்களிடையே இந்த பலவீனமான, இட்டக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு, குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை, இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட, இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால், உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும், இன்றும் இதே நிலை தான்.மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எண்ணிய முஸ்லிம்(?) மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சாரங்கள் நடந்தாலும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும், அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிரான முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர்.
உலக ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட போலி அறிஞர்களுக்கு உதவி, அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைகொண்டு இந்தப் போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டபட்டவைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருக்கொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யென தோன்றியதற்கான காரணங்களாகும்.
நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலிபாக்களின் காலத்தில் இது போன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலை தூக்க அவர்கள் இடம் தரவே இல்லை.நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஒரு மரத்தடியில் உறுதி மொழி வாங்கினார்கள். உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரம் புனிதமாகக் கருதப்பட்டு சடங்குகள் பல அங்கே நடப்பது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ஊடனே அந்த மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்கள். அந்தத் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.அலி(ரழி) அவர்கள் காலத்தில் அலி(ரழி) பற்றி ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைக்கப்பட்டபோது , உடனே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு, அவை அத்தனையும் பொய் என்று தெளிவு படுத்தினார்கள்.குர்ஆனையும், உண்மையான ஹதீஸ்களையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள். அநாச்சாரங்கள்,பொய்கள் தலைதூக்கவிடாமல் காத்தார்கள். தங்களிடமே ஒரு தவறு நிகழ்ந்து, சாதாரண குடிமகன் சுட்டிக் காட்டினாலும், உடனே தங்களைத் திருத்திக் கொண்டார்கள்.
இந்த நேர்மை மனப்பான்மை பிற்காலத்தில் ஆட்சி நடத்திய மன்னர்களிடம் காணப்படாததால், பொய்யான ஹதீஸ்கள் தனது ஆட்சியை நடத்தின. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.மக்கள் மனப்பான்மை, உலமாக்கள், சிலரின் சுயநலப் போக்கு மன்னர்களின் பதவி ஆசை, இவை தான் போலி ஹதீஸ்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் மகத்தான இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணங்களாகும்.
பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.
ஹதீதுகளை நாங்களாக எங்கள் இஷ்டத்திற்கு லயீஃப் என்றும் கூறி வருகிறோம் என்று பரவலாக எங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தது. ஆகவே லயீஃப் மவ்லுஃ ஹதீதுகளின் நிலையையும் எங்களது உண்மையான நிலையையும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவே இத்தொடரை ஆரம்பித்தோம்.
ஹதீதுகள் சம்பந்நதப்பட்ட முழு விவரங்களையும் தெளிவாக அறியத் தருமாறு வாசகர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அடுத்த இதழில் 'நபிமொழி வரலாறு' என்ற தொடரில் மெளலவி S. கமாலுத்தீன் மதனி அவர்கள் அவற்றின் விவரங்களைத் தர இருக்கிறார்கள். ஆனவே நாம் இது வரை எழுதி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுக்குள் கொண்டு வந்து இந்தத் தொடரை முற்றுப் பெறச் செய்கிறோம்.
மீண்டும் பார்ப்போம்
1) பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. அவையே சமுதாயத்தில் அதிகம் உலா வருகின்றன.
2) ஆயினும் அவை அறிஞர்களால் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, 1000 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு இனம் காட்டப்பட்டுள்ளன.
3) அவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அறிஞர்கள் அந்த பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைத் தங்கள் நூல்களில் இடம் பெறச் செய்தனர். ஆனால் உலக ஆதாயம் தேடுவோர் அவை தவறானவை என்பதை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பி வந்தார்கள்.
4) பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளை வைத்துக் கண்டிப்பாக அமல்கள் செய்யக்கூடாது.
5) மார்க்கத்தில் கூட்டிக் குறைக்க உள்ள அதிகாரம், அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தமான தனி அதிகாரம் ஆகும். நபிமார்களுக்கும் அதில் பங்கு கொடுக்கப்படவில்லை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டி இருந்தோம்.
6) நாங்கள் பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் என்று எடுத்துக் காட்டுபவை அனைத்தும் 1000 வருடங்களுக்கு முன்பே அறிஞர் பெருமக்களால் தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அந்தக் கிதாபுகளை புரட்டிப் பார்த்து உண்மையை உணாந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) அவனால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் அதாவது அல்குர்ஆனையும், அவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளையும் (இது வஹியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும்), அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இம்மூன்றாலும் நிலைநாட்டப்பட்டவற்றையும் மட்டுமே மார்க்கமாக ஏற்றுக் செயல்படும் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்மை சேர்த்து வைப்பானாக. ஆமீன்.
முற்றும்
அந்நஜாத் 1986
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
j



ஸஃபருல் முழஃப்பர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.
அவர்கள் தமக்கு அல்லாஹ்வின் சொல்லையும், அவனது ரசூலின் வார்த்தைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதிருக்க, தவறுகள் மலிந்து காணப்படும் அரபுத் தழிழ் கிதாபுகளை ஆதாரம் காட்டி பின்வருமாறு அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது வருடத்திற்கு 1,24,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும், அவை ஒட்டு மொத்தமாக ஒடுக்கத்து புதனன்றுதான் இறங்குகின்றன என்றும், அதற்குப் பரிகாரமாக குர்ஆனில் குறிப்பிட்ட சில வசனங்களை ஒரு தட்டையில் எழுதி கரைத்துக் குடித்து விட்டால் அவை நம்மை வந்தணுகாது என்கிறார்கள்.
வேறு சிலரோ, அல்லாஹ் “ஆது” கூட்டத்தாரை புதன்கிழமை அன்று தான் பலமான காற்றை விட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி “அய்யாமின்னஹிஸாத்தின்” (பீடை நாட்களில்….) என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் பீடை நாள் என்று கூறுகிறோம் என்கிறார்கள். வேறு சிலரோ, நமது நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதத்தில் தான் சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் இதைப் பீடை மாதமென்று கூறுகிறோம் என்று அனைவரும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
வல்ல அல்லாஹ் ஆது கூட்டத்தாரை ஷவ்வால் மாதத்தின் இறுதி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை முடிய ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றை அனுப்பி, அவர்கள் செய்த அநியாயம் அக்கிரமத்திற்குத் தண்டனையாக அழித்து, நாசமாக்கினான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய “ஹுது”(அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான்.அல்லாஹ் அவர்களை ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் அழித்து நாசமாக்கியதற்கும், அதன் பெயரால் இவர்கள் ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் இஸ்லாத்தைப் போட்டு நாசமாக்குவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தில் சுகக்குறைவு ஏற்பட்டதினால், அம்மாதம் பீடைமாதமென்று கூற முற்பட்டால், நபி(ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் மாத்திரம் தானா சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது? அது அல்லாத எத்தனையோ மாதங்களிலும் சுகக்குறைவு ஏற்படத்தானே செய்திருக்கிறது? அதனால் வேறு பல மாதங்களையும் பீடை மாதங்கள் என சொல்ல வேண்டியதாகி விடுமே!குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே பீடை பிடித்த மாதம் எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அம்மாதத்தில் தானே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகியுமிருக்கிறார்கள். எனவே காலம் பொதுவானது. அது நல்லது, தீயது என அவரவர் செயல்களைப் பொறுத்தே அமைகிறதே அன்றி, வெறுமனே ஒரு மாதம் ஒரு நாள் அனைவருக்கும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைவது கிடையாது.
இதோ, இம்மாதம் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதொரு ஹதீஸைக் காண்போம். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொற்று நோய் என்று ஏதுவுமில்லை என்றும் அவ்வாறே ஆந்தையின் சப்தத்தால் ஆவப்போவதொன்றுமில்லை. எனவே (மற்றொரு அறிவிப்பில் பறவை, மான், பூனை முதலியவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் குறுக்கே செல்வதால் நலமோ, இடரோ விளைவதில்லை) என்றும், அதுபோன்ற ஸஃபர் மாதத்தாலும் நடக்கப் போவதொன்றுமில்லை என்றும் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மானைப் போன்று (ஒரு வியாதி கூட ஏற்பட்டிருக்காத) ஓர் ஒட்டகை சொரி பிடித்த வேறொரு ஒட்டகையுடன் சிறிது காலம் சேர்ந்து பழகி விட்டால் அச்சொரி இதனையும் பற்றிக் கொள்கிறதே என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (விஷயம் அவ்வாறென்றால்) முதன் முதலாகச் சொரி ஏற்பட்ட அந்த ஒட்டகைக்குச் சொரியை ஒட்டி விட்டவர் யார்? என்று கேட்டார்கள் (புகாரி)
மேற்காணும் ஹதீஸில் , நபி(ஸல்) அவர்கள், அக்கால மக்களிடையே ஆழமாய்ப் பதிந்து கிடந்த மூன்று மூடநம்பிக்கைகளைக் களைந்துள்ளார்கள்; அவையாவன:1) குறிப்பிட்ட சில வியாதிகளுக்குப் பிறரைத் தொற்றிக் கொள்ளும் சக்தியுண்டு.2) ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும்.3) ஷஃபர் மாதம் வந்துவிட்டால் அதன் வருகையால் பொதுவாக மக்கள் அனைவருக்கும் கஷ்டம் ஏற்படும்.ஆகவே நபி(ஸல்) அவர்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல அல்லாஹ்விடம், அனைத்து ஆதிக்கமும் இருக்கும் பொழுது, சுயமே அவனது நாட்டமின்றி, கேவலம் ஒரு மாதத்தின் வருகையோ, ஓர் ஆந்தையின் சப்தமோ, அடுத்தவனிடமுள்ள ஒரு நோயோ பிறரை எதுவும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை எடுத்துணர்த்தியுள்ளார்கள்.பொதுவாக அல்லாஹ்வை அன்றி மற்றெவராலும், அவர்கள் மலக்குகளாகட்டும், நபிமார்களாகட்டும், வேறு இறைநேசச் செல்வர்களாகட்டும், இவ்வுலகத்தில் ஒரு துரும்பையேனும் ஆட்டவோ அல்லது ஆடும் ஒன்றை அமைதிப்படுத்தவோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் முடியவே முடியாது. காரணத்தை இதோ திருமறை கூறுகிறது: “பியதிஹீ-மலக்கூத்து - குல்லி - ஸைஃ” அவனது கரத்திலேயே அனைத்துப் பொருட்களின் ஆதிக்கமுமிருக்கிறது.ஆதிக்கமனைத்தும் இருக்க வேண்டியவனிடத்தில் ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கும் பொழுது, யாராலும், எதுவாலும், எதுவும் நடக்காது.
உண்மைநிலை இவ்வாறிருக்க, இவர்களாகவே ஒடுக்கத்து புதன் என்று ஒன்றை உண்டுபண்ணிக் கொண்டு, அதில் பலாமுஸீபத்துகள் இறங்குவதாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி இவர்களாவே கற்பனை செய்துகொண்டு, அவை தம்மை வந்தணுகாமலிருப்பதாக, நபருக்கிரண்டு மா இலைகளாம்! ஆயத்துகள் எழுதப்பட்டவைகளாம்! ருபாய்க்கு இரண்டாம், தலைக்கும் உடம்பிற்கும் தேய்த்துக் குளிக்க ஒன்றாம்! குளித்து விட்டு, கரைத்துக் குடிக்க ஒன்றாம்! அவ்வாறு செய்து விட்டால் அன்றைக்கிறங்கும் அனைத்து முஸீபத்துகளும் அடியோடு போய்விடுமாம்! இப்படி கதையளக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அந்த பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.
இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலமிகளால், சமுதாயப் புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையே அன்றி, உண்மையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறெல்லாம் எதுவுமேயில்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு இவை போன்றவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்பதை அநேகர் உணர்ந்து கொண்டு, குர்ஆன் ஹதீஸ்களுக்குப் புறம்பாக கப்ஸா விடுவோர், கதைளயப்போரின் பக்கம், கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டதால், மேற்கூறிய மூடப்பழக்க வழக்கமெல்லாம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.அநேக ஊர்களில் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிக்கும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. எத்தனை காலம் தான் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பார்கள். ஏமாறுவோர் இருந்தால் தானே ஏமாற்றுவோர் இருக்க முடியும்?
இன்றைக்கு ஓரளவேனும் குர்ஆன் ஹதீஸ்களை மக்கள் சிந்திக்கத் துவங்கியதன் பயனாக மூட நம்பிக்கை, தீய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பேரருளால் இந்நிலை நீடிக்கும் பொழுது, இம்மூட நம்பிக்கைகள் எல்லாம் ஓடி மறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.இத்தகைய மூடப் பழக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
மேலதிக விபரங்களுக்கு: http://tamilnadumuslims.blogspot.com/
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.நடை மவ்லிது, விடி மவ்லிது நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,மாயமந்திரங்கள் பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!போலிகளிடம் ஏமாறாதீர்!இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
மரணச் சடங்குகளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்
அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!பக்கவாத்தியங்கள்இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி 'பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா' என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர்.
பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?விஞ்ஞானயுகத்தில் கற்காலம்விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்!
நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக!
இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
'முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? 'முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?''
அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.' (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,'யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!' (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி, சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்' இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
மேலதிக கட்டுரைகளுக்கு: http://tamilnadumuslims.blogspot.com/