இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
இன்று இஸ்லாமியர்கள் மத்தியிலே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புத்தகங்களில் அதிகமானவை இஸ்லாம் என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டு இஸ்லாமிய விரோதப் புத்தகங்களாகத்தான் இருக்கின்றன.
சல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரீனும் மட்டுமல்ல இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோரால் பெருமதிப்பு மிக்கதாக மதிக்கப்படும் எத்தனையோ புத்தகங்கள் இஸ்லாத்தில் சேறு பூசுவதற்காகவே புறப்பட்டவைதான்.
ரவ்ளா ஷரீபில் கனவில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஸலவாத்து, நெருப்பு ஸலவாத்து(ஸலாத்து நாரியா), பெரியார்களின் சம்வங்கள் மூலம் பெரியார் பூசைக்கான புத்தகங்கள். இப்படி இன்னோரன்ன கதைகள். இவர்களெல்லாம் தனக்குத் தாமே வேறு 'மௌலானாக்கள்' என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். விலை போவதற்கு அவைதான் ஷரத்துக்கள்!
மன்ஸில் என்ற பெயர்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனிதனின் மார்க்கமாகப் பொருந்திக் கொண்ட இஸ்லாத்தின் முழுமுதல் வேதப் புத்தகத்திற்கு 'அல்-குர்ஆன்' என்ற பெயரை அழகாகக் சூட்டியிருக்கிறான். இவர்கள் அந்தப் பெயருக்குச் சவாலாக 'மன்ஸில்' என்று சூட்டியிருக்கிறார்கள். இந்த வழிகேடர்கள் தானும் கெட்டு அப்பாவி பாமர மக்களையும் வழிகேட்டிலாக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் ஏழாண்டுகள் அரபி மத்ரஸாக்களில் கல்வி கற்றார்களா?
அல்-குர்ஆனின் சில அத்தியாயங்களை அச்சிட்டு அதற்கு முன்னும் பின்னும் ஓதுவதற்கென்று குர்ஆனல்லாத சிலதையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அல்-குர்ஆனை விட இதைத்ததான் இன்றைய முஸ்லிம்களில் பலர் வைத்துக் கொண்டு பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கு விளக்கம் கேட்டால் இதை ஊக்குவிப்பவர்கள் சொல்லும் காரணம் குர்ஆனை வுளு இல்லாமல் தொடக்கூடாது, ஆகவே, குர்ஆன் வசனங்களைவிட அதிகமாக ஸலவாத்துக்கள், துஆக்கள் என்று வேறு சிலவற்றை அச்சிட்டு வுளு இல்லாமல் தொடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று காரணம் சொல்கிறார்கள்.
அறியாமைக்கும் ஓர் அளவுண்டு! மனிதன் தேவையில்லாமல் போட்டுக் கொண்ட சட்டம் எப்படி வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமல் இருக்கிறது என்பதையாவது சிந்திக்க வேண்டாமா? அந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பார்க்க வேண்டாமா?அல்லாஹ்வின் அறிவுக்கே சவால் விடும் இந்த ஏழுவருட வகுப்புகளுக்குச் சென்று வந்த அறிஞர்கள் அல்-குர்ஆனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு பாத்திஹா ஓதி சம்பாதிப்பதற்காகவா இந்தக் குர்ஆன் அருளப்பட்டது? மரண வீடுகளில் ஓதி இறந்தோருக்குச் சாட்டுவதற்காகவா இந்தக் குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கப்பட்டது? அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போது மன்ஸில் என்றொன்றைத் தொடங்கி 'சொற்பக் கிரயத்திற்கு' விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் பார்க்கும் போது மேலெடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ் இந்தக் காலத்திற்கு எவ்வளவு பொருத்தமாகவுள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரக்கூடியதாயிருக்கும்.
இப்படிப்பட்ட திருகுதாளங்கள் செய்து மக்களை வழிகெடுப்பதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. அப்படிப்பட்ட பித்ஆக்களுக்கு வழிகாட்டுவதிலிருந்தும் அவற்றைச் செய்வதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொண்டோமானால் அதுவே சுட்டெரிக்கும் கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இன்ஷா அல்லாஹ் ஒரு காரணியாகவிருக்கும்.வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை
நன்றி: தமிழ் முஸ்லிம்.காம்