DSC00372 (1)DSC00368DSC00370 
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெற்றுவரும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 15.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் இணைவைப்பின் விளைவுகளை விளக்கி பேசினார்கள். மேலும், கந்தூரி திருவிழா ஊர்வலம் உங்கள் பகுதியில் வரும் போது அதை நீங்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கக்கூடியவர்களும் கலந்துகொண்டு, தவ்ஹீத் ஜமாத்தின் இந்த பணியை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது..
நன்றி-www. tntj.net
இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
கெட்ட நாள் உண்டா?
காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
மாற்று மதக் கலாச்சாரம்
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

சஃபர் மாதத்தில் TNTJ வின் அனைத்து கிளைகளிலும் இதை நோட்டிஸாக அடித்து விநியோகம் செய்யவும்.
நன்றி- tntj.net

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ 5: 8
5: 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா ?
தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் !
யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் ?
கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
பத்திரிகையாளர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் தங்கள் பத்திரிகையின் முன்பக்கம், நடுப்பக்கம், கடைசிப்பக்கத்தில் கவர்ச்சி படங்களை இட்டு காசாக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தொலைகாட்சியாளர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் சினிமா, சீரியல், தலுக்கு குலுக்கு நடணங்கள், மானாட மயிலாடப் போன்ற ( மயிர் கூச்செரியும்) இன்னும்பிற நிகழ்ச்சிகள் வரை ஆபாசங்களையும், அந்தரங்க சமாச்சாரங்களையும் அரங்கேற்றுவதற்கு கோடம்பாக்கம் வெறிச்சோடிப்போய் விட்டால் தங்களது தொலைகாட்சிகளை இயக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அழகிப் போட்டி நடத்தும் சேடிஷ்டுகள்.
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் அழகிப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் தேர்தெடுக்கப்படும் அழகி(?)களை விளம்பரங்களில் நடிக்கவைத்தும், அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சப்ளை செய்து கோடிகளை உண்டாக்க முடியாத நிலை ஏற்படும்.
நட்சத்திர ஹோட்டல் குபேரர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காக வருகை தரும் விஐபி, மற்றும் தொழில் அதிபர்களுக்கு மஸாஜ் செய்து விட்டும், பார்களில் ஊற்றிக் கொடுத்தும், பிரம்மாண்டமான அரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்வித்து கத்தை கத்தையாக கரன்சிகளை கரக்கச் செய்வதற்கு பெண்கள் கிடைக்கா விட்டால் நட்சத்திர அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும்.
அவ்வாறான ஒரு நிலை உருவானால் பெண்களை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களது கேளிக்கை நிருவனங்களை அவர்களது குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தூக்கி நிருத்த முன் வர மாட்டார்கள். இந்த சேடிஷ்டுகள் ஊரான் பெற்றப்பிள்ளைகளைக் கொண்டு தான் அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் கடைவிரித்து காசு பண்ணுவார்கள்.
அதனால் மேற்காணும் சதை வியாபாரிகளே அதிகபட்சம் பெண்களின் பாதுகாப்பு பர்தா சம்மந்தமான சர்ச்சைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகைவதைக் கண்டால் வீறு கொண்டெழுந்து அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
அதில் ஒன்று தான் சமீபத்திய விஜய் டிவி புர்கா அணிந்து பெண்கள் வெளியில் செல்வதை கொச்சைப் படுத்தும் விதமாக நடத்தவிருந்த நீயா ? நானா ? போட்டி சரியான தருணத்தில் தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவித்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
இன்னும் சில கடவுள் மறுப்பாளர்களும், இஸ்லாமிய விரோதிகளும் நடத்தும் ஊடகத்திலும், இனையத்திலும் பர்தா சம்மந்தமான சர்ச்சைகைள் எழும்போது இதுப்போன்ற போட்டோக்களை மட்டும் இட்டு மதவெறியையும், கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்தி குதூகலம் அடைவார்கள் ஹிஜாப் எங்கள் உரிமை எனறு வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருக்கிறது. இதுப் போன்ற போட்டோக்கள் எல்லாம் அவர்களுடைய மதவெறிப் பார்வையில் படாது உலகம் முழுவதிலும் முஸ்லிம் பெண்கள் இது மாதிரியே நடப்பதுப் போன்றும் சித்திரிப்பார்கள். குறுகிய வட்டத்திற்குள் முடங்கி கிடக்கும் குறுமதியாளர்கள்.
நடந்தது என்ன ?
ஃபிரான்ஸில் ஒருக் கல்லூரி நிர்வாகம் முகத்தை மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம் பெண்களுக்கு தடை விதித்தார்கள். இதே புர்கா அணிந்து கொண்டு வரக் கூடாது என்ற தடையை விதித்திருந்தால் இது போன்ற பல தடைகளை அதே ஃபிரான்ஸிலும், இன்னும் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டில் இயங்கும் சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் போராடி உடைத்தெறிந்திருக்கின்றன அதேப் போன்று இதையும் உடைத்தெறிய ஃப்ரான்ஸில் இயங்கும் முஸ்லீம் அமைப்புகள் போதுமானது.  
பல சமுதாயத்தவர்களும் இணைந்துப் போராடி சுதந்திரம் பெற்ற இந்திய ஜனநாயக நாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதுமாதிரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மதம் சார்ந்த பிரச்சனைகள் எழும்போது அதில் நியாய, அநியாய அடிப்படையில் தங்களது ஊடகங்களில் பதிய வேண்டும், இல்லை என்றால் கோடம்பாக்கத்தையே உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
கற்பழிப்புக்கான காரணம் ?
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான காதல் அதிசயம் என்றான் சினிமாக் கவிஞன்.
கல் தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான கற்பழிப்பு அதிசயம் என்பதே உண்மை.
இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் 1929ல் எட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டமியிற்றினார்கள் எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களை கற்பழிப்பது குற்றமில்லை எனும் அளவுக்கு தொன்மை வாய்ந்தது இந்தியாவின் கற்பழிப்பு நிகழ்வுகள். 
சமீபத்தில் தலைநகர் டெல்லியை குலுக்கும் தொடர் கற்பழிப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனால் மற்ற மாநிலங்களில் கற்பழிப்புகள் இல்லை என்றோ, அல்லது குறைவு என்றோ கருதிடக்கூடாது. இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்தப் படுகிறாள் என்றும், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப் படுகிறாள் என்றும் போலீஸ் தகவல் அறிக்கைக் கூறுகிறது. பாராளுமன்றம் இயங்கும் தலைநகரில் லட்சனம் பாரீர் எனும் தொனியில் தலைப்புக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டது அவ்வளவு தான்.
மேல்படி அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.
மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா  ?
புர்காவே பாதுகாப்பு என்பதற்கு இன்னும் ஆதாரங்கள்
ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். ( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )
மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதால் அழகலங்காரத்தை முதலில் தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவேச் செய்தன இறுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுக்கமான உடைகள் அணிந்து வருவதே சக ஆண் ஊழியர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அறிந்தவர்கள் உடம்பை மறைக்கும் புர்கா அணிந்து வர சட்டமியற்றினர்.
சிறகடித்துப் பறக்கும் பருவத்தில் அதன் சிறகொடித்து பூட்டியக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பறவைப் போல் படித்துக் கொண்டிருக்க கூடிய 17 வயது பிஞ்சுப் பருவத்து இளம் மொட்டொன்று சமீபத்தில் காமுகன் ஒருவனால் கசக்கிப் பிழிந்து முதியோர் காப்பகத்தில் வீசி எறியப்பட்டதற்கு எது காரணம் ?
கீழ்காணுமாறு புர்கா அணிந்து கொண்டு கண்ணியமாக அமர்ந்து பாடம் படித்திருந்தால் காமுக ஆசிரியர்களின் பார்வை கண்ட இடங்களிலும் பட்டு இந்நிலை உருவாகி இருக்குமா ?
பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே  யதார்த்த நிலை.
Ø  பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று தினமனி கதிரில் (4-4-99ல்) பெருமூச்சு விட்டிருந்தார் ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.
ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது.
Ø  24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300
மேற்காணும் திருமறைக் குர்ஆனில் பெண்களுக்கு சொல்லப்பட்ட ரத்தின சுருக்கமான கட்டளைகளை அவர்கள் பேணிக் கொண்டால் கற்பழிப்புகள், மற்றும் கள்ளக்காதல்களின் வாசல் கதவுகள் நிரந்தரமாக இழுத்து தாழிடப்படும்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதுவே எங்களுக்கு பாதுகாப்பு அதனால் புர்கா அணிந்து கொண்டே  வெளியில் செல்வோம், புர்கா அணிந்து கொண்டே கல்லூரிக்கு செல்வோம் எங்கள் உரிமையில் கை வைக்காதே என்று புர்கா அணியச் செய்வது முஸ்லீம் பெண்களின் மீது இழைக்கப்படும் அநீதி என்று ஓநாய்கள் அழுத பொழுது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் முஸ்லீம் பெண்கள்.
இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் கற்பழிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியாதக் காரணத்தால் இறுதியாக அத்வானி அவர்கள் கற்பழிப்புகளுக்கு ( இஸ்லாமிய ) மரண தண்டனையே சரியானத் தீர்வு என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கற்பழிப்புகள்.
கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக்கிய இஸ்லாம் கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.
பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்.
ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா ? அவர்கள் மனித இனமா ? என்ற ஆய்வை ஆணினம் மேற்கொண்ட பொழுது உனது ஆய்வை நிருத்திக்கொள் அவர்களும் உன்னைப் போன்ற மனித இனமே உன்னிலிருந்தே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றுக் கூறி அவர்களுடைய ஆய்விற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். 49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 
படைப்பாளன் அல்லாஹ்வே என்பதற்கு அல்லாஹ்வின் வாக்குகள் அடங்கிய ஆண் பென் இரு சாராருக்கும் மத்தியில் பாரபட்சம் காட்டாத மேற்காணும் திருமறைக்குர்ஆனின்; வசங்கள் மிகப் பெரிய ஆதாரம். 
5: 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


சந்ததியற்றுப்போன ஜலீல் முஹைதீன்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் சில வாசகங்கள் விடுபட்டு, அல்லது மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் ஒப்பீட்டாய்வின் மூலம் திருத்தப்பட்டுமுள்ளன. அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தை அறியாத அறிவிலிகளும் சுயநலவாதிகளும் ஹதீஸ் என்ற பெயரில் போலியான செய்திகளை இட்டுக்கட்டி நபியவர்களின் பெயரில் பரப்பினர்.
இவ்வாறு பரப்பப்பட்ட ‘மவ்ழூ’ஆன (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களின் விபரமும் திறணாய்வுக்கலை அறிஞர்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டன. எனினும் ஹதீஸ் கலையுடன் அதிக தொடர்பு அற்ற உலமாக்கள் தமது உரைகளுக்கு அழகு சேர்ப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு அறிவிப்புக்களை மக்கள் மத்தியில் பரப்பி அவற்றுக்கு ஒரு பிரபலத்தையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
‘என்மீது யார் நான் கூறாததை வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறுகின்றாரோ அவர்; தனது தங்குமிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்’ என்ற கருத்தில் வந்துள்ள ஏராளமான அறிவிப்புக்கள் குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை.
‘ராவிகள்’ எனப்படும் ஐந்து இலட்சம் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் வாழ்வை ஆராய்ந்து ‘இட்டுக்கட்டப்பட்டன’ என இமாம்கள் ஒதுக்கி இருப்பவற்றை நாம் மீண்டும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோமே என்ற கவலையும் இவர்களுக்கில்லை.
இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்கள் மன்றத்தில் பரவி பல்வேறுபட்ட சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அகீதா ரீதியிலான சீரழிவுகள்:
இஸ்லாமிய அடிப்படையான அகீதாவுக்கே வேட்டுவைக்கும் பல்வேறு போலி ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. இஸ்லாமிய அகீதாவுக்கு நேர் முரணான அத்வைத, சிந்தனைகளைப் பேசுவோரும் தமது வாதத்திற்குப் பல்வேறுபட்ட போலி ஹதீஸ்களையே ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.
‘யார் தன்னை அறிந்து கொண்டானோ அவன் தனது இரட்சகனை அறிந்து கொண்டான்’
இது எத்தகைய அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அறிஞர் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது ‘தய்லுல் மவ்ழூஆத்’ எனும் நூலிலும் (263), ஷெய்க் முல்லா அலிகாரி(ரஹ்) தனது ‘மவ்ழூஆத்’எனும் நூலிலும் இதை இடம்பெறச் செய்துள்ளனர்.
இவ்வாறே ‘நான் அறியப்படாத பொக்கிஷமாக, புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனது படைப்புக்களைப் படைத்தேன்’ என அல்லாஹ் கூறுவதாக இடம்பெறும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியும், அத்வைதம் பேசுபவர்களால் பெரிதும் ஆதாரமாக எடுத்துப் பேசப்படுகின்றது. ஆனால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். (பார்க்க : ஸில்ஸிலதுல் அஹாதீதுல் ழயீபா வல்மவ்ழூஆ, எண்: 66)
இவ்வாறே, ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டதாக வாதிட்டு, ‘காதியானி’ மதத்தை தோற்றுவித்த மிர்சா குலாம் அஹ்மத் எனும் பொய்யனைக் காதியானிகள், மஹ்தியாகவும், மஸீஹாகவும் சித்தரிக்கின்றனர். இவர்கள் தமது தவறான வாதத்திற்கு ‘ஈஸா(அலை) அன்றி மஹ்தி வேறில்லை’ என்ற இப்னுமாஜாவில் இடம்பெறும் ஹதீஸையே எடுத்து வைத்துள்ளனர். இது ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள அறிவிப்பாகும். இமாம் இப்னுல் கையும் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தமது ‘அல்வாஹியாத்’ என்ற நூலிலும் (1447) அறிஞர் ஷெளகானி தமது ‘அஹாதீதுல் மவ்லுஆத்’ என்ற நூலிலும் இடம்பெறச் செய்து இதன் போலித் தன்மையைத் தெளிவுபடுத்தியுள்ளனர். (பார்க்க: ஸில்ஸிலா 1ஃ175-176, எண்: 77)
தவஸ்ஸுல்:
அல்லாஹ்விடம் நாம் நேரடியாகவே பிரார்த்திக்க வேண்டும். இந்த அமைப்பில்தான் அல்குர்ஆனில் இடம்பெறும் அனைத்து துஆக்களும் அமைந்துள்ளன. ஆனால் சிலர் அன்பியாக்கள், அவ்லியாக்கள் பொருட்டால் பிரார்த்திக்கின்றனர். இந்த வழிகெட்ட நிலை தோன்றுவதற்கும் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்களே காரணமாக அமைந்தன.
‘என் பொருட்டால் நீங்கள் வஸீலாக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ்விடத்தில் எனது அந்தஸ்த்து மகத்துவமானதாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எவ்வித அடிப்படையும் இல்லாத போலி ஹதீஸ் ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டார்கள் என்கின்ற அல்குர்ஆனுக்கு முரணான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பும் ‘பொருட்டால்’ பிரார்த்திப்பதற்கான வலுவான ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மக்கள் மத்தியில் இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்தித்தல், அவர்களுடைய நினைவு தினங்களைக் கொண்டாடுதல், அதனை ஒட்டி கந்தூரிகள், நேர்ச்சைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான செயல்பாடுகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
சுன்னா – மறுப்பு:
கடந்த காலத்தில் சில தனிப்பட்ட சிலரும், நவீன காலத்தில் சில குழுக்களும் சுன்னாவைப் பின்பற்ற முடியாது; குர்ஆன் ஒன்றே போதும் என்று வாதிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை அஹ்லுல் குர்ஆன் என அறிவித்துக் கொள்கின்றனர். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் உருவாவதற்கு போலி ஹதீஸ்களே காரணமாக அமைந்தன.
இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்துள்ளன. அதேபோல் அவை பகுத்தறிவுக்கும் பொருத்தமற்றவையாக அமைந்துள்ளன. இதேவேளை அவை ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளைக் காணும் சிலர் ஒன்றுக்கொன்று முரண்படும் இவை இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது என எண்ணுகின்றனர். ஆதலால் முரண்பாட்டுக்கு அப்பாற்பட்ட குர்ஆனை மட்டும் பின்பற்றினால் போதும் என வாதிக்கின்றனர். இந்த அகீதா ரீதியான சீர்கேடு உருவாவதற்குப் போலி ஹதீஸ்களும் அவை தொடர்பான அறிவு அற்றுப்போனமையுமே காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்பாக அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தமது ‘இர்வாஉல் ஙலீலின்’ முன்னுரையிலும் அறிஞர் அபூ அப்துல்லாஹ் லாகிர் நிஃமதுல்லாஹ் அவர்கள் தமது ‘அல் அஹாதீதுழ் ழயீபா வல் மவ்லூஆ வஹதருஹா அஸ்ஸெய்யிஉ அலல் உம்மா’ என்ற சிற்றேட்டிலும் உதாரணங்களுடன் விபரித்துள்ளனர்.
வணக்க வழிபாடுகள்:
அகீதாவில் பல்வேறுபட்ட சீரழிவுகளுக்கு போலி ஹதீஸ்கள் காரணமாக இருந்தது போலவே வணக்க வழிபாடுகளில் பல்வேறுபட்ட சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடுகள் தோன்றவும், பித்அத்கள் உருவாகவும் போலி ஹதீஸ்கள் துணை நின்றன. அவற்றுக்குச் சில உதாரணங்களை நோக்குவோம்.
கருத்து வேறுபாடு அருளாகுமா?:
‘இமாம்களின் கருத்து வேறுபாடு சமுகத்திற்கு அருளாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒன்று பரவலாக மார்க்க அறிஞர்களால் பேசப்படுகின்றது. இவ்வாறே ‘எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு அருளாகும்’ என்ற ஒரு செய்தியும் உண்டு.
இமாம் “அப்துல் பர்” அவர்கள் கூறியதாக அல்மனாவி அவர்கள் இந்தச் செய்திப் பற்றி கூறும்போது இப்படி ஒரு ஹதீஸ் அறிஞர்களிடத்தில் அறியப்பட்டிருக்கவில்லை. இதற்கு ஸஹீஹானதோ, ழயீபானதோ, மவ்லூஆனதோ எந்த வகையான சனதும் (அறிவிப்பாளர் தொடரும்) இல்லை என்கின்றார்.
எந்தச் சனதும் இல்லாத இந்தச் செய்தியை இமாம் சுயூத்தி தனது ‘அல்ஜாமிஉஸ் ஸகீரில்’ இது எம் கைக்குக்கிட்டாத ஏதாவதொரு கிதாபிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி நியாயப்படுத்த முற்படுகின்றார். போலி ஹதீஸை உறுதிப்படுத்த முயலும் இமாமவர்களின் இக்கூற்று பல்வேறுபட்ட ஸஹீஹான ஹதீஸ்கள் கூட முஸ்லிம் உலகத்தால் இழக்கப்பட்டுவிட்டன என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகின்றது.
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) தமது ‘அல் இஹ்காம் பீ உஸுலில் அஹ்காம்’ எனும் நூலில் (5ஃ64) இந்த செய்தி பற்றிக் கூறும்போது, ‘இது தவறான கருத்தாகும். கருத்து வேறுபாடு அருளாக இருந்தால் கருத்து ஒற்றுமை என்பது அருள் அற்றதாக மாறிவிடும். இப்படி ஒரு முஸ்லிம் கூற முடியாது!’ என்பதாகக் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பல்வேறுபட்ட அறிஞர்களால் இச்செய்தி விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் சரியானதை இனங்கண்டு பின்பற்றுவதை விட்டுவிட்டு தக்லீதின் அடிப்படையில் நடந்து கொள்வதற்கும், மத்ஹபுகளைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்களை இட்டுச் சென்றுள்ளன. இதனால் எல்லா இபாதத்துகளிலும் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதையே மக்கள் அருளாக எண்ணி ஏற்றுக்கொண்டு செல்கின்றனர்.
நபி வழிகள் மறுக்கப்படல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் நேரடியாகவே சுன்னாவுக்கு முரணாக இருக்கும். பெரும்பாலும் தமது மத்ஹபுடைய இமாமின் கூற்றுக்கு வலு சேர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டிருக்கும். இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் அந்தந்த மத்ஹபைப் பின்பற்றுபவர்களால் பிரபலமடையச் செய்யப்பட்டிருக்கும். இதன் தாக்கத்தால் பல சுன்னத்தான அமல்கள் சமூகத்தில் மங்கி மறைந்து போயுள்ளன.
‘வெள்ளிக்கிழமை தினம் இமாம் குத்பா ஓதும் போது உங்களில் ஒருவர் வந்தால் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தொழாமல் அமர்ந்துவிட்டவரைக்கூட எழுந்து தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் தமது குத்பாவின் போது கூறியுள்ளார்கள். இதன்படி இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் பள்ளிக்கு வருபவர் இரண்டு ரக்அத்து தொழுதுவிட்டுத்தான் பள்ளியில் அமர வேண்டும். ஆனால்,
கதீப் மிம்பரில் ஏறிவிட்டால் தொழுகையும் கிடையாது, பேசவும் கூடாது என்ற கருத்தில் பலவீனமான அறிவிப்பு ஒன்று உள்ளது. இந்தச் செய்தி பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் மாட்டப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வருபவர்கள் தொழாமலே இருந்து விடுகின்றனர். மாறாக யாரேனும் தொழுதால் சில இமாம்கள் அவரை அப்படியே இருக்குமாறு நேரடியாகவே ஹதீஸுக்கு முரணாகக் கூறுகின்றனர். நபியவர்கள் இருந்தவரையும் தொழச் சொல்லியுள்ளார்கள். இவர்கள் தொழுத பலரையும் தொழுகையை விட்டுவிட்டு அமரச் சொல்கின்றனர். இந்நடவடிக்கைக்கு போலி ஹதீஸே காரணமாகியுள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அய்யூப் இப்னு நுஹய்க் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் குறித்து, இமாம் அபூஹாதம் ‘அல்ஜரஹ் வத்தஃதீல்’ எனும் நூலில் (1/1/259) அவரது அறிவிப்புக்கள் மறுக்கப்படும் என்றும், அறிஞர் அல் ஹைதமி ‘அல் மஜ்மஉ’வில் (2/184) இவர் விடப்பட்டவர் என்றும், அறிஞர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ‘பத்ஹுல் பாரி’யில் (2/327) இது பலவீனமான அறிவிப்பு என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறான பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் மூலம் நேரடியாக சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடு சமூகத்தில் மார்க்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
இபாதத்துக்கள் புறக்கணிக்கப்படுதல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் ஒரு இபாதத்தை விட அடுத்த இபாதத்தை உயர்வுபடுத்திப் பேசுவதாக அமைந்து விடுகின்றன. இதனால் பாதிக்கப்படும் சிலர் குறிப்பிட்ட சில வணக்கங்களைச் செய்துவிட்டு அடுத்த இபாதத்துக்களைப் புறக்கணிக்கின்றனர். உதாரணமாக திக்ர் குறித்த சில இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் அதில் அதீத ஈடுபாட்டையும் தொழுகை போன்ற அமல்களில் கூட பொடுபோக்கையும் ஏற்படுத்தி விடுகின்றது. சிலர் தொழுவதே திக்ருக்காகத்தான். எனவே குறிப்பிட்ட திக்ருகளைச் செய்துவிட்டால் தொழவேண்டிய அவசியம் கிடையாது என எண்ணுகின்றனர். இத்தகைய நிலையைத் தோற்றுவிக்கும் அறிவிப்புகளுக்கு;
சிந்திப்பது அரைவாசி இபாதத்தாகும். குறைந்த உணவு என்பதும் இபாதத்தாகும். (ஸில்ஸிலா 1/249) என்ற எவ்வித அடிப்படையுமற்ற பாதிலான செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
முக்கியமற்றவை முக்கியத்துவம் பெறுதல்:
சில செயற்பாடுகள் ஆகுமானவையாக அமைந்தாலும், ஷரீஆவின் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆனால், போலியான செய்திகளில் அவற்றின் சிறப்புக்கள் பற்றி ஏராளமாக மிகைப்படுத்திக் கூறப்பட்டிருக்கும். இதனால் இஸ்லாம் முக்கியத்துவப்படுத்தாத பல செயற்பாடுகள் மிகக் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதையும் அது வலியுறுத்தும் உண்மையான ஷரீஆ ஓரங்கட்டப்படுவதையும் அறியலாம்.
‘தலைப்பாகையுடன் தொழப்படும் ஒரு ரக்அத்து தலைப்பாகை இல்லாமல் செய்யப்படும் 70 ரக்அத்துக்களை விட சிறந்ததாகும்.’
‘தலைப்பாகையில் தொழும் தொழுகை 10 ஆயிரம் நன்மைக்கு சமமாகும்.’
என்ற கருத்தில் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உள்ளன. இச்செய்திகளை விமர்சிக்கும் இமாம் அல்பானி அவர்கள் தலைப்பாகையுடன் தொழுவதற்குக் கிடைக்கும் கூலி ஜமாஅத்துடன் தொழப்படும் தொழுகைக்கு சமமானது என்று கூறுவது கூட அறிவுக்குப் பொருந்தாது. ஆனால் இங்கு பன்மடங்கு பெருக்கிக் கூறப்பட்டுள்ளது. ஜமாஅத்து தொழுகைக்கும் தலைப்பாகைக்கு மிடையில் சட்டத்தில் கூட பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. தலைப்பாகையை பொறுத்தவரையில் ஆகக்கூடியது (அதிகபட்சம்) அதனை முஸ்தஹப்பு எனலாம். இது இபாதத்துக் கிடையாது. ஆதத்தின் (வழக்காறின்) அடிப்படையில் வந்ததாகும். ஜமாஅத்துத் தொழுகையைப் பொறுத்தவரை ஆகக்குறைந்தது அது கட்டாய சுன்னத்தாகும். அது தொழுகையின் ருக்னுகளில் ஒன்று; அது இன்றி தொழுகை செல்லாது என்றும் கூறப்படுகின்றது. உண்மை என்னவென்றால் அது பர்ழாகும், தனியாகத் தொழுதாலும் தொழுகை சேரும். ஆனால் ஜமாஅத்தை விடுவது குற்றமாகும்.
இப்படி இருக்கும் போது ஜமாஅத்துத் தொழுகைக்கு கிடைப்பதை விட தலைப்பாகையுடன் தொழுவதற்கு அதிக நன்மை கிடைக்குமென்று எப்படிக் கூற முடியும்?. (பார்க்க ஸில்ஸிலா 1/253)
இவ்வாறான போலி ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பரவி தலைப்பாகை போன்ற முக்கியத்துவமற்ற விடயங்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தன. இதனால் சிலர் தலைப்பாகை கட்டாத இமாமைப் பின்தொடர்ந்து தொழமாட்டோம் என அடம்பிடித்தனர். சிலர் பள்ளியில் பணிபுரியும் உலமாக்களுக்கு இதைக் கட்டாயமாக்கினர். மற்றும் சிலர் தலைப்பாகை கட்டினர். அதேநேரம் அதைக் கடைப்பிடிக்காத உலமாக்களை ஹதீஸைப் பின்பற்றாதவர், அதிக நன்மையில் நாட்டம் இல்லாதவர். சுன்னாவை கைவிட்டவர் என்று ஏளனமாகப் பார்த்தனர். சிலவேளை இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் தலையை மூடாத போதுகூட கோபப்படாத அளவுக்கு தலைப்பாகை இல்லாத இமாம்கள் மீது கோபப்பட்டனர்.
இவ்வாறே ஹஜ்ஜில் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது வலியுறுத்தப்படாத சுன்னாவாகும். ஆனால் ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் கையாகும். அதைத் தொட்டவர் அல்லாஹ்வுடன் முஸாஹபா செய்தவராவார் என்ற மவ்லூஆன செய்தி மக்கள் மத்தியில் அதனை மிக முக்கிய சட்டமாக மாற்றிவிட்டது. அதன் விளைவை வருடா வருடம் ஹஜ்ஜில் அனுபவித்து வருகின்றோம்.
‘யார் ஹஜ்ஜு செய்துவிட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவன் என்னைப் புறக்கணித்து விட்டான்.’ என்ற கருத்தில் ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் உள்ளன. உண்மையில் ஹஜ்ஜுடன் மதீனாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் ஹஜ் செய்யச் செல்லும் பல பாமர ஹாஜிகள் நபி(ஸல்) அவர்களது கப்ரை ஸியாரச் செய்வதைத்தான் அடிமனது ஆசையாக உள்ளத்தில் ஏந்திச் செல்கின்றனர். ஹஜ்ஜுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத கப்று ஸியாரத் ஹஜ்ஜின் முக்கிய அம்சம் போல் மாறிவிட்டது. இவ்வாறான ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.
மூட நம்பிக்கைகள்:
போலி ஹதீஸ்கள் பல்வேறுபட்ட மூட நம்பிக்கைகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டன.
‘அழகிய பெண்ணின் முகத்தைப் பார்ப்பதும் பச்சைக் காட்சிகளைக் காண்பதும் கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.’ என்றொரு போலி ஹதீஸ் உண்டு. இது, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும் குர்ஆனின் கட்டளைக்கு நேரடியாக முரண்படுவதைக் காணலாம்.
‘பணக்காரர்கள் கோழியை எடுக்கும்போது அந்த ஊரை அழித்துவிட அல்லாஹ் கட்டளையிடுவான்’ என்ற செய்தி இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ள இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். (ஸில்ஸிலா 119)
இவ்வாறே ‘நீங்கள் கம்பளி ஆடையை அணியுங்கள்’ என்பவை போன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் கம்பளி அணிவது இறையச்சத்தின் வெளிப்பாடு என்ற நிலையை ஏற்படுத்தியது.
‘ஒருவர் அஸருக்குப் பின் தூங்கி அவரது அறிவு கெட்டுப்போனால் அவர் தன்னைத் தவிர பிறரை குறைகூற வேண்டாம்.’ என்ற செய்தி அஸருக்குப் பின் தூங்கினால் பைத்தியம் உண்டாகும் என்று கூறுகின்றது.
தேசியவாத சிந்தனை:
இஸ்லாமிய உலகைச் சிதைத்து, உஸ்மானிய்ய கிலாஃபத்தை உடைத்ததில் பெரும் பங்கு தேசியவாத சிந்தனைக்குண்டு. பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மொழி, பிரதேச, தேசியவாத வெறி உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
சிலர் குறிப்பிட்ட இடங்களைச் சிறப்பித்து போலி ஹதீஸ்களை இட்டுக்கட்டினர். மொழி வெறி பிடித்த சிலர் அவரவர் பேசிய மொழிகளைப் புகழ்ந்து இட்டுக் கட்டினர். இவை மொழி, பிரதேச வேறுபாட்டை உருவாக்கியது. இதேவேளை, தேசியவாத சிந்தனைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒரு செய்தி உலமாக்களாலும் குறிப்பாக அரசியல் தலைவர்களாலும் பரவலாகப் பேசப்படுகின்றது.
‘தாய்நாட்டை நேசிப்பது ஈமானில் உள்ளதாகும்.’ (ஸில்ஸிலா 36) என்பதே இந்த இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். இதுபோன்ற செய்திகள் மார்க்கத்தின் பெயரிலேயே தேசியவாத சிந்தனைகள் தலைதூக்க உதவின.
இவ்வாறு நோக்கும் போது போலி ஹதீஸ்கள் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை அறியலாம். இந்த சமய சமூக ரீதியிலான பாதிப்புக்களிலிருந்து சமூகத்தைக் காப்பதற்காக போலி ஹதீஸ்களை மக்களுக்கு இனம்காட்ட வேண்டிய கடமைகள் ஆலிம்களுக்குள்ளது. தாம் எழுதும் போதும், பேசும் போதும் நபி(ஸல்) அவர்கள் பெயரில் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை மக்கள் முன்வைத்து விடக்கக்கூடாது என்ற அக்கறையும் அவதானமும் அவசியம் ஆலிம்களிடம் இருந்தாக வேண்டும். ஹதீஸ் என்ற பெயரில் கிடைப்பதையெல்லாம் மக்கள் மன்றத்திற்கு போட்டுவிடுவது ஹதீஸ்களின் தூய்மையைப் பாதுகாக்கப் பாடுபட்ட இமாம்களினதும், அறிஞர்களினதும் தியாகங்களை உதாசீனம் செய்வதாகவே அமைந்துவிடும். இது உலமாக்களுக்கு அழகல்ல. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட உலமாக்கள் முன்வருவார்களா?