அதிர்ஷ்டக் கற்கள்


அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.
பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது. அதை எடுக்கும் போதே அந்தக் கையின் விரல்களில் அணிந்திருக்கும் ‘அதிருஷடக் கல் மோதிரம்’ ஃபோகஸ் செய்யப்படுகிறது. நீங்களும் அதிருஷ்ட சாலியாக வேண்டுமா? என இப்படி பலவித விளம்பரங்கள் இன்று நம்மை நோக்கி வருகின்றன.
வாழ்வில் பிரச்சனையா?
செல்வம் சேர்க்க வேண்டுமா?
ஆண்மை சக்தி குறைவா?
மண வாழ்வில் பிரச்சனையா?
வெளி நாடு செல்ல வேண்டுமா?
“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கற்கள் உண்டு அதை அணிந்து கொண்டால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் நம்புவது வடிகட்டிய முட்டாள் தனமும் மூட நம்பிக்கையும் ஆகும். வேதனையான விஷயம் என்னவென்றால் தாம் மெத்தப் படித்தவர் என்றும், டாக்டர் என்றும் பொறியாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்கள் கூட தங்களின் அறிவை அடகு வைத்துவிட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து இந்த மூடநம்பிக்கையின் பால் ஆட்கொண்டு விடுகின்றனர்.
ஆனால் சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலே இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி இவ்வாறு நம்பிக்கை கொள்வதே மிகப் பெரும் பாவமாகும். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனறியாமல் ஓர் ஆணுவும் அசையாது என்பதாகும். மேலும் இந்த வகையான கற்களுக்கும் மோதிரங்களுக்கும் எந்த சக்தியுமில்லை என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:17)
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல்-குர்ஆன் 35:2)
எனதருமை முஃமினான சகோதர, சகோதரிகளே! இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் சகல காரியங்களும் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. இதில் எந்த ஒரு முஃமினுக்கும் சந்தேகம் இல்லை. இதில் சந்தேகம் வரவும் கூடாது. அவனுடைய நாட்டமில்லாமல் அணுவும் அசையாது என்றிருக்க அவனை மட்டுமே வணங்கி முற்றிலும் அவனையே சார்ந்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நாம் எப்படி அவனை விடுத்து அவனுடைய படைப்பான கற்களிடமும், சட்சத்திரங்களிடமும், கிரகங்களிடமும் நம்பிக்கை கொள்வது?
முன்சென்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலர் இவ்வாறு கற்களுக்கும், சிலைகளுக்கும் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சக்தியுண்டு என்று நம்பி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வழிபட்டதால் தானே அவர்களை ‘காஃபிர்கள்’ என்று இறைவன் கூறினான்?
“தன் மீது அசுத்தம் படிந்தால் தானே சுத்தம் செய்து கொள்ள சக்தியில்லாத, தமக்குத் தாமே எதுவுமே செய்து கொள்ள இயலாத கற்களை”, ‘உங்களின் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யப் போகின்ற அதிருஷ்டக் கற்கள்” என்று கூறி நவீன காலத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் டி.வி. போன்ற மீடியாக்களின் உதவியுடன் விற்பனை செய்து வருகின்றனர். துரதிருஷ்ட வசமாக படிப்பறிவில்லா பாமரர்களும் மெத்தப் படித்த மேதாவிகளும்? இந்தப் போலியான கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாந்து விடுகின்றனர்.
ஒருவர் இந்த அதிருஷ்டக்கல் என்பதை அணிந்துக் கொண்டால் அவைகள் அவருக்கு நலவுகளைத் தருகின்றது என்று நம்பிக்கை கொள்வாராயின் அது படுபயங்கரமான, இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத ‘ஷிர்க்’ என்று சொல்லப்படக் கூடிய மாபெரும் பாவமாகும். காரணம் என்னவெனில், அந்த அதிருஷ்டக் கல் மோதிரம் அணிந்து கொள்பவர் பின்வரும் மாபெரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்.
1) மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் சக்தியையும் மீறி இந்த அதிருஷ்டக் கற்களே தமக்கு நன்மை தீமைகளை அளிக்கின்றது என்று நம்புகிறார்.
2) அல்லது அந்த அதிருஷடக் கற்களை அணிந்து கொண்டதன் காரணத்தால் அல்லாஹ் வேறு வழியில்லாமல் அவருக்கு நன்மைகளையே தருகின்றான் என்று நம்புகிறார். (நவூதுபில்லாஹ்! இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்)
ஒருவர் இதை மறுத்தாலும் இது தான் உண்மையாகும். மேற்கண்ட இரண்டில் ஒரு காரணத்திற்காகத் தான் ஒருவர் இவ்வகையான கற்களுடைய மோதிரங்களை அணிகிறாரே தவிர வேறில்லை. எனவே இது ‘ஷிர்க்’ எனப்படும் மாபெரும் பாவமாகும்.
எனென்றால் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் அவனையே சார்ந்திருக்கின்றன. அவைகள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளக் கூட சக்தியற்றவைகளாக இருக்கின்றன.
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடிவிட்டால் அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது. அதைப் போல அல்லாஹ் ஒருவருக்கு ஒரு தீமையை நாடிவிட்டால் அதை அவனைத்தவிர வேறு எதுவும் அதாவது அதிருஷ்டக் கற்களோ, தட்டு, தகடு, தாயத்து அல்லது இது போன்ற எதற்குமே சக்தியில்லை. இவைகளை அணிந்து கொண்டாலும் இவைகளால் அவனுடைய சக்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:107)
மாறாக, இவைகளை அணிந்து கொண்டால் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் கேட்பதற்கு பதிலாக இந்த கற்கள், தட்டு, தகடு மற்றும் தாயத்து போன்றவைகளின் மீது நம்பிக்கை வைத்ததற்காக இறைவனின் கோபத்திற்குள்ளாக நேரிடும். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாகவும்).
மேலும் ஒருவருடைய பிறந்த தேதிக்கும் நட்சத்திரத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. நட்சத்திரங்கள் ஒருவருடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று நம்புவதும் மூட நம்பிக்கையும் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையும் மாபெரும் பாவமுமான ‘ ஷிர்க்’ என்னும் இணைவைத்தலுமாகும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொண்ட முஃமினான ஒருவர் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
அல்லாஹ் கூறுகிறான்: -
39:65 அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்).
39:66 ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்-குர்ஆன் 39:65-66)
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். (அல்-குர்ஆன் 10:106)
எனவே எனதருமை முஃமினான சகோதர சகோதரிகளே! யார் அல்லாஹ்வுடைய வேதத்தையும் அவனுடைய தூதருடைய வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழ்கிறாரோ அவர் வழிதவற மாட்டார். ஆனால் எவர் வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன் 3:160)

சூனியம் என்பது உண்டா?

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 'இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்' என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.இறை நம்பிக்கையில் ஏற்படும் இடற்பாடுகளை இனங்காட்டி மக்களை மீட்டெடுக்க வந்த நபிமார்களின் பெயரிலேயே இறை நம்பிக்கையில் ஊருவிளைவிக்கும் காரியம்தான் இந்த சூனிய நம்பிக்கையின் மூலம் நடைப்பெறுகிறது.
சூனியத்தை நம்பும் முஸ்லிம்கள் முதலாவது விளங்க வேண்டிய விஷயம் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை அத்தகைய நம்பிக்கையை குர்ஆன் வலுவாக மறுக்கிறது என்பதேயாகும். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று 'நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா..?' என்ற தலைப்பில் ஏற்கனவே நமது இணையத்தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (இங்கு கிளிக் செய்துப் படிக்கவும்) இதில் தெளிவு கிடைத்து விட்டால் இந்த நம்பிக்கையில் பாதிக்கு மேல் குறைந்து விடும்.
அப்படியானால் சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்ற கேள்வி வருகிறது. இனி அது குறித்து விளங்குவோம்.'சூனியம் என்று எதுவுமே இல்லை' என்று இஸ்லாம் மறுக்கவில்லை. சூனியம் இருப்பதாக இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.
சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.
நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.
'கணவன் - மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்' என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.
இந்த சூனியம் பேச்சுக்களின் காரணமாக உருவாவதாகும். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவை ஏற்படுத்த அந்த கணவன் மனைவியை சுற்றியுள்ளவர்கள் மனங்களில் ஷைத்தான் இவர்கள் பற்றிய தீய எண்ணங்களை ஏற்படுத்துவான். இதன் கெடுதியை உணராதவர்கள் தங்கள் மனங்களில் ஷைத்தானால் ஏற்படுத்தப்பட்ட தீய எண்ணங்களை தங்கள் வாய்களால் வெளிப்படுத்துவார்கள். விளைவு குடும்பங்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை வெடித்து கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை தலைத்தூக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டால் அவர்கள் செய்யும் சாதாரண சின்ன தவறுகள் கூட பூதகரமாக தெரியும். யாரால் இத்தகைய பேச்சும் பிரச்சனையும் உருவாகியது என்று சிந்திக்க விடாத அளவுக்கு ஷைத்தான்களின் திட்டம் வலுவாக இருக்கும். இதை உணராத அந்த கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தர்கா, மந்திரவாதி, சூனியக்காரன், சாமியார் என்று அலையும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த சந்தர்ப்பங்களில் இறைவனைப் பற்றிய நினைவும் நம்பிக்கையும் குறைந்து போய் அவனுக்கு எதிரான அவன் தடுத்துள்ள எல்லாக் காரியங்களையும் செய்யும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சூனியத்தின் வேலையாகும்.
பேச்சுக்களால் ஏற்படும் சூனியத்தில் கணவன் - மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி (ஸல்) வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.நபி(ஸல்) அவர்களுடன் ஆய்ஷா(ரலி) ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி(ஸல்) ஓய்வெடுக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறியவில்லை. ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள். நடந்த எது ஒன்றும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா(ரலி)க்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாருமே இல்லை. சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா(ரலி) அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள். போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அது அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து 'சுப்ஹானல்லாஹ்' என்கிறார். இந்த சப்தத்தில் ஆய்ஷா(ரலி) விழித்துக் கொள்கிறார்கள். அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார்.
வேறொரு ஆணுடன் ஆய்ஷா(ரலி) வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா(ரலி) அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி(ஸல்) அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை - சஞ்சலத்தை - ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.'ஆய்ஷாவே! நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்' என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, 'ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா'என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. 'சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்' என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் நபியுடைய மனைவியையும் பாதித்தது. அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன.
இந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.'இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.' (அல் குர்ஆன் 24:15) இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின. (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)மனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.'இறை விசுவாசிகளே! (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)
இறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரி! இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது' என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் (5325) இடம் பெற்றுள்ளது)
பேச்சுக்கலையால் மனங்களை பாழ்படுத்தும் சூனியம் போன்றே கண்களுக்கு கொடுக்கும் தீவிர பயிற்சியாலும் மனித மனங்களில் பயங்களை உருவாக்கி சூனியம் செய்து விடலாம். இத்தகைய சூனியம் ஃபிர்அவ்ன் என்ற கொடியவன் வாழ்ந்த காலத்தில் பிரபல்யமாக இருந்தது.இறைத்தூதர் மூஸா(அலை) ஃபிர்அவ்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் போது மூஸா(அலை) அவர்களை தோற்கடிக்க சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் துணைக்கு அழைக்கிறான். இதைக் குர்ஆன் வரிசையாக சொல்கிறது.பிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். ''நாங்கள் மூஸாவை வென்று விட்டால் அதற்குறிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமா..'' என்றார்கள். அவன் கூறினான், ''ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று.'' மூஸாவே நீர் முதலில் எறிகிறீரா.. நாங்கள் எறியட்டுமா..'' என்றுக் கேட்டார்கள். அதற்கு மூஸா ''நீங்கள் எறியுங்கள்'' என்றார். அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படியான திறமையான சூனியத்தை அவர்கள் செய்தனர். (அல் குர்ஆன் 7:113-116)அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தபோது சூனியத்தால் நெளிந்தோடுவது போல் மூஸாவிற்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.(மூஸாவே) பயப்படாதீர், நிச்சயமாக நீர்தான் மேலோங்குவீர்! என்று (இறைவன்) நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 20:66-68)உம் கையில் இருப்பதை கீழே எறியும். அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரர்கள் எங்கு சென்றாலும் வெற்றிப் பெற மாட்டார்கள் என்று கூறினோம்.மூஸா எறிந்த உடன் சூனியக்காரர்கள் கற்பனை செய்த யாவற்றையும் அது விழுங்கி விட்டது. (அல் குர்ஆன் 7:117, 20:69)சூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, அங்கேயே சிறுமைப் படுத்தப்பட்டவுடன் உண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள். (அல் குர்ஆன் 7:119-121)
இந்த வசனங்களிலிருந்து பேசப்படும் சூனியம் அல்லாமல் செய்யப்படும் சூனியத்தின் நிலை என்னவென்று தெளிவாகிறது.மனிதர்களிடம் ஏராளமான திறமைகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வர முறையான தீவிர பயிற்சித் தேவைப்படும். அத்தகைய பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு கலையே மெஸ்மெரிஸம் என்ற கண்கலையாகும். இந்த கலையை பயிற்சியின் மூலம் பெற்றவர்கள் தங்கள் கண்களால் சில காரியங்களை தற்காலிகமாக செய்துக் காட்ட முடியும். இத்தகைய பயிற்சிப் பெற்றவர்கள் தான் மூஸா(அலை) காலத்தில் சூனியக்காரர்கள் என்ற பெயரில் இருந்துள்ளனர். அவர்களின் சூனியக்கலையைப் பற்றி இறைவன் கூறியுள்ள வார்த்தை ஊன்றி கவனிக்கத் தக்கதாகும். 'மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படி செய்தனர்' என்கிறான். எதுவுமே இல்லாத போது கூட இருட்டில் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று பயந்த மக்கள் கூறுவது போன்ற ஒரு மாய தோற்றத்தை தான் அந்த சூனியக்காரர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.
இயற்கைக்கு மாற்றமாக நடக்கும் எது ஒன்றும் மக்களிடம் பயத்தையோ அல்லது ஆச்சரியத்தையோ உருவாக்கும். மூஸா உட்பட அங்கு குழுமி இருந்த மக்களுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கில் தான் அவர்கள் தங்கள் கண் கட்டி வித்தையை அரங்கேற்றினார்கள். இறைவனின் நாட்டப்படி மூஸா(அலை) வென்றவுடன், 'சூனியக் காரர்களின் கற்பனை தோற்கடிக்கப்பட்டது என்கிறான் இறைவன்' சூனியம் என்பது உண்மை என்றால் அதை கற்பனை என்று இறைவன் கூற மாட்டான். இறைவன் கற்பனை என்று கூறியதிலிருந்தே அவர்கள் செய்தது மெஸ்மெரிஸம் - கண்கட்டி வித்தைதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.
தங்கள் சூனியம் தோல்வியடைந்தவுடன் இனி இந்த பொய் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்ததோடு மூஸாவின் செயலும் அவரது அழைப்பும் சத்தியமானது என்று அவர்களின் அறிவு அவர்களுக்கு சொல்லி விடுகிறது. அதனால்தான் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவர்களால் இஸ்லாத்தை ஏற்க முடிந்தது. ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உயிர்விட முடிந்தது.
சூனியக்கலை உண்மைதான் என்று அந்த சூனியக்காரர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் மூஸாவிடம் தோற்றாலும் பிறரிடம் அதை செய்துகாட்டி வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அது ஒரு போலித்தனமான தற்காலிகமான கலை என்பதை விளங்கலாம்.
இன்றைக்கும் கூட ஆங்காங்கே மணலை கயிறாக திரிப்பது, தண்ணீரை பாலாக்குவது, மண்ணிலிருந்து குங்குமம் வரவழைப்பது போன்ற வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். பயிற்சியின் வழியாகவும், செட்டப் மூலமாகவும் இவை நடத்தப்படுகின்றன.சூனியத்தால் எதையும் செய்துக் காட்டிவிட முடியும் என்று கூறும் இந்த சூனியக் காரர்கள் தங்களுக்கு தேவையானதையே சூனியத்தால் செய்துக் கொள்ள முடியாமல் சூனியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இதையெல்லாம் சிந்திக்கும் போது சூனியம் என்பது கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் ஒரு போலியான கலை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த சூனியத்தை விட நாம் மேலே விளக்கியுள்ள பேச்சு வழி சூனியம்தான் அபாயகரமானதும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்பு தேடக் கூடியதுமாகும். இந்த இரண்டு வகை சூனியத்தை தாண்டி வேறு சூனியம் எதுவுமில்லை. இருப்பதாக நம்புவது குர்ஆனையும் நபிவழியையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிமுக்கு அழகல்ல.
சந்தேகமும், பலவீனமும் உள்ளவர்களிடம்தான் இத்தகைய சூனியங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அர்த்தம் பொதிந்த இரண்டு பாதுகாப்பு சூராக்களை இறைவன் இறக்கி வைத்துள்ளான்.'குல் அவூது பிரப்பில் ஃபலக்' 'குல் அவூது பிரப்பின்னாஸ்' இவற்றின் அர்த்தத்தை படித்து விளங்கும் எவரும் சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.'இறைவனின் நாட்டமின்றி இதன் மூலம் அவர்கள் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. (அல் குர்ஆன் 2;102)

வேத புத்தகங்கள்

இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
இன்று இஸ்லாமியர்கள் மத்தியிலே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புத்தகங்களில் அதிகமானவை இஸ்லாம் என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டு இஸ்லாமிய விரோதப் புத்தகங்களாகத்தான் இருக்கின்றன.
சல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரீனும் மட்டுமல்ல இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோரால் பெருமதிப்பு மிக்கதாக மதிக்கப்படும் எத்தனையோ புத்தகங்கள் இஸ்லாத்தில் சேறு பூசுவதற்காகவே புறப்பட்டவைதான்.
ரவ்ளா ஷரீபில் கனவில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஸலவாத்து, நெருப்பு ஸலவாத்து(ஸலாத்து நாரியா), பெரியார்களின் சம்வங்கள் மூலம் பெரியார் பூசைக்கான புத்தகங்கள். இப்படி இன்னோரன்ன கதைகள். இவர்களெல்லாம் தனக்குத் தாமே வேறு 'மௌலானாக்கள்' என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். விலை போவதற்கு அவைதான் ஷரத்துக்கள்!
மன்ஸில் என்ற பெயர்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனிதனின் மார்க்கமாகப் பொருந்திக் கொண்ட இஸ்லாத்தின் முழுமுதல் வேதப் புத்தகத்திற்கு 'அல்-குர்ஆன்' என்ற பெயரை அழகாகக் சூட்டியிருக்கிறான். இவர்கள் அந்தப் பெயருக்குச் சவாலாக 'மன்ஸில்' என்று சூட்டியிருக்கிறார்கள். இந்த வழிகேடர்கள் தானும் கெட்டு அப்பாவி பாமர மக்களையும் வழிகேட்டிலாக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் ஏழாண்டுகள் அரபி மத்ரஸாக்களில் கல்வி கற்றார்களா?
அல்-குர்ஆனின் சில அத்தியாயங்களை அச்சிட்டு அதற்கு முன்னும் பின்னும் ஓதுவதற்கென்று குர்ஆனல்லாத சிலதையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அல்-குர்ஆனை விட இதைத்ததான் இன்றைய முஸ்லிம்களில் பலர் வைத்துக் கொண்டு பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கு விளக்கம் கேட்டால் இதை ஊக்குவிப்பவர்கள் சொல்லும் காரணம் குர்ஆனை வுளு இல்லாமல் தொடக்கூடாது, ஆகவே, குர்ஆன் வசனங்களைவிட அதிகமாக ஸலவாத்துக்கள், துஆக்கள் என்று வேறு சிலவற்றை அச்சிட்டு வுளு இல்லாமல் தொடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று காரணம் சொல்கிறார்கள்.
அறியாமைக்கும் ஓர் அளவுண்டு! மனிதன் தேவையில்லாமல் போட்டுக் கொண்ட சட்டம் எப்படி வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமல் இருக்கிறது என்பதையாவது சிந்திக்க வேண்டாமா? அந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பார்க்க வேண்டாமா?அல்லாஹ்வின் அறிவுக்கே சவால் விடும் இந்த ஏழுவருட வகுப்புகளுக்குச் சென்று வந்த அறிஞர்கள் அல்-குர்ஆனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு பாத்திஹா ஓதி சம்பாதிப்பதற்காகவா இந்தக் குர்ஆன் அருளப்பட்டது? மரண வீடுகளில் ஓதி இறந்தோருக்குச் சாட்டுவதற்காகவா இந்தக் குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கப்பட்டது? அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போது மன்ஸில் என்றொன்றைத் தொடங்கி 'சொற்பக் கிரயத்திற்கு' விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் பார்க்கும் போது மேலெடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ் இந்தக் காலத்திற்கு எவ்வளவு பொருத்தமாகவுள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரக்கூடியதாயிருக்கும்.
இப்படிப்பட்ட திருகுதாளங்கள் செய்து மக்களை வழிகெடுப்பதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. அப்படிப்பட்ட பித்ஆக்களுக்கு வழிகாட்டுவதிலிருந்தும் அவற்றைச் செய்வதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொண்டோமானால் அதுவே சுட்டெரிக்கும் கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இன்ஷா அல்லாஹ் ஒரு காரணியாகவிருக்கும்.வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை
நன்றி: தமிழ் முஸ்லிம்.காம்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.
பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.
அவைகள்: -
1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.
2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)
இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.
ஜோதிடக் கலை: -
இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.
ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: -
1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.
இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.
2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.
இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.
இராசிப்பலன்கள்: -
ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.
படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.
எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -
1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.
ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.
ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.
ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?
ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.
ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
அல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.
1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்3) கப்பலில் வழி காட்டியாகவும்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.
“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.
“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)
அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.
நன்றி: சுவனத் தென்றல்.காம்

ஷியாயிஸம்


அகில உலக அளவிலும் இஸ்லாத்தின் மிகப் பெரிய கொள்கை மாறுபாடாகக் கருதப்படுவது 'ஷியாயிஸம்' என்பதுதான். முஸ்லிம்களின் அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியாக அன்றுமுதல் இன்றுவரை இடற்பாடுகளை நாம் சந்திப்பதற்கு ஷியாயிஸம் முக்கியப்பங்கு வகிப்பது நாம் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்று,
இஸ்லாத்தின் புரிந்துணர்வில் பல மாறுபாடுகளை கண்ட ஷியாக்கள் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அவர்களின் கொள்கை புரிந்துணர்வு எடுத்துக் காட்டப்பட வேண்டும், பிறரை எச்சரிக்கைப் படுத்த வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கான் போன்ற நாடுகளில் ஷியாக் கொள்கையின் தாக்கம் (இதுதான் ஷியாக் கொள்கை என்று அந்த மக்கள் அறியாமலே) பரவலாக ஆட்கொண்டுள்ளதை அவர்கள் இஸ்லாத்தை வெளிபடுத்தும் போது தெரிந்துக் கொள்ளலாம். தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.
எனவே அதுபற்றி ஓரளவு தமிழ் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கட்டுரை.
ஷியா என்பது ஒரு அரபுப் பதமாகும். இலக்கண அடிப்படையில் இதற்கு 'பிரிவு' என்று பொருள். குர்ஆனில் பரவலாக இந்தப்பதம் பிரிவினர் (குரூப்) வழிதோன்றல் போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட படுமோசமான அரசியல் நெருக்கடிகள் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்தது. ஆதரவு - எதிர்ப்பு என்ற கோஷங்கள் எழுந்த போது அலி(ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் (பிரிவு) களமிறங்கியது. அன்றைக்கு இவர்களை கூட்டிக் காட்ட 'ஷியதுஅலி' அலியின் ஆதரவாளர்கள் (அலி பிரிவினர்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் 'ஷியது அலி'யில் இருந்த அலி என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'ஷியா'வாக சுருங்கியது. அதுவே அவர்களை சுட்டிக் காட்டும் பெயராகவும் நிலைத்து விட்டது.
பொதுவாகவே அரசியல் கொந்தளிப்பு - நெறுக்கடி ஏற்படும் போது பொய்கள் சர்வசாதாரணமாக பிறப்பெடுத்து சமூகத்தை மொத்தமாக ஆட்கொள்ளும் என்பது நாம் அனுபவ ரீதியாக அறிந்த ஒன்றுதான். இதே நிலை அன்றைக்கும் நீடித்தது. அலியின் ஆதரவாளர்கள் என்று களமிறங்கியவர்கள் தங்களையும் தங்கள் தரப்பையும் நியாயப்படுத்திக் கொள்ள பொய்களை துணிந்து பரப்பினர். (அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) அன்றைக்கு இஸ்லாம் என்ற கொள்கையே மிகப் பெரும் ஆதிக்கம் செய்துக் கொண்டிருந்ததால் கொள்கைத்தனமான பொய்களே மக்களை வெகுவாக கவரும் என்பதை உணர்ந்தவர்கள் அதையே கடைபிடித்தனர். தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்காக இவர்கள் இத்தகைய பொய்களை பரப்பினாலும் அந்தப் பொய்கள் பலகாலகட்டங்களை கடந்தும் ஒரு பிரிவினரை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே ஷியா என்பது 'ஷியதுஅலி' (அலி குரூப்) என்று துவங்கி அரசியலுக்காக பொய்களை புனைந்து பின்னர் 'ஷியா' என்றாகி அந்த பொய்களின் மீதே நிலைத்து விட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அவர்களின் அரசியல் ரீதியான பொய்கள் கொள்கை ரீதியாக எப்படியெல்லாம் வியாபித்தது என்பதில் சிலவற்றை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்."ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்" என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,"அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்" என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்" என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)"தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை" என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது "கதீர்ஃகம்" என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து "இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்."யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும். அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.இதை அறிந்த சுன்னத் ஜமாத்தில் உள்ள சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.
ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.''தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார். அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238 ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 ''நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார். அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261 ''உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27 நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ''முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்கள். தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404
எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள். அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197 அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள். காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837
நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245 அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246 (அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 296 எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள். அல் உஸுலு மினல் காபி பக்கம் 258 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்கள். அல் உஸுலுமினல் காபி பக்கம் 398 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாது. அல் உஸுலுமினல் காபி பக்கம் 402 எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர். குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146
பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) ''வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்கள். அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261 இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்கள். கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470 ''யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம். பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23
அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள். அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ''வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார். தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108
இத்தகைய கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இப்படி நிறைய எழுதலாம். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் புரிந்துக் கொள்ளும் சில உதாரணங்களே இவை. பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.
நன்றி: இது தான் இஸ்லாம்.காம்
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை