என் பெயர்...... தேவையில்லை.
என் ஊரோ, இனமோ, மதமோ எதுவும் உங்களுக்கு தேவையில்லை. நான் உங்களிடம் சொல்லப்போகும் வி­ஷயத்தை நீங்கள் புரிந்துகொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு விபரம் புரிந்த வயதில் என் மனதில் வழிந்த முதல் கேள்வி படைப்பாளனை பற்றிதான். இயல்பிலேயே மிகவும் நுணுக்கமாக கவனிக்கும் நான், அனைத்து பொருட்களையும், அதனதன் இயல்புகளோடு படைத்து கையாண்டு வருபவன்தான் என்னையும் படைத்திருக்கவேண்டும் என்று எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டேன்.
ஆனால் அவன் யார்? தெரியவில்லை. அவனை எங்கே தேடுவது? தெரியவில்லை. என்னுள் விதையாக தேடலை வைத்தவன், பதில் தராமல் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தேடிக்கொண்டே இருந்தேன். என் பெற்றோர் மற்றும் என் வட்டம் சார்ந்தவர்களிடம் பேசியபோது, அவர்கள் இறைவன் என்று சுட்டிக்காட்டிய பொருட்களை இன்று வரை என் மனம் கூசியபடியே மறுத்துவருகிறது.
இறைவன் பற்றி மதங்கள்தான் பேசுகின்றன என்று அனைத்து மதத்தை பற்றியும் தேடித்தேடி படித்தேன். நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன், ஆனால் அதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமானதில்லை.
ஆம். இஸ்லாம் என்னை ஈர்த்தது; ஒளி கொடுத்தது ; நான் துலங்கினேன். இப்போதும் நான் என் இறைவன் சொன்ன வழியில்தான் வாழமுயற்சித்து வருகிறேன். தொழுகிறேன். பிரார்த்திக்கிறேன். அனைத்தும் செய்கிறேன். இதில் நான் பெருமிதமடைகிறேன்.
ஆனால் தயவு செய்து சகோதரர்களே... நீங்கள் இதில் பெருமையடைய வேண்டாம். முடியவும் முடியாது. குறை சொல்லவில்லை சகோதரர்களே. முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது போல் புத்தகம் சுமக்கும் கழுதைகளாகத்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லும் போது தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
காரணங்கள் ஆயிரம்,
நான் என் வாழ்க்கையின் அர்த்தம் தேடி வலியுடன் அலைந்தபோது உங்கள் வார்த்தைகளோ, உங்கள் நடத்தைகளோ, எனக்கு தீர்வு சொல்ல முடியாத அவலம், உங்களுடைய நிலை. இவ்வளவிற்கும், நான் தேடிய வெளிச்சம் - குர்ஆன் - உங்கள் கையில்தான் இருந்தது. பரிதாபம் - அந்த வெளிச்சத்தை உங்கள் குலச்சொத்தாக பாவித்து அதை உங்களை தாண்டி கொண்டு செல்லாமல் நீங்கள் எனது இறைவனை இழிவுபடுத்திகொண்டிருந்தீர்கள்.
இஸ்லாம் உலகிற்கான இறைவனின் செய்தி. நீங்கள் உங்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள். என்னை போல் தேவையுடைய உண்மைக்காக சத்தியத்தை தேடிதாகித்து கிடக்கும் கோடிக்கனக்கான மக்களுக்கு சென்று சேரவேண்டிய என் இறைவனின் செய்தியை -இஸ்லாத்தை- ஏன் உங்கள் அக்குள் புழுக்கத்திலும், குறுகிய மண்டைக்குள்ளும் இடுக்கி வைத்துள்ளீர்கள்?
''இவர் என்னுடன் வியாபாரம் செய்தார் ஆனால் உன்னை பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லையே இறைவனே'' என்றும் ''இவர் என்னுடன் எத்தனையோ வருடங்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார் என்னுடன் இணைந்து பணிபுரிந்தார் இவர் மட்டும் சுய நலத்துடன் உனது உன்னத வாழ்க்கை முறையை பின்பற்றிவிட்டு எனக்கு அதைபற்றி வாசனைகூட கிட்டாமல் செய்துவிட்டார்'' என்றும் உங்களை பற்றி நாளை எத்தனைபேர் இறைவனிடம் குற்றம் சொல்ல இருக்கிறார்கள் தெரியுமா?
தான் வழங்கிய அருட்கொடைகள் பற்றி கேள்விகணக்கு கண்டிப்பாக கேட்பதாக சொல்லும் இறைவன் நியாயதீர்ப்பு நாளில் ''இத்தணை லட்சம் பேரை வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பழகவைத்தேனே...அவர்களில் எத்தனை பேருக்கு என்னை பற்றி, நான் வழங்கிய அருட்கொடைகளில் மிக உன்னதமான எனது வாழ்க்கைமுறையை (இஸ்லாத்தை) பற்றி எடுத்து கூறினாய்'' என்று கேட்காமல் விட்டுவிடுவான் என்று நினைக்கிறீர்களா?
ஆகவே தயவு செய்து என் சகோதரர்களே! கடுமையாக பேசியிருந்தாலோ, வார்த்தைகளில் பிழையிருந்தாலோ என்னை மன்னியுங்கள். நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து இறை செய்தியை மக்களின் மத்தியில் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் அது நம்மீது விதிக்கப்பட்ட தெளிவான கடமை. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். தெரியாததை தெரிந்து கொள்ள பாருங்கள். சொல்கிறபடி நடந்துகொள்ளுவதும் முக்கியமானது.
நீங்கள் நினைப்பதுபோலல்ல... அறியாமையின் முன், போலி மதத்தரகர்களிடமும், மண்டியிட்டு ஏமாந்து கிடக்கும் எத்தனையோ கோடிபேர் நீங்கள் சொல்லப்போகும் சுபச்செய்தியினால் பயனடையக்கூடும் என்று சிந்தித்துபாருங்கள்.
தன் சமூகத்தில் நிகழும் அவலங்களை கண்டு சத்தியத்தைபற்றியே நம்பிக்கையிழந்து கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உங்களின் வெளிப்பாட்டிற்க்காக காத்துகிடக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
அறியாமையால் கொல்லப்படும் ஒவ்வொரு பெண்குழந்தைபற்றியும், பலியிடப்படும் தலைப்பிள்ளைகள் பற்றியும், கடவுளின் பெயரை சொல்லி பறிக்கபடும் சகோதரிகளின் கற்புக்கும், படைப்புக்களின் முன் செய்யப்படும் ஒவ்வொரு தலைசாய்ப்பிற்க்கும் நீங்களும் பதில் சொல்லவேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் உணரப்போவதேயில்லையா?
எல்லாம் தெரிந்தபிறகுதான் சொல்லவேண்டும் என்றாலோ, முதலில் முஸ்லிம்கள் சரியான பிறகுதான் அடுத்தவர்களுக்கு எத்திவைக்கவேண்டும் என்றாலோ.... மன்னியுங்கள் ... உலக முடிவுநாள் வரை அல்லது நமது மரணம் வரை அது முடியாது.
இறைவனை மறுத்தும், அவனுக்கு இணைவைத்தும் இறைவனை இழிவுபடுத்தியபடி ஒரு பெரும்கூட்டமே அறியாமை இருளில் வாழாமல் வாழந்துகொண்டுள்ளது. யுகஇருளையும் போக்கிடும் சத்தியவெளிச்சத்தை - இஸ்லாத்தை - இறைவன் நம்மிடம் கொடுத்துள்ளான்.
இறைதூதரை இறைவனின் மகன் என்று அபாண்ட கற்பிதங்களையே துணிவுடனும், வலுவுடனும் ஒரு சின்னஞ்சிறு கூட்டத்தால் தீர்க்கமாக பிரச்சாரம் செய்யமுடிகிறதென்றால், சத்தியமார்க்கம் கையில் கொடுக்கப்பட்ட என் அருமை சகோதரனே... உன்னால் என்னதான் செய்யமுடியாது?
கூட்டம் திரட்டி பெருவிழாக்கள் நடத்தி உணர்ச்சிமயமாய் பித்தலாட்டமெல்லாம் பண்ணதேவையில்லை சகோதரனே.
மார்க்கத்தை அதிகமாக கற்போம்.
சிறந்த முன்னுதாரணமாக வாழ முயற்சிப்போம்.
நமக்கு தெரிந்தவர்களிடம் இறைவனை, இறைசெய்தியை எடுத்துச் சொல்லுவோம்.
மனமாற்றங்கள் இறைபுறத்தை சார்ந்தது.
சத்தியத்தை சொல்லாமல் மறைத்த (நல்ல) வர்களுக்கு இடப்படும் நரகநெருப்பாலான கடிவாளத்திலிருந்து நம்மை அப்படியாவது காத்துக்கொள்வோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன். 
நன்றி-தேடல்