திரைமறை வாழ்க்கை (ஆலமுல் பர்ஸக்) -
அபூ நாஃபிஆ, உடன்குடி.
வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான கலை. அப்படிப்பட்ட கலையை நுட்பமாக, முழுவதுமாக அனுபவித்தால்தானே அதன் அருமை தெரியும்…? வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தானே…? நாம் வாழக்கூடிய குறைந்த அளவு காலத்தில் நம்முடைய விருப்பப்படி என்னென்ன விதமான ஆடைகளை உடுத்த வேண்டுமோ அதையெல்லாம் உடுத்தி, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கலாம். நல்லவழியில் சம்பாதித்தாலென்ன, பிறரிடம் கொள்ளையடித்து சம்பாதித்தாலென்ன, நாம் சுகபோகமாக எந்த துன்பங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்தால்போதும்… நாம் இந்த உலகத்தில் வாழும்போதே அனைத்து சுகங்களையும் அனுபவித்து விட வேண்டும். நாம் செய்யக்கூடிய செயல்களைப் பற்றி நம்மைக் கேள்வி கேட்பவர் யார் இருக்கிறார்? நாம் இறந்ததும் நம்முடைய சடலத்தை எரித்து விடுவார்கள் அல்லது மண்ணில் புதைத்து விடுவார்கள். எரிக்கப்பட்ட உடல் உடனடியாக சாம்பலாவதைப் போல, புதைக்கப்பட்ட உடலும் சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுமே…! பிறகெப்படி இறந்த பின் இன்னொரு வாழ்க்கை உண்டு என்றும், உலகில் வாழும்போது நாம் செய்த அனைத்து செயல்களின் பலனை அங்கே அனுபவிப்போம் என்றும் சிந்தனை தோன்றும்…?
அப்படியே உங்கள் சிந்தனையை ஓட விடுங்கள் பார்ப்போம்…..!
உலக மக்கள் அனைவரையும் புற்பூண்டு, கொடி அனைத்தையும் படைத்தது இறைவன் தான். மனிதனுக்கு பிறப்பையும், இறப்பையும் அமைந்துள்ளானே… எதற்காக? என்ற கேள்விக்குப் பதிலாக, யார் மனிதர்களிலேயே அழகிய செயல்களைச் செய்து வாழ்கின்றார் என்பதை சோதிப்பதற்காகத் தான் என்பதை அல்குர்ஆனில் 67:2 வசனத்தின் மூலம் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அதை அப்படியே மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு கீழ் வருவதைப் படித்துப் பாருங்கள்….!

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களில் உங்களையும், என்னையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் பிற மனிதர்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, உங்கள் வாழ்வில் என்ன துன்பங்களைச் சந்தித்தாலும் நேர்மையாளராக, உண்மையாளராக, பிறருக்கு உதவிகள் பல புரியும் அன்புள்ளம் கொண்டவராகவே வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் நானோ பிறருக்கு நம்மால் இன்பம் வந்தாலென்ன, துன்பம் வந்தாலென்ன? நம் வாழ்க்கையில் நாம் எந்த சிறு துன்பத்தையும் அனுபவித்துவிடக் கூடாது என்று அஞ்சி, சுகபோகமாக வாழ வேண்டும் என்று கருதி, திருடுகிறேன், மது அருந்துகிறேன், விபச்சாரம், கொலை, கொள்ளைகளைக் கணக்கின்ற செய்து வாழ்கிறேன்…. இவற்றை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

நாமிருவரும் மரணிக்கின்றோம் எனில் நீங்கள் உலகில் செய்த நற்காரியங்களுக்கான பலனென்ன? நான் உலகில் செய்த தீய காரியங்களுக்கான தண்டனைதான் என்ன? எந்தவொரு பரிசோ அல்லது தண்டனையோ இல்லையெனில் அவரவர் தண்டனை மன விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து, எப்படி வேண்டுமானாலும் வாழ்வார்களல்லவா? அதனால்தான் மண்ணறையில் ஒரு வாழ்க்கை உண்டு…
உலகில் எப்படி வாழ்ந்தோமோ அதற்கேற்ப அங்கே ஒவ்வொருவருக்கும் பிரதிபலன் கொடுக்கப்படும் என்பதை மறந்து உலகில் வாழ்ந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கையை சற்றே ஆழமாக நாம் சிந்தித்தால், நாம் சிந்தித்தால், நாம் வாழப்போகும் அந்த மண்ணறை வாழ்க்கையானது நம்முடைய அன்றாட வாழ்வோடு மிக ஆழமாகவும் மிக நெருக்கமாகவும் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ள ஒன்று என்பது தெளிவாகும். இவ்வுலகில் குறிப்பிட்ட தவணை வரை வாழும் ஒவ்வொரு மனிதனின் நற்செயல்கள், தீய செயல்கள் அனைத்தையும் எடைபோட்டு, அதற்குரிய நிரந்தரமான கூலியை வழங்குவதற்காக ஓர் உன்னதமான உலகை இறைவன் நமக்குத் தந்திருக்கிறான். ஆனால் அந்த உன்னதமான வேறு உலகைச் சந்திப்பதற்கு முன்னால் ஆதமின் சந்ததிகள் அனைவரும் மண்ணறை வாழ்க்கையைச் சந்தித்தே தீர வேண்டும். இதற்கு ஆலமுல் பர்ஸக் - திரைமறை வாழ்க்கை என்று கூறுவர். மனிதர்களில் நல்லவராயினும், தீயவராயினும் இந்த திரைமறை வாழ்க்கையை சந்தித்தே ஆக வேண்டும்.

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் என் இறைவா! என்னைத் திரும்ப உலகுக்கு திருப்பியனுப்புவாயாக! (என்று கூறுவான்) அவன் கூறுவது வெறும் வார்த்தையன்றி வேறில்லை! அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன். 23:99,100).
இந்த சத்திய வரிகளில் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது என்று கூறுவதில் பொதிந்துள்ள உண்மை என்னவெனில் மறுமையில் எழுப்பப்படுவதற்கு முன் மண்ணறை வாழ்க்கை என்பது கட்டாயம் உண்டு என்று தெளிவாகிறது.

அனுதினமும் ஷவரில் குளித்தவர்கள்
மரணித்தாலும் குளிப்பாட்ட பலகைமேல் வைக்கப்படுவார்கள்
உடலுக்கு உயர்தர சோப்புகளைப் பயன்படுத்தியவர்கள்
ஏதாவதொரு நறுமணத்தை உடலில் பூச விட்டுவிடுவார்கள்.
பனாறஸ் பட்டு ஜரிகைக்காக பொறாமைப்பட்டவர்களுக்கு
ஆறு முழம் வெள்ளைத் துணியே இறுதி ஆடை…
அன்று புத்தாடைகளில் நறுமணம் தடவினர்
இன்று இறுதி ஆடையில் நறுமணம் தடவுகின்றனர்.
சடலத்தைக் தூக்கி வந்து மண்ணறையில் இறக்கி பூமேனியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள்.
பளிங்கினாலான மாளிகையில் வாழ்ந்தவருக்கும்
மண்ணினாலான சிறு அறைதான் மாளிகை.
என்றுமே நம்முடைய சுற்றத்தாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்த நம்முடைய உடலை ஆறு அடி குழியில அனாதையாகப் போட்டுவிட்டு, அவரவர் வேளையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.
உலகில் பெற்ற தாய், பின்னர் மனைவி நமக்குத் தந்த அரவணைப்பைத் தான் பார்த்திருப்போம். சவக்குழியில் சடலத்தைப் போட்ட அந்த நொடியிலேயே அந்த அரவணைப்புக்கு நேர்மாறான ஓர் அரவணைப்பைத் தான் பார்த்திருப்போம். சவக்குழியில் சடலத்தைப் போட்ட அந்த நொடியிலேயே அந்த அரவணைப்புக்கு நேர்மாறான ஓர் அரவணைப்பை பூமி நமக்களிக்கும். நம்மை ஆத்திரமூட்டி - பூமி நமது இரு விலாப்புறங் களிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்படி நம் உடலை நெருக்கும். இதுவும் இறைவனின் கட்டளையின்படியே நடைபெறும். இவ்வுலகில் நல்ல செயல்கள் செய்தவராக இருந்தால் ஒரு நெருக்கத்தோடு விட்டுவிடும். கெட்ட செயல்கள் செய்தவராக இருந்தாலோ, மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். இறைவனின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வந்த நபிமார்களை மட்டும் பூமி அவ்வாறு நெருக்காது. இதற்கு வலுவூட்டும் விதமாக இறைத்தூதர் அவர்களின் தேன்மொழியைப் பாருங்கள்.

நபிமார்களுடைய உடல்களை பூமி சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்:ஷத்தாத்(இப்னு அவ்ல்(ரழி) ஆதாரம் :இப்னுமாஜா

அறிமுகமில்லாத இருவர்!
பூ மேனியைப் புதைத்துவிட்டு சொந்த பந்தங்கள் கொஞ்ச தூரம் கூட நடந்திருக்கமாட்டார்கள். திடீரென்று நாம் இதுவரை பார்த்தேயிராத இரண்டு வானவர்கள் நம் கண்முன் வந்து நிற்பார்கள். கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாவார்கள். ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (நல்லவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள (மண்ணறையிலுள்ள) அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள்! பூமியிலே அவர்களை நான் படைத்தேன்… இன்னும் மற்றொரு முறை அதிலிருந்து அவர்களை நான் (மறுமையில்) வெளியேற்றுவேன் என இறைவன் கூறினான். அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது. அப்போது அவனிடத்தில் (முன்கர், நகீர் எனும்) இரண்டு வானவர்கள் வந்து அவனை அமர வைப்பார்கள். அவ்விருவரும் அம்மனிதனை நோக்கிப் பின் வருமாறு கேள்விகள் கேட்க, அவனும் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?
பதில் : எனது இறைவன் அல்லாஹ்
கேள்வி : உனது மார்க்கம் என்ன?
பதில் : எனது மார்க்கம் இஸ்லாம்
கேள்வி : உங்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்டாரே அவர் யார்?
பதில் : அவர் அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
கேள்வி : அதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?
பதில் : அல்லாஹ்வுடைய (நெறி) நூலை ஓதினேன்; அதனை முழுமையாக நம்பினேன். அதனை உண்மைப் படுத்தினேன். இவ்வாறு அம்மனிதன் பதிலளிப்பான்.

என்னுடைய அடியான் உண்மை சொல்லிவிட்டான். அவனுக்காக சுவனத்தில் இருந்து ஒரு விரிப்பை விரித்துவிடுங்கள். சுவனத்தில் ஒரு ஆடையை அவனுக்கு அணிவியுங்கள்…! சுவனத்திலிருந்து ஒரு கதவை அவனுக்காக திறந்து விடுங்கள்! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். சுவனத்தில் இருந்து மென்மையான காற்றும், நறுமணமும் அவனிடம் வரும். அவனுடைய பார்வை எட்டுமளவு அவனுடைய மண்ணறை விசாலமாக்கப்படும் (புதுமாப்பிள்ளை எந்த தொல்லையுமில்லாமல் தூங்குவது போல் அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை தூங்குவான்).

வானவர்கள் சுமந்து சென்ற கெட்ட ஆத்மாவின் செயல்கள் ஸிஜ்ஜீனிலே (தீயவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதியப்பட்டு அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். பிறகு அவனிடம் இரண்டு வானவர்கள் வந்து அவனை அமரச் செய்து, அவனிடத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்க, அவன் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?
பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!
கேள்வி : உன்னிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்ட மனிதர் யார்?
பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!
இவன் பொய் சொல்கிறான். நரகத்திலிருந்து ஒரு விரிப்பை இவனுக்காக விரித்து விடுங்கள்…! நரகத்திலிருந்து ஒரு கதவை இவனுக்காக திறந்து விடுங்கள்…! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். நரகத்தின் உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய மண்ணறைக்குள் வீசும். அவனுடைய வலது, இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னுமளவுக்கு மண்ணறை அவனை நெருங்கிக் கொண்டே இருக்கும். அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை இவ்வாறு வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : பாரா இப்னு ஆஜிப்(ரழி) நூல் : அஹ்மத் ஹ8561.

இவ்வாறு விசாரணைகள் முடிந்து அவன் உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பான். இவ்வாறிருந்தும் சிலர் கூறுகின்றனர் மண்ணறை வாழ்க்கை என்பது உண்டு; ஆனால் மண்ணறையில் வேதனை இருக்காது; தூங்கிக் கொண்டு தான் இருப்பார்கள் என்று கூறுகின்றனர். அதற்கான தெளிவை இப்போது பார்ப்போமா?

ஃபிர்அவ்ன் என்ற அரசன் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்து வந்தான். மூஸா(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைகளை எடுத்துக கூறியபோது அவன் இறைவனை ஏற்க மறுத்தது மட்டுமின்றி, தானே இறைவன்… தன்னையே மக்கள் வணங்கவேண்டுமென அகம்பாவம் கொண்டு, தன் இறைவன் அல்லாஹ்தான் என்று உறுதி கொண்டவர்களைத் தொடராக கொலை செய்தான். இவனுடைய அக்கிரமங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமென கடலில் அவனை அல்லாஹ் மூழ்கடித்தான். இவன் செய்த அக்கிரமங்களுக்கு பரிசாக மண்ணறையிலும், மறுமையிலும் வேதனை உண்டு என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன்கொண்டு வரப்படுவார்கள். மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைப்பெற்றிடும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள்….! என்று கூறப்படும். (அல்குர்ஆன்: 40:45,46)

இந்த வசனத்தில் காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு வரப்படுவார்கள் மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைப் பெற்றிடும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள்…..! என்று கூறப்படும.(அல்குர்ஆன் : 40:45, 46)

இந்த வசனத்தில் காலையில், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன்கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்பட்டிருப்பது மண்ணறையில் நடப்பதைத்தான் மண்ணறையில் வேதனை உண்டு என்பது தெளிவாகி இருக்கும் பட்சத்தில் சில நேரத்தில் நமக்கு ஒரு சந்தேகம் எழும். அதாவது, உயிரும் இறைவனால் கைப்பற்றப்பட்டுவிட்டது. உடலும் மக்கிப்போய் விடுகின்றது. பிறகெப்படி தீய மனிதர்கள் வேதனை செய்யப்படுவார்கள்?
நல்ல மனிதர்கள் சுகம் அனுபவிப்பார்கள் என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? அதன் தெளிவை பார்ப்போமா….?

ஆத்மா உணரும் வெகுமதி!
இன்று உயிர் இரத்தத்தில்உள்ளது. இதயத்தில் உள்ளது என்று பலவாறாகக் கூறிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மருத்துவத்துறையில் புற்றுநோய் யாருக்கேனும் வந்தால் அவனுடைய உடம்பிலுள்ள இரத்தத்தை எல்லாம் வெளியேற்றி விட்டு, பிறகு புதிதாக இரத்தத்தை செலுத்துகின்றனர். அதுபோல், இதயம் பலவீனமடைந்தால் அவர் உடம்பிலுள்ள இதயத்தை எடுத்து விட்டு வேறு இதயத்தைப் பொருந்துகின்றனர். அவர்கள் கூறுவதுபோல இரத்தத்திலோ, இதயத்திலோ அல்லது மற்ற உறுப்புகளிலோ உயிர் இருந்தால் அவற்றை உடம்பிலிருந்து எடுக்கும்போதே அவர் இறந்திருக்க வேண்டுமே! அவ்வாறில்லாமல் இன்று மீண்டும் உயிருடன் எழுந்து நடமாடுகின்றனரே! இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் இறைவன் கூறுவதை பாருங்கள்.

ரூஹ்(உயிர்) என் இறைவனுடைய கட்டளையில் உள்ளதாகும். (அதைப்பற்றிய) ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமே…! (அல்குர்ஆன் 17:85)

இன்னும் உங்களுக்கு புரிய வேண்டுமா? நீங்கள் சிறு மரணம் என்ற தூக்கத்தில் கனவு காண்பீர்களல்லவா? அந்தக் கனவில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியோ அல்லது மிகப் பிடித்த ஒருவருடன் பேசுவது போல கண்டால் அந்த கனவிலே ஆழ்ந்து ஆகாயத்தில் மிதப்பதுபோல் இருப்பீர்கள்தானே…? சில சமயம் மிகுந்த சிற்றின்பத்தில் மூழ்கி ஸ்கலிதமும் ஏற்பட்டுவிடுகிறதே? சில சமயம் வேதனை மிகுதியால் அலறவும் நேரிடுகிறதே? அந்த கனவை உங்கள் உடல் அனுபவித்ததா? இல்லையே….! உங்கள் ஆத்மா(நஃப்ஸ்)தானே உணர்ந்தது…! அதுபோல்தான் உடல் எரிக்கப்பட்டாலும் சரி, விபத்தில் இறந்தாலும் சரி, உடல் மண்ணறையில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும் சரி, இறைவன் தான் கைப்பற்றிய ஆத்மாக்களுக்கு(நஃப்ஸ்) அவன் சுவனவாசியாக இருந்தால் கொடூரமான வேதனைகளையும் கொடுப்பான். எனவே, அவரவர் வெகுமதியை அனுபவிக்க உடல் தேவையில்லை. ஆத்மா மட்டும் போதும் என்பது தெளிவாகிவிட்டதல்லவா?

நமது நாளைய நிலை!
மண்ணறை வேதனையை மனிதன் அறிய முடியும் என்றிருந்தால் இவ்வுலகில் உயிர் வாழவே முடியாத அளவுக்கு மயக்கமுற்று விழுந்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறய அறிவிப்புகள் நபிமொழி பேழைகளில் அதிகம் உண்டு. மரண்த்திற்கு பின்னால் உள்ள தனது வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை எவன் அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். அறிவிப்பாளர்: ஷத்தாத் இப்னு அவ்ல்(ரழி) நூல்: அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

முறம் புடைக்கும்போது பதர் மற்றும் தேவையில்லாதவற்றைத் தள்ளிவிட்டு, தானியத்தை மட்டும் நாம் வைத்துக் கொள்வதைப் போல் நல்லவர்கள் சுவனமும், புதர்கள் - தீயவர்கள் நெருப்புக்கும் செல்வது உறுதி என தெரிந்துவிட்டது. நாம் தானியமா? அல்லது பதரா?
மண்ணறை என்பது மறுமையிலன் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சி பெறவில்லை என்றால் அதற்குப் பின்னுள்ள அனைத்தும் அவனுக்கு கடினமாகிவிடும். மண்ணறையின் காட்சிகளை விட மிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். எனவே, மண்ணறை பற்றிச் சொல்லும்போது அதிகமதிகம் அழுகிறேன் என்று உஸ்மான்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிரி, இப்னுமாஜா.

அதிகம் அழுவதா அல்லது சிரிப்பதா என்று இனி நாமே முடிவு செய்ய வேண்டும். இவ்வுலகில் நாம் வாழ்வது பொய்யில்லை. உண்மையென நம்புவது போல், இந்த உலகிற்கும், மறு உலகிற்கும் இடைப்பட்ட காலத்தில் பர்ஸக் (திரைமறை) எனும் மண்ணறை வாழ்க்கை உண்டு என நம்ப வேண்டும். மறுமை வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களில் கூட சிலர் மண்ணறை வாழ்வைப் பற்றி சந்தேகப்படுவதுண்டு. எல்லாவற்றையும் நம்பி மண்ணறை வாழ்வை மட்டும் நம்பாமல் இருந்து என்ன நற்செயல்கள் செய்தாலும் அவையனைத்தும் வீணானதே! அதற்காக எந்த நற்கூலியும் கிடைக்கப் போவதில்லை.

கனவு காண்பதை மறுப்பவர் எவருமில்லை. அந்தக் கனவைக் கண்டவன் அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்டுவது எவ்வாறு முடியாதோ அவ்வாறே மண்ணறை வாழ்வை நிரூபிப்பது என்பது முடியாத காரியமாகும். கனவை அனுபவிப்பதுபோல் அதை அனுபவித்தால்தான் உணர முடியும்.

நமது உயிரைக் கைப்பற்றும் சமயத்திலும் தனிமை!
முன்கர் நகீர் என்ற வானவர்கள் விசாரிக்கும் சமயத்திலும் தனிமை!
நாம் வாழப்போகும் (மண்ணறை) மர்ம மாளிகையிலும் தனிமை!
நாம் அனைவரும் ஒன்று கூட்டப்படும் மைதானத்திலும் தனிமை!
இவை அனைத்திற்கும் பின்னுள்ள வாழ்வில் இனிமை கிடைக்க நம் செயல்களை நல்ல வகையில் அமைத்து, நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம் தனிமையில்!

எல்லாப்புகழும் இறைவனுக்கே…! எங்கள் இறைவா! உயர்ந்த சுவனத்தை நாங்கள் உன்னிடத்தில் வேண்டுகிறோம்! தந்தருள்வாயாக!
நன்றி: - அபூ நாஃபிஆ, உடன்குடி.