தவறான மொழி பெயர்ப்புச் செய்தவர்கள் 'அவரது உள்ளத்தில்' என்று குறிப்பிட்ட இடத்தில்,மூலத்தில 'உம்னிய்யத்' என்ற பதம் உள்ளது. 'உம்னிய்யத்' என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் 'அவர் அறிவித்த செய்தியில்' என்பதே பொருளாகும் என்று நபிகளின் அன்புத்தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது. அவரது மாணவர் முஜாஹித் அவர்களும், தபரீ அவர்களும் இதே பொருளையே தருகிறார்கள். நபித்தோழர்கள் 'உம்னிய்யத்' என்ற வார்த்தைக்குச் செய்துள்ள பொருளின் அடிப்படையில் அந்த வசனத்தில் பொருள் என்னவென்று பார்ப்போம்.'எந்ந ஒரு தூதரை அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை; ஷைத்தான் சேர்த்தவற்றை அகற்றி அல்லாஹ் தன் வசனங்களில் உறுதி செய்கிறான்' என்பதே அதன் பொருளாகும். அதாவது எந்த ஒரு தூதரும் இறைச்செய்தியை மக்களுக்குக் கூறினால் அவர் கூறிய செய்தியில் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்த்துக் கொள்வர். இறைவன் அவற்றை அடையாளம் காட்டி தன் வசனங்களை உறுதி செய்வான் என்று உத்திரவாதம் தருகிறது அந்த வசனம். நபிகளிடம் இறைச்செய்தியை எழுதுபவராக இருந்த 'அப்துல்லாஹ் இப்னு ஸஃது' என்பவர் நபி சொன்னதற்கும் அதிகமாக அவராகவும் சில வார்த்தைகளைச் சேர்த்து எழுதிக்கொள்வார் நபி அவர்கள் அதைக் கண்டுபிடித்து அகற்றுகிறார்கள் என்பதை ராம்ஸ்வர்ப் தன் மூன்றாவது கேள்வியில் ஒப்புக்கொள்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்கள் கைச்சக்கரத்தைச் சேர்த்துவிட முயன்றனர் அவை அந்தக் கால அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்டன. 'ராம்ஸ்வர்ப்' போன்றவர்கள் திருக்குர்ஆனில் உள்ளதாக எதையாவது சொந்தமாகக் கூறினால் இன்றைய அறிஞர்களாலும் அவை வெளிச்சம் போட்டு காட்டப்படும்.இந்த இடத்தில் 'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படக்கூடும் '22:52 வசனத்தில் 'ஷைத்தான்' என்று தான் கூறப்படுகிறது. மனிதர்கள் சொந்தமாகச் சேர்ப்பதைப்பற்றி அல்லவ' என்பது தான் இந்த சந்தேகம். திருக்குர்ஆன் அனேக இடங்களில் ஷைத்தான் என்ற பதத்தை வழி கெட்ட மனிதர்களுக்கும் பயன்படுத்தி இருக்கின்றது. (பார்க்க! 6:112, 2:14)ஹதீஸ்களிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. ராம்ஸ்வர்ப் தேடிப்பார்த்துச் சிரமப்படாமலிருக்க அவரே குறிப்பிட்டுள்ள ஒரு ஹதீஸைத் தருவோம். 'நபிகள் ஒரு கவிஞனைக் கண்டபோது இந்த ஷைத்தானைப் பிடியுங்கள' என்று கூறியதாக 'ராம்ஸ்வர்ப்' குறிப்பிடுகிறார். (அது பிறகு வருகின்றது.) இதில் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு கவிஞனை நபிகள் 'ஷைத்தான்' என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ஆக இந்த வசனம் 'ஷைத்தான் நபியின் உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்துவார்கள். அவர் அதை இறைவனின் வஹி என்று எண்ணிக் கூறிவிடுவார' என்று கூறவே இல்லை. மாறாக நபி இறைச் செய்தியை மட்டுமே கூறுவார் அவர் கூறிய இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்ப்பர்; அது இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு அகற்றப்படும் என்பதே பொருளாகும். 'ராம்ஸ்வர்ப்' தன் புலமை சான்ற கேள்விக்கு ஆதாரமாகச் சமர்பித்த ஹதீஸ் பொய்யானது; அவர் எடுத்து வைத்த குர்ஆன் வசனத்தில் பொருள் தவறானது என்று ஆகும் போது அவரது கேள்விக்கு எவ்வித ஆதாரமும் இல்லாது போய்விடுகின்றது.கேள்வி:2 அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும் முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி அவரை கிண்டல் செய்திருக்கிறார், மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத் திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது என்கிறார் ராம்ஸ்வர்ப்.பதில்:2 இந்த மூன்று நிகழ்ச்சிகளை இறைவேதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவர் தரும் அடுத்த சான்றுகளாகும். கதீஜா (ரலி) அவர்கள் தான் முதலில் விசுவாசம் கொண்டார்கள்; அதை நாம் மறுக்கவில்லை. கதீஜா (ரலி) முதலில் விசுவாசம் கொண்டதால் இறைவேதம் என்று குர்ஆனை நம்புவதற்கு என்ன தடை இருக்கிறது. கணவருக்குப் பயந்து கொண்டு விசுவாசம் கொண்டிருக்கலாம் என்று சொல்ல வருகிறாரோ என்னவோ தெரியவில்லை. கதீஜா (ரலி) முதன்முதலில் விசுவாசம் கொண்டது அவர்இறைத் தூதர் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்யுமே தவிர அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தாது.(அ) கதீஜா ஒரு பெண். பொதுவாகவே பெண்கள் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை எளிதில்விட முன்வர மாட்டார்கள். புதிய கருத்துக்களை ஏற்பதற்கு ரொம்பவும் தயக்கம் காட்டுவார்கள். தன்னுடைய பாரம்பர்யமான கொள்கையைத் தகர்த்தெறியும் புதுக்கொள்கையை கணவர் சொன்னவுடன் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவரிடம் இறைத் தூதருக்கான அனைத்து அம்சங்களும் இருந்திருந்ததால் மட்டுமே அது சாத்தியமாயிற்று.(ஆ) கதீஜா அவர்கள் செல்வ சீமாட்டியாக இருந்தார்கள்; அவர்களின் செல்வத்தில்தான் நபிகளின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. இது போன்ற நிலைமையில் கணவன் மீதுள்ள மதிப்பு தானாகவே சரிந்து போய்விடுவதை உலகில் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வத்தில் காலங்கழிக்கும் தன் கணவரை அவமதிப்புச் செய்வதற்கு பதிலாக, அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே மிகமிக உயர்வான மதிப்பை வழங்கினார்கள் என்றால் நபியிடம் அதற்கான சிறப்புத் தகுதிகள் கட்டாயம் இருந்திருக்கவேண்டும்.(இ) முஹம்மதைவிட வயதில் மூத்தவரான கதீஜா தன்னைவிட மூத்தவர் என்ற மரியாதைக்காக இறைச் செய்தியை நம்பினார்கள் என்றும் சொல்ல முடியாது.(ஈ) வெளி உலகில் நல்லவனாக, உத்தமனாக நடிக்கின்ற ஏராளமானவர்கள் தன்வீட்டில் வாழ்கின்றனர். ஒருவனுடைய உண்மையான நடத்தையை மற்றவர்களைவிட அவனது மனைவிதான் நன்றாக அறியமுடியும். அவனுடைய எல்லா பலவீனங்களும், கெட்ட குணங்களும் மனைவிக்குத் தெரிவது போல் எவருக்கும் தெரியமுடியாது. பதினைந்து ஆண்டுகள் நபியுடன் வாழ்க்கை நடத்திய கதீஜா அவர்கள் அவருடைய அப்பழுக்கற்ற நேர்மையான உள்ளேயும் வெளியேயும் ஒரே விதமாக வாழுகின்ற வாழ்க்கையைப் பார்த்துதான் அவர் இறைத்தூதர் என்றதும் ஏற்றுக்கொள்கிறார்கள். நபியின் பரிசுத்த வாழ்க்கைக்கு சான்றாக அமைந்த கதீஜாவின் விசுவாசத்தை சம்மந்தமில்லாமல் இங்கே குறிப்பிடுகிறார் ராம்ஸ்வாப்.இனி ஆயிஷா அவர்களின் விஷயத்துக்கு வருவோம். அதில் ராம்ஸ்வாப் சொந்தச் சரக்கைக் கலந்துவிட்டு அதனடிப்படையில் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். 'நீ விரும்பும் பெண்களை மணந்து கொள்ளலாம்' என்ற வசனம் இறங்கிய போது 'உங்கள் ஆசையை உங்கள் இறைவன் விரைந்து நிறைவேற்றுகிறான் என்றே நான் கருதுகிறேன' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வசனம் இறங்கியதைத்தான் இங்கே ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா அவர்களின் இந்தக் கூற்றை இவர் எப்படி உருமாற்றிவிட்டார் தெரியுமா? 'இவருடைய வசத்திக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறானோ என்று ஆயிஷா அடிக்கடி நபியை கிண்டல் செய்திருக்கிறார்' என்று ராம்ஸ்வர்ப் கூறுகிறார். 'அடிக்கடி', 'கிண்டல்' 'இவருடைய வசதிக்காகவே' என்ற வாசகங்கள் ராம்ஸ்வர்ப் உடைய கைசரக்குகள். இதுதான் புலமை சான்ற கேள்வியா? இது வடிகட்டிய பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? ஒரு தந்தை தன் மகனுடைய ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் போது 'உன் தந்தை உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அக்கரையாக இருக்கிறார்' என்று கூறுவதற்கு என்ன நிலையோ அதே நிலைதான் ஆயிஷாவின் கூற்றுக்கும் உண்டு.இந்தத் தில்லுமுல்லுகளை ராம்ஸ்வர்ப் ஏன் செய்திருக்கிறார் தெரிகிறதா? இவருடைய வசதிக்காகவே குர்ஆன் இறங்கியது என்றால், இறைவனுடைய செய்தி அல்ல அது. இவர் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதை இறைவன் கூறுவதாகச் சொல்லிவிடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த ஒட்டுவேலையின் நோக்கம், இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே இவருக்கு முரண்பட்டுக் கொள்கிறார். ஆயிஷாவுடைய சொல்லை சிதைத்ததன் மூலம் அவரது விருப்பத்திற்கேற்பவே குர்ஆன் இறங்கியது என்று சொல்லவரும் ராம்ஸ்வர்ப், அவருடைய விருப்பத்துக்கு மாறாக, அவருடைய தோழர்களில் ஒருவராகிய உமருடைய விருப்பத்திற்கேற்பவே மூன்று விஷயங்களில் வஹி வந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார். மேலும் உமர் (ரலி) அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்று வசனங்கள் இறங்கியது வினாக்களை எழுப்பிவிட்டதாம். ஆயிஷா அவர்கள் கூற்றிலிருந்து எழும் வினாவுக்கு விடையாக அமைந்துள்ளதை அவர் வினா என்கிறார்.ஆயிஷா அவர்களின் கூற்றைத் தேடிப்பிடித்து அதில் ஒட்டுவேலைகள் செய்த ராம்ஸ்வர்ப் அதே ஆயிஷாவின் மற்றொரு கூற்றையும் கவனித்திருந்தால் முறையாக இருக்கும்.33:37 வசனத்தைப்பற்றி ஆயிஷா குறிப்பிடும்போது முஹம்மது இறை வேதத்தில் எதையும் மறைப்பவராக இருந்திருந்தால் தன்னைக் கண்டிக்கும் இந்த வசனத்தைத்தான் மறைத்திருக்க முடியும்? என்று கூறுவதன்மூலம் அவர்களின் வசதிக்காகவே குர்ஆன் இறக்கிக்கொண்டிருக்கவில்லை என்று மறுக்கிறார்கள், நபிகளின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றல்ல இரண்டல்ல! நூற்றுக்கணக்காண வசனங்கள் இறங்கியுள்ளன.தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும் விரும்பினார்கள். நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். உமக்கு அதிகாரத்தில் யாதொருபங்குமில்ல (3:128) என்ற வசனம் இறங்கியது.குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பம் நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள்.அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது. இவையெல்லாம் நபியின் விருப்பத்திற்குகேற்றவாறுதான் எல்லா வசனங்களும் இறங்கின என்ற ராம்ஸ்வர்புடைய சந்தேகத்தைத் தரைமட்டமாக்குகின்றன.கேள்வி:3 முஹம்மது நபி மக்காவில் இருந்தபோது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சிலசமயங்களில் பாதியில் நிறுத்திவிடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப்பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கைவிட்டார். முஹம்மது இதற்காக அவரை மன்னிக்கவே இல்லை. இருபது வருடங்கள் கழித்து நபி மக்காவை வெற்றி கொண்டபோது அப்துல்லாவை சிரைச்சேதம் செய்யுமாறு கட்டளையிட்டார். நபியின் மருமகனும், அப்துல்லாவின் பால் குடிச் சககோதரருமான உஸ்மானின் சிபாரிசின் பேரில் காப்பாற்றப்பட்டார். நபியிடம் உஸ்மான், அப்துல்லாவைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டபோது நபி நீண்ட பொழுது மௌனமாக இருந்தார். பிறகு சரி என்று சொன்னதாகவும், உஸ்மான் அவ்விடத்தைவிட்டு அகன்றபிறகு நபி தம்மைச் சூழ்ந்திருந்த தோழர்களை நோக்கி நான் ஏன் அவ்வளவு நேரம் மவுனமாக இருந்தேன் தெரியுமா? அந்த இடைவெளியில் உங்களில் எவராவது எழுந்து அவருடைய தலையைக் கொய்துவிட மாட்டீர்களா? என்ற எண்ணத்தில் தான் மவுனம் சாதித்தேன். என்று சொன்னார். இப்னு இஸ்ஸாக் இவ்வாறு கூறுகிறார்.பதில்:3 இரண்டு நோக்கங்களுக்காக இந்தச் செய்தியை ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டுகிறார். (1) இறை வேதத்துடன் மனிதர்களும் தங்கள் கைச்சரக்கை சேர்த்துவிட்டார்கள் என்று நிரூபிப்பது (2) நபி மிகவும் மோசமான குணம் கொண்டவர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யாராவது கொன்றுவிடமாட்டார்களா? என்று எதிர்ப்பார்த்ததனன்மூலம் கீழ்த்தரமான எண்ணங்களையே நபி கொண்டிருந்தார் என்று காட்டுவது.இப்னு இஸ்ஹாக்கும், அபூதாவூத் போன்றவர்களும் இவ்வாறு குறிப்பிடுவது உண்மையே ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெரும் சிலர் நம்பகமற்றவராகவும், வேறு ஒருவர் அலி (ரலி) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பும் ஷியாக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவர்களால் அறிவிக்கப்படும் இந்தசெய்தி ஆதாரப்பூர்வமானது இல்லவே இல்லை. உண்மையில் இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தி இவ்வளவுதான்: 'அப்துல்லாஹ் இப்னு ஸஃது என்பவர் அல்லாஹ்வின் தூதரிடம் எழுத்தராக இருந்தார். ஷைத்தான் அவரை வழிகெடுத்துவிட்டான். அவர் காபிர்களுடன் சேர்ந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அவரைக் கொன்றுவிடுமாறு நபி கட்டளையிட்டார்கள். அவருக்காக உஸ்மான் அடைக்கலம் கோரிய போது உடனே அடைக்கலாம் தந்தார்கள்.' இதுதான் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. (இறைநாட்டப்படி வளரும்)
நன்றி: இது தான் இஸ்லாம்.காம்