மன நிலை சரியில்லாதவர்களையும், நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களையும், உரிய மருத்துவம் செய்யாமல் தர்காக்களில் கொண்டு போய் தங்கவைப்பதற்கும், இறுதியில் நல்லவர்கள் கூட பைத்தியங்கள் ஆக்கப் படுவதற்கும், மூட நம்பிக்கைகளே முக்கிய காரணம்.
சிகிச்சை என்ற பெயரில் தர்காக்களில் நடக்கும் சித்திரவதைகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.ஏர்வாடி தர்காவில் மனநோய்க்காகச் சிகிச்சைக்கு(?) வந்து, தனியார் காப்பகம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப் பட்ட நிலையில் மன நோயாளிகள் தங்கியிருந் கூடாரம் நள்ளிரவில் தீப்பிடிக்க, கதறிக் கதறிக் கூக்குரலிட்டு, காப்பாற்ற யாருமின்றி, கடைசியில் கரிக் கட்டைகளாய் கருகிப் போனவர்களின் கதறல் சப்தமும், ஓலக் குரல்களும், இன்னுமா உங்கள் இதயங்களைப் பிழியவில்லை? எங்கே போனது மனித நேயம்?
தர்காக்கள் என்னும் கல்லறைகளில் - மீண்டும் எழ முடியாத நீண்ட நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தம இறை நேசர்கள், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பதாக எந்தப் பைத்தியங்கள் கூறின?உண்மையில், இப்படிச் சொன்ன பைத்தியங்கள் தான் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் படவேண்டும். அப்போது தான் மனநலம் குன்றியவர்களின் மரண வேதனை இந்த மனித மிருகங்களுக்குப் புரியும்.
நீண்ட நாட்கள் மருத்துவம் செய்தும் நோய் குணம் அடையவில்லை என்றால், இன்னமும் என்ன நோய் என்பது சரியாகக் கண்டறியப் படவில்லை என்றும், உரிய மருத்துவம் செய்யப் படவில்லை என்று தான் பொருள்.
'அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் மருந்தில்லாமல் அல்லாஹ் வைக்கவில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி)
கண்மூடிப்பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
0 comments:
Post a Comment