முஸ்லிம் தனது உறவினர், இரத்த பந்துக்களுடன்
இரத்த பந்துக்கள்
உண்மை முஸ்லிமின் உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் உறவினர் மற்றும் இரத்த பந்துக்களையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுடன் உதவியும் உபகாரமும் நல்லுறவும் பேணப்பட வேண்டும். "அர்ஹாம்' என்பவர்கள், மனிதனுடன் பரம்பரை உறவின் மூலம் இணைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் வாரிசுரிமையைப் பெறுவார்கள், சிலர் பெறமாட்டார்கள்.
இரத்த பந்துக்களுக்கு இஸ்லாம் தரும் கண்ணியம்
இஸ்லாம் இரத்த பந்துக்களுக்கு அளிக்கும் கண்ணியமும் கெªரவமும் மனிதகுலம் எந்த மதங்களிலும் அறிந்திராத ஒன்றாகும். அகவே இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று வலியுறுத்தி, இரத்த பந்துக்களை துண்டிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இரத்த பந்துக்களைப் பேணுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று இதற்கு மிகச் சிறந்த அதாரமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""அல்லாஹு தஅலா படைப்பினங்களைப் படைத்தான். அவைகளைப் படைத்து முடித்தபோது அல்லாஹ்விடம் இரத்த பந்தம் நின்று, ""இது உறவை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவர் நிற்கும் சமயமாகும்'' என்று கூறி மன்றாடியது. அல்லாஹ் ""ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவர்களை நான் சேர்த்துக் கொள்வேன்; உன்னைத் துண்டிப்பவர்களை நான் துண்டித்துக் கொள்வேன் என்பதை நீ பொருந்திக் கொள்கிறாயல்லவா?'' என்று கூறினான். அதற்கு இரத்த பந்தம் "ஆம்!'' (நான் பொருந்திக் கொண்டேன்) என்றது. அல்லாஹ் ""அது உனக்குரியதாகும்'' என்று கூறினான்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பினால் ஒதிக் கொள்ளுங்கள். "நயவஞ்சகர்களே! நீங்கள் (யுத்தத்திற்கு வராது) விலகிக்கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் இரத்த பந்துக்களைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா'' இத்தகையோரை அல்லாஹ் சபித்து அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கிவிட்டான். (அல்குர்அன் 47:22,23) (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவர்களுக்கு உபகாரம் செய்வது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும், அந்தக் கடமைகளில் குறைகளை எற்படுத்தி உறவினருக்கு அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் திருக்குர்அன் வலியுறுத்தி கூறுகிறது.
...ஆகவே, அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்பு பந்தத்துவத்திற்கும் (மதிப்பளியுங்கள்)... (அல்குர்அன் 4:1)
இரத்த பந்தத்தின் மகத்துவத்தை உணர்த்தவும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அதை இறையச்சத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.. அல்லாஹ்வை விசுவாசிப்பது, பெற்றோருக்கு உபகாரம் செய்வது ஆகிய இவ்விரண்டு கடமைகளுக்குப் பின் இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று திருக்குர்அனின் பெரும்பாலான வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்....(அல்குர்அன்17:23) இதை அடுத்து சில வசனங்களுக்குப் பின், பந்துக்களுக்கும், எழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (அல்குர்அன் 17:26)
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், எழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்அன் 4:36)
இத்திருவசனத்தில் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்கு அடுத்ததாக உறவினர்களின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனித உறவுகளை சீர்படுத்துவதில் மேலிருந்து படிப்படியாக கீழே கொண்டுவரும் திருக்குர்அனின் கண்ணோட்டமாகும். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும் உபகாரம் செய்து, பின்பு மகத்தான மனித வாழ்வில் தேவையுடைய அனைத்து அங்கத்தினருக்கும் உபகாரம் செய்ய வேண்டுமென ஏவப்பட்டுள்ளது. முதலில் மிக நெருங்கியவர்களுக்கு உபகாரம் செய்வதையே மனம் விரும்பும் என்ற மனித இயல்புக்கேற்ப இவ்வாறு வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் ஒவ்வொருவரும் வரிசையாக கொண்டு வரப்பட்டுள்ளார்கள். சமூகத்திற்கான உதவியை, முதலில் குடும்ப வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு உறவு வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் செய்யவேண்டுமென விரிவாக்கப்படுகிறது. மனித வாழ்வை இன்பமானதாகவும் அழகானதாகவும் இவ்வரிசைமுறை அமைத்துத் தருகிறது.
இரத்த பந்துக்களை நேசிப்பது மிக முக்கியமான இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரசாரத்தை ஆரம்பித்து, இப்புனித மார்க்கத்தை உலகில் பரவச் செய்த காலத்திலிருந்தே இதுபெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அது மார்க்கத்தின் மாண்புகளை வெளிப்படுத்துவதாகவும், சிறந்த போதனையாகவும் அமைந்துள்ளது.
இதற்கு அபூ சுஃப்யான் (ரழி) அவர்களிடம் மன்னன் ஹிர்கல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆதாரமாகும். அவர் அபூ ஸுப்யானிடம் ""உங்கள் நபி எதை எவுகிறார்?'' என்று கேட்டதற்கு ""அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு யாதொரு இணையும் வைக்கக்கூடாது, எங்கள் மூதாதைகள் சொல்லிக் கொண்டிருந்ததை விட்டுவிட வேண்டுமென்றும், தொழுகை, வாய்மை, ஒழுக்கம், உறவினரோடு இணைந்து வாழ்வது ஆகிய நற்குணங்களையும் எங்களுக்கு ஏவுகிறார்'' என அபூ ஸுப்யான் (ரழி) பதிலளித்தார்கள்.
உறவுகளைப் பேணுவது இம்மார்க்கத்தின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வின் ஏகத்துவம், தொழுகையை நிலைநாட்டுதல், ஒழுக்கத்தையும் தர்மத்தையும் பற்றிப்பிடித்தல் போன்ற பண்புகளுடன் உறவுகளோடு சேர்ந்திருப்பதும் மார்க்கத்தின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
அம்ரு இப்னு அன்பஸா (ரழி) அவர்களின் நீண்ட ஒரு அறிவிப்பில் இஸ்லாமின் அடிப்படைகளும் ஒழுக்கப் பண்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறுகிறார்கள்: மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களை சந்திக்கச் சென்றேன். அதாவது நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அவர்களிடம் நான் கேட்டேன்: ""நீங்கள் யார்? அவர்கள் ""நபி'' என்று கூறினார்கள். நான் "நபி என்றால் யார்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்: ""அல்லாஹ் என்னை தூதராக்கி அனுப்பி இருக்கிறான்'' என்றார்கள். நான் கேட்டேன்: ""எந்த விஷயத்தைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்தான்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""இரத்த பந்துக்களோடு இணைந்து வாழுமாறும், சிலைகளை உடைத்தெறியுமாறும், அல்லாஹ்வை ஏகனாக ஏற்று, அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்பதைக்கொண்டும் அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான்...'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் இந்த சுருக்கமான விளக்கத்தில் இஸ்லாமின் அடிப்படைகளை தெளிவுபடுத்தி இரத்த பந்தத்தை முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ், அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கிய இம்மார்க்கத்தில் உறவைப் பேணுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான அந்தஸ்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. இரத்த பந்துக்களை இணைத்து வாழ்வதன் அவசியம் குறித்தும், அதை துண்டித்து வாழ்பவர்களை எச்சரித்தும் எராளமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.
அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ""அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதை அல்லாஹ்வை வணங்குவது, அவனை ஏகத்துவப்படுத்துவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது என்ற கட்டாயக் கடமைகளுடன் இணைத்து ஒரே வரிசையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இரத்த பந்துக்களுடன் இணைந்திருப்பது அதைச் செய்பவர்களுக்கு சுவனத்தையும், நரகத்திலிருந்து பாதுகாப்பையும் அளிக்கும் ஸாலிஹான அமல்களில் உள்ள ஒன்றாகிவிடுகிறது.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வது அவரது ஆகாரத்திலும் ஆயுளிலும் அபிவிருத்தியை அருளச்செய்கிறது.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவரின் செல்வம் அதிகரிக்கிறது, ஆயுள் கூடுகிறது, இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருள் அவரை மூடிக்கொள்கிறது, அவருக்கு மனிதர்களின் நேசத்தை எற்படுத்தித் தருகிறது என்று மேற்கூறிய அதாரங்களிலிருந்து விளங்கிக் கொண்டோம்.. அதுபோலவே பல நபிமொழிகள் உறவுகளைத் துண்டிப்பவருக்கு அது தீமையாகவும், மனிதர்களின் வெறுப்பையும், அல்லாஹ்வின் கோபத்தையும் எற்படுத்தி, மறுமையில் சுவனத்திலிருந்து அவரை தூரமாக்கி வைக்கவும் காரணமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது.
உறவுகளைத் துண்டித்து வாழ்பவனின் அழிவுக்கும் இழிவுக்கும் பின்வரும் நபிமொழியே சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""இரத்த பந்துத்துவத்தை துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான்.'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அது மட்டுமல்ல. அத்தீயவன் இருக்கும் சபைகளுக்குக் கூட அல்லாஹ்வின் அருள் கிட்டாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)
இதனால்தான் பிரபல நபித்தோழரான அபூஹுரைரா (ரழி) அவர்கள் தங்களது சபையில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் இருக்கும்போது துஆச் செய்ய விரும்பமாட்டார்கள். எனெனில் அம்மனிதர் அந்த சபையில் இருப்பது அல்லாஹ்வின் அருள் இறங்குவதையும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதையும் தடுத்து விடும் என்பதுதான் காரணமாகும்.
ஒவ்வொரு ஜும்ஆ இரவிலும் நடைபெறும் அவர்களது சபையில் ஒரு நாள் ""உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் நம்மிடம் அமர வேண்டாம், வெளியேறிவிடட்டும்!'' என்று மூன்று முறை சொன்னார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை..
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வாலிபர் மட்டும் தான் இரண்டு வருடமாக பேசாதிருந்த தனது தந்தையின் சகோதரியை (மாமியை) சந்திக்க வந்தார். அப்போது அவரது மாமி ""உன்னை இங்கே வரத் தூண்டியதற்குரிய காரணம் என்ன?'' என்று வினவினார். அதற்கு அவர் அபூஹுரைரா (ரழி) அவர்களின் சபையில் நடந்த சம்பவத்தை விவரித்து கூறினார். இதனைக் கேட்ட அவரது மாமி அதற்கான காரணத்தை விசாரித்து வருமாறு அவரிடம் கூறினார். அவர் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் கூறச் செவியுற்றுள்ளேன். நிச்சயமாக மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் வியாழன் மாலை வெள்ளி இரவு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது உறவைத் துண்டித்தவனின் அமல்கள் எற்றுக் கொள்ளப்படுவது இல்லை. (முஸ்னத் அஹ்மத்)
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் மறுமையின் வெற்றியையும் ஆசிக்கும் முஸ்லிமின் இதயம் இச்சான்றுகளைக் கண்டால் திடுக்கிட்டுவிடும். எனெனில், உறவுகளைத் துண்டிப்பது அல்லாஹ்வின் அருளுக்குத் திரையிடுகிறது. பிரார்த்தனைகள் மறுக்கப்படவும் நற்செயல்கள் வீணடிக்கப்படவும் காரணமாகிறது. உண்மையிலேயே இது மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் மாபெரும் சோதனையாகும். இவ்வாறான தண்டனைகளை அறிந்துணரும் முஸ்லிம் ஒருபோதும் உறவுகளைத் துண்டிக்கமாட்டார்.
அல்லாஹ்விற்கு வழிப்பட்டு அவனது பொருத்தத்தைத் தேடும் முஸ்லிம் ஒருபோதும் உறவைத் துண்டிக்கும் குற்றத்தை செய்யமாட்டார். இக்குற்றத்தை செய்பவன் மிகத் துரிதமாக தண்டிக்கப்படுவான். இக்குற்றவாளிகளை மறுமையில் தண்டிப்பதற்கு முன்பாகவே உலகிலும் அல்லாஹ் தண்டித்துவிடுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை..'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
உறவைத் துண்டிப்பது, அக்கிரமம் செய்வது ஆகிய இரண்டும் இரு வகையான குற்றமாகும். அன்பின் கயிற்றை அறுத்து பாச ஊற்றுகளை வறண்டு போக வைப்பதைவிட பெரும் அநீதம் எதுவாக இருக்க முடியும்? எனவேதான் இரண்டையும் நபி (ஸல்) அவர்கள் ஒன்றிணைத்துக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்த பந்துத்துவம் அல்லாஹ்விடம் இணைக்கப்பட்டதாயிருக்கும். அது ""இறைவனே! நிச்சயமாக நான் அநீதி இழைக்கப்பட்டுள்ளேன். இறைவனே! நான் துண்டிக்கப்பட்டுள்ளேன்....''என்று கூறுகிறது. அல்லாஹ் அதற்கு ""உன்னைத் துண்டித்தவனை நான் துண்டித்துவிடுகிறேன். உன்னை சேர்த்துக்கொள்பவரை நான் சேர்த்துக்கொள்கிறேன் என்பதை நீ திருப்தி கொள்ளவில்லையா?'' என்று பதில் கூறுகிறான். (அல் அதபுல் முஃப்ரத்)
அல்லாஹ் "ரஹிம்' என்ற இரத்த பந்தத்தை மிகவும் உயர்த்தியுள்ளான். அதை தனது ரஹ்மான் என்ற பெயரிலிருந்து பிரித்தெடுத்துள்ளான்.
அல்லாஹ் அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.. யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)
இதில் முஸ்லிமுக்கு ஒரு சான்று உள்ளது. இரத்த பந்துக்களுடன் இணைந்திருந்தால் அவரை அல்லாஹ் தனது அருட்கொடையின் இன்பமான நிழலில் வீற்றிருக்கச் செய்கிறான். உறவைத் துண்டித்து வாழ்பவன் அம்மாபெரும் அருட்கொடையிலிருந்து தூக்கி எறியப்படும் துர்பாக்கியவனாவான்.

முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
உறவினரோடு இணைந்திருக்கும் முஸ்லிமை உலகாதாயங்களோ, சொத்துகளோ, மனைவி, மக்களோ அந்த உறவினர்களுக்கு செலவிடுவதையும் உபகாரம் செய்து கண்ணியப்படுத்துவதையும் தடுத்துவிடக்கூடாது. அவர் இது விஷயத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதலை துணையாகக் கொள்வார். அந்த உறவுகளுக்கு உபகாரம் செய்வதில் முக்கியத்துவம் மற்றும் நெருக்கத்தை வைத்து வரிசைப் படுத்துவார். முதலில் தாய், பின்பு தந்தை, அடுத்து நெருக்கமான உறவினர்கள் என அந்த வரிசை நீண்டு செல்லும்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் தனது உறவினருக்கு உதவி செய்தால் இரட்டைக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார். உறவினருக்கு உதவியதின் நன்மையும், தர்மத்தின் நன்மையும் கிடைக்கிறது. அதனால் உறவினர்கள் தேவையுடையவர்களாக இருந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளானால் அதிகமதிகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் அல்லாஹ்விடம் அவர் நற்கூலியையும், உறவினர்களிடம் நேசத்தையும் பெற்றுக் கொள்கிறார். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பி, வலியுறுத்தியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ""பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். எனவே என் கணவரிடம், "நீங்கள் மிகக் குறைந்த செல்வம் உடையவர்களாக இருக்கிறீர். நபி(ஸல்) அவர்கள் எங்களை தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். நான் உங்களுக்கு தர்மம் செய்வது ஆகுமானதாக இருப்பின் அந்தத் தர்மத்தை உங்களுக்கே செய்துவிடுகிறேன். இல்லையென்றால் பிறருக்குக் கொடுத்து விடுகிறேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், "நீயே சென்று கேள்'' என்று கூறிவிட்டார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னைப் போலவே இதே தேவையை முன்னிட்டு இன்னொரு அன்சாரிப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களின் வாசலில் காத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் மீது எங்களுக்கு கண்ணியம் கலந்த பயம் இருந்தது.
அந்நேரத்தில் எங்களுக்கு அருகில் பிலால் (ரழி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் எங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: "உங்களது வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் இரண்டு பெண்கள் "கணவனுக்கும், தங்களது அரவணைப்பில் வாழும் அநாதைகளுக்கும் தர்மம் அளிப்பது அவர்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போதுமானதா?' என்று கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் யார் என்று நீங்கள் கூறாதீர்கள்'' என்று கூறி அனுப்பினோம்.
பிலால் (ரழி) ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்களிடம் வந்து இக்கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவ்விருவரும் யார்?'' என்று கேட்க பிலால் (ரழி) அவர்கள் ""ஒருவர் அன்சாரிப் பெண், மற்றொருவர் ஜைனப்'' என்று கூறினார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவர் எந்த ஜைனப்?'' என்று கேட்டார்கள். ""அப்துல்லாஹ்வின் மனைவி ஜைனப்'' என்று பிலால் (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள். பின்பு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "அவ்விருவருக்கும் இரண்டு கூலிகள் இருக்கின்றன. ஒன்று உறவின் கூலி. மற்றொன்று தர்மத்தின் கூலி'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஏழைகளுக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டும் இருக்கும். ஆனால் உறவினருக்கு தர்மம் செய்வதில் இரண்டு நன்மை கிடைக்கும். ஒன்று தர்மத்தின் நன்மை. இரண்டாவது உறவினருக்கு உபகாரம் செய்த நன்மை.'' (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் நெருங்கிய உறவினருக்கு உபகாரம் செய்வதன் மாண்புகளை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' (அல்குர்அன் 3:92) என்ற திருவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் "பைருஹா' என்னும் தோட்டமாகும். நான் அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன். அது எனக்கு அல்லாஹ்விடம் நன்மையாகவும் சேமிப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். எனவே, "அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ""ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்றுவிட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரழி) ""அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!'' எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினர்களுக்கும், தமது தந்தையுடன் பிறந்தவரின் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ காலங்களுக்கு முன் ஏற்பட்ட உறவுகளை நினைவுபடுத்தி தற்காலத்திலும் அதற்குரிய மரியாதை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தற்காலத்திலும் மிஸ்ரு தேசத்தவரை நேசிக்குமாறு ஏவி, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நீங்கள் விரைவில் மிஸ்ரை வெற்றி கொள்ளப் போகிறீர்கள். அப்படி வெற்றி கொண்டால் அம்மக்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நம்முடன் பாதுகாவலும் இரத்த பந்தமும் இருக்கிறது''. மற்றோர் அறிவிப்பில் ""பாதுகாவலும் திருமண உறவும் இருக்கிறது'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அறிஞர்கள் இதன் விரிவுரையில் இரத்த பந்தம் என்று கூறியது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் "ஹாஜர்' மிஸ்ர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனாலாகும். திருமண பந்தம் என்பது நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீமின் தாய் "மாரியா' (ரழி) அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதாகும்.
உறவைப் பேணுவதிலும் உபகாரம் புரிவதிலும் இஸ்லாமின் அணுகுமுறை எவ்வளவு உயர்ந்தது! காலங்கள் பல கடந்து தலைமுறைகள் பல உருவானாலும் இரத்த உறவையும் திருமண உறவையும் பேண வேண்டும் என்று எவ்வளவு அழகாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இத்தகைய அழகிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம் தனது முழு முயற்சியையும் இரத்த பந்தத்தைப் பேணி அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு செலவழிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
முஸ்லிமல்லாத இரத்த பந்துக்களுடனும் இணக்கமாக இருப்பார்
இஸ்லாம் மனித நேயத்தில் மேலோங்கி நிற்கிறது. இரத்த பந்துக்கள் முஸ்லிம்களாக இல்லையென்றாலும் அவர்களுடன் இணைந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.
ஆம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்... (அல்குர்அன் 27:214) என்ற இந்த இறைவசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை அழைத்தார்கள். சிலரைக் குறிப்பிட்டும் சிலரைப் பொதுவாகவும் அழைத்துக் கூறினார்கள்: ""அப்து ஷம்ஸ் கிளையார்களே! கஅப் இப்னு லுவய்யி கிளையார்களே! உங்களை நரகிலிருந்து பாதுகாத் துக் கொள்ளுங்கள். முர்ரா இப்னு கஅபின் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்து முனாஃப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஹாஷிம் கிளை யார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஓபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள். நிச்சயமாக உனக்கு அல்லாஹ்விடமிருந்து நான் எதையும் செய்வதற்கு உரிமையற்றிருக்கிறேன்.. ஆனால் உங்களுக்கு (என்னுடன்) இரத்த பந்தம் என்ற உறவு இருக்கிறது. அதை நான் உபகாரத்தால் ஈரமாக்குவேன்'' என்றார்கள். (ஸஹீஹ்முஸ்லிம்)
உறவினருடனான மனித நேயமானது முஸ்லிமின் இதயத்திலிருந்து எந்த நிலையிலும் நீங்கிவிடாது. உறவினர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் சரியே! நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தத்தை பூமியுடன் ஒப்பிட்டார்கள். இந்த இரத்த பந்தம், "உபகாரம் செய்தல்' என்ற நீர் உற்றப்படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.. (ஹீஹுல் புகாரி)
இஸ்லாம் முஸ்லிமல்லாத பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு கட்டளையிட்டதை முன்புள்ள பாடத்தில் படித்தோம். இங்கு முஸ்லிமல்லாத உறவினருக்கும் உபகாரம் செய்யக் கட்டளையிடுகிறது. இது இம்மார்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாகும். ஆனால் இது இஸ்லாமைப் பொறுத்தவரை ஆச்சரியத்திற்குரியதல்ல. எனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறான்.
(நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஒர் ஆம்ளாகவே அனுப்பியிருக்கிறோம். (அல்குர்அன் 22:107) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றிக் கூறினார்கள்: ""நான் அனுப்பப்பட்டதெல்லாம் நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே.'' (அல் முவத்தா)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதன் விசாலமான பொருளை விளங்கிக்கொள்வார்
பொருளை உறவினர்களுக்காக செலவு செய்வது மட்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதாகாது. சேர்ந்து வாழ்வதற்கு பல வழிகள் உண்டு. உதாரணமாக உறவினர்களில் எழையாக இருப்பவர்களுக்கு பொருளைச் செலவு செய்வது, (இது அன்பையும் நேசத்தையும் அதிகரித்து உறவைப் பலப்படுத்தும்) அவர்களைச் சந்திக்கச் செல்வது, அவர்களுக்கு உபதேசம் செய்வது, உதவி, ஒத்தாசை புரிவது, விட்டுக் கொடுப்பது, அழகிய வார்த்தை பேசுவது, மலர்ந்த முகத்துடன் பார்ப்பது போன்றவையாகும்.
மற்றும் இவைகள் அல்லாத பல நல்வழிகளின் மூலமாகவும் உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகக் கூறினார்கள்: ""ஸலாமைக் கொண்டாவது உங்களுடைய இரத்த பந்துக்களை ஈரமாக (பசுமையாக) வைத்திருங்கள்.'' (இந்த ஹதீஸை இமாம் பஸ்ஸார் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமாக பல வழிகளில் அறிவித்துள்ளார்கள். அவைகளில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகிறது. (முஸ்னத் பஸ்ஸார்)
உறவைப் பேணுவார் உண்மை முஸ்லிம் தமது இரத்த பந்துக்கள் தன்னுடைய உறவைப் பேணாமல் விலகிச் சென்றாலும் அவர்களுடன் உறவைப் பேணவேண்டும். உறவைப் பேணுவதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், மேன்மைக்குரிய இஸ்லாமியப் பண்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம், தன்னைப் போன்றே அவர்களும் உறவைப் பேணுபவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமின் மனிதநேயப் பண்புகளை வெளிக்காட்டும் விதமாக அந்த முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் இரத்த பந்துக்கள் மற்றும் ஏனைய உறவினர்களின் உறவைப் பேணி நடப்பார்.
நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். ""பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)
தீமையையும், வன்நெஞ்சத்தையும் கொண்டு உறவுகளைத் துண்டித்து வாழும் இரத்த பந்துக்களுடன் மேன்மையையும், மன்னிப்பையும், பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தி இணைந்திருப்பவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் புகழ்ந்தார்கள். இரத்த பந்துக்கள் இணைந்து வாழ மறுத்தாலும் அவர்களைச் சேர்ந்து வாழ்பவர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இரத்த பந்தத்தைத் துண்டித்து நன்மையை மறக்கும் கல்நெஞ்சக்காரர்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவர்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் சித்தரித்துக் காட்டினார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
கவனித்துப் பாருங்கள்! உறவுகளைத் துண்டித்து வாழும் கல்நெஞ்சக்காரர்களுடன் பொறுமையை மேற்கொண்டு, இணக்கமாக இருப்பவருக்கு அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்கிறான். அவர்களால் எற்படும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறான். அந்த மனிதநேயமிக்க உயர்வான பண்புகளில் அவரை ஸ்திரப்படுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் பாவத்தில் மூழ்கிய அந்த வன்நெஞ்சக்காரர்களைச் சுடும் சாம்பலைத் தின்பவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியது எவ்வளவு அற்புதமான உவமானம்?
உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் தனது உறவினர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இந்த இணக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். உறவினரிடமிருந்து அவ்வப்போது நிகழும் தவறுகள், மூடத்தனங்களை பொருட்படுத்தாதிருக்க வேண்டும். அவர்களிடம் எற்படும் அலட்சியம் மற்றும் சிறு குறைகளைப் புறக்கணித்துவிட வேண்டும்.
எனெனில், ""இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். "எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செவியுறும் உண்மை முஸ்லிம் உறவினர்களின் இதுபோன்ற மூடத்தனமான, அற்பத்தனமான செயல்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் நேசமாக நடந்து கொள்ள வேண்டும்.
------------------------------------------
கட்டுரையை அனப்பி த்தந்த திருப்பந்துருத்தி முஹம்மது அமீன் அவர்களுக்கு நன்றி