ஊருக்கு ஊர் கொடி மரங்கள் நட்டு பச்சைக் கொடியை அதில் பறக்க விட்டு. புனிதம் என்று கருதி பூமாலைப் போட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி, ஆண்டு தோறும் கொடியேற்று விழா நடத்துவது பல் வேறு ஊர்களிலும் பழக்கத்தில் உள்ளது.
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் தான் பெரும்பாலும் இந்தக் கொடிகள் ஏற்றப் படுகின்றன. அப்துல் காதிர் ஜீலான் (ரஹ்) அவர்களுக்கும் இந்தக் கொடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற சாதாரண அறிவு கூடச் சமுதாய மக்களிடம் இல்லாமல் போனது எப்படி?
கொடியை வணங்கும் இக் கொடிய பழக்கம், இஸ்லாமிய சமுதாயத்தில் இடம் பிடித்தது எப்படி?
பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரால் கூட உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத கொடிகள் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறியது எப்படி?
நாட்டுக்கு நாடு கொடிகள் உண்டு. கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுவது உண்டு. போர்க் களங்களிலும் போராட்டக் களங்களிலும் கொடிகள் உண்டு. அரசியல் கட்சிகளுக்குக் கொடிகள் உண்டு.அவ்லியாக்கள் பெயரால் கொடிகளை எந்தக் கொடியவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்றி வைத்தார்கள்?
இவர்கள் கொடி மரங்களில் கொடிகளை ஏற்ற வில்லை.
ஏதுமறியா பாமர மக்களின் ஈமானைக் கழுவில் ஏற்றி விட்டார்கள்.
மார்க்கம் அறியாத மக்களின் பக்தியை மரத்தில் ஏற்றி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கூண்டில் ஏற்றி விட்டார்கள்.
இறையச்சத்திற்குப் பதிலாக இணை வைத்தல் என்னும் ஷிர்க்கை இதயத்தில் ஏற்றி விட்டார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகும் சரி, எந்த நபித் தோழரும் இப்படிக் கொடியேற்றிக் குதூகலிக்க வில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற இச்சம்பவம் ஒரு மரத்தடியில் நடை பெற்றது. நாளடைவில் அந்த மரத்தை மக்கள் புனிதமாகக் கருதலாயினர். ஹஜ்ரத் உமர் (ரலி) உடனே அந்த மரத்தை வெட்டி எறியும்படி உத்தரவிட்டார்கள்.
மூட நம்பிக்கையின் வாயில்கள் எல்லா வகையிலும் மூடப்பட்ட ஒரு மார்க்கத்தில், சின்னஞ்சிறு விஷயத்தில் கூட ஷிர்க் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் சில கொடியவர்கள் இந்தக் கொடியேற்றப் பழக்கத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டனர்.
புகழ் மிக்க இறை நேசர்கள் பெயரால் - ஊருக்கு ஊர் தர்காக்களை உருவாக்க முடியாமல் கொடி மரங்கள் வைத்துக் கொள்ளிக் கட்டைகளால் தம் அரிப்பைச் சொரிந்துக் கொள்ளும் கொடியவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
கொடி மரங்களுக்கு மகிமை உண்டென்று மனதால் கூட நம்புவதும், அவற்றைப் புனிதம் என்றுக் கருதி சுற்றி வருவதும், தொட்டு முத்தமிடுவதும். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நேர்ச்சை செய்வதும், காணிக்கை செலுத்துவதும், மார்கத்தில் கொடிய குற்றம் என்பதை இனியேனும் உணர வேண்டும்.
இறை நேசர்கள் மீதுள்ள கண்ணியம் நமது இதயத்தில்.
கொடிய குற்றத்தை ஏற்படுத்தும் கொடிகள் இனி நமது காலடியில்.
----------------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து