வெள்ளிக் கிழமை இரவுகளிலும், மற்றும் புனித நாட்களிலும், பள்ளிகளில் திக்ரு செய்யப் படுகின்றது. ராத்திபு என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த திக்ருகளில் காதிரியா, ஷாதுலியா, ஜலாலியா, என்று எத்தனை பாகுபாடுகள்!
அல்லாஹ்வின் பள்ளிகளில் ஒலி பெருக்கியை வைத்துக் கொண்டு, உரத்த சப்தத்துடன் கூச்சல் போடுவது திக்ரு செய்யும் முறையல்ல. எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அல்லாஹ்வே கூறுகிறான்.
(நபியே) நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனின் (திரு நாமத்தை) திக்ரு செய்துக் கொண்டு இருப்பீராக. (அல் குர்ஆன் 7:205)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம்.உடனே நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கோ இருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாக செவியேற்பவனும் அருகில் இருப்பவனுமாகிய அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்.'
எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆதாரம்: புகாரி)
குர்ஆனின் அடிப்படையிலும் நபி மொழி அடிப்படையிலும் உரத்த சப்தமின்றி மெதுவாகத் தான் திக்ரு செய்ய வேண்டும்.
இல்லல்லாஹ் என்றும் ஹூ ஹூ என்றும் சிலர் திக்ரு செய்கின்றனர். 'இல்லல்லாஹ்' என்றால் 'அல்லாஹ்வைத் தவிர' என்று பொருள். ஹூ ஹூ என்றால் அவன் அவன் என்று பொருள். இது போன்ற வாக்கியம் முழுமை பெறாத, அர்த்தமற்ற திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் உருவாக்கிய இது போன்ற அர்த்தமற்ற திக்ருகளை அடியோடு ஒதுக்கி விட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை, அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும். மார்க்க விஷயங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை என்பதை உணர வேண்டும்
0 comments:
Post a Comment