இறைத் தூதர்கள் பலருக்கும், இறைவன் அளித்த அற்புதங்கள் அனைத்தும், இறைவனின் அனுமதியுடன் நடத்தப் பட்டதாக இறை மறை குர்ஆன் கூறுகிறது.உதாரணத்திற்கு ஒரு வசனம்.ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது....
இன்னும் நீர் களி மண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி, அதில் நீர் ஊதிய போது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும், சுகப் படுத்தியதையும், இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப் படுத்தியதையும், (நினைத்துப் பாரும்.).... (அல் குர்ஆன் 5 : 10)
இந்த வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஒவ்வொரு அற்புதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும், மீண்டும் மீண்டும் என் உத்தரவைக் கொண்டு என்னும் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான் என்பதும், நபிமார்கள் கூட தம் விருப்பத்துக்கு எதையும் செய்ய வில்லை என்பதும், அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டே அனைத்து அற்புதங்களும் நிகழ்ந்தன என்பதும் புரியும்.
ஆனால் அவ்லியாக்கள் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகள் பெரும்பாலும் அவ்லியாக்கள் அவரவர் விருப்பப்படி தாமே நிகழ்த்தியவையாகவும், மார்க்கத்திற்கு முரணானவையாகவும் இருக்கும். அவ்லியாக்களின் சரித்திரங்களை எழுதியவர்கள் அப்படித்தான் கதைகளை சித்தரிக்கின்றனர்.
அவ்லியாக்களின் பெயரால் கூறப்படும் கதைகளைக் கவனித்தால்- இந்தக் கதைகளுக்கும் அந்த இறை நேசர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இந்தக் கதைகள் அனைத்தும் அந்த இறை நேசர்களைக் கேவலப் படுத்தும் கதைகள் தானே தவிர, இறை நேசர்கள் புகழை உயர்த்தும கதைகளல்ல என்பதும் புரியும்.
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) தம் சீடர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்களாம். சீடர்கள் 'பசிக்கிறது' என்று கூற அங்கிருந்த ஒரு சேவலைப் பிடித்து அறுத்து அனைவரையும் சாப்பிடச் சொன்னார்களாம். சேவலுக்கு உரிமையாளர் வந்து 'எனது சேவல் எங்கே?' என்று கேட்க, தின்று விட்டுப் போட்ட சேவலின் எலும்புகளை ஒன்று கூட்டி கும் பி இத்னில்லாஹ் என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூற சேவல் உயிர் பெற்று எழுந்நததாம்.
இது ஒரு பிரபல்யமான கதை. பல் வேறு இடங்களிலும் இந்தக் கதையின் நாயகர்கள் மாறுவார்கள். அல்லது பிராணிகள் மாறும்.கதை என்னவோ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
அடுத்தவர் பிராணியை அவரின் அனுமதியின்றி எந்த இறை நேசராவது அறுத்துச் சாப்பிடுவாரா? அறுத்துச் சாப்பிட்டது உண்மையென்றால் அவர் எப்படி அவ்லியாவாக இருக்க முடியும்? இந்த அளவுக் கெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. அடுத்தவர் பிராணியை அனுமதியின்றி அறுத்துச் சாப்பிடுவது ஹராம் ஆயிற்றே! ஹராமானதைச் சாப்பிட்டு விட்டு கும் பி இத்னில்லாஹ் என்று சொன்னால், அல்லாஹ் எப்படி எற்றுக் கொள்வான்? அடுத்தவர் பிராணியைத் திருடிச் சாப்பிட்டு விட்டுத் தனது அற்புதத்தை நிரூபிப்பதை விட, தனது மந்திரச் சக்தியால் ஒரு பிராணியையே வரவழைத்திருக்கலாமே!
நாகூரில் அடக்கமாகி இருப்பதாகக் கூறப்படும் இறை நேசர், வெற்றிலையை மென்று ஒரு பெண்ணுக்குக் கொடுத்துக் குழந்தை பிறக்க வைத்தாராம்! இயற்கை நியதிக்கும், இறைவனின் ஏற்பாட்டுக்கும், முரணான இது போன்ற முட்டாள் தனத்தை எல்லாம் அற்புதம் என்று நம்புவது மிகப் பெரும் பாவம்.
உலக வரலாற்றிலேயே அற்புதமாகக் குழந்தை பிறந்தது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் தான். ஈஸா நபி (அலை) அவர்கள் பிறந்த அற்புதத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.இதைத் தவிர, மற்ற அனைத்தும் கட்டுக் கதைகளே! இது போன்றக் கதைகளை நம்புவது இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். ஜாக்கிரதை!
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
0 comments:
Post a Comment