முஸ்லிம் தனது உறவினர், இரத்த பந்துக்களுடன்
இரத்த பந்துக்கள்
உண்மை முஸ்லிமின் உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் உறவினர் மற்றும் இரத்த பந்துக்களையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுடன் உதவியும் உபகாரமும் நல்லுறவும் பேணப்பட வேண்டும். "அர்ஹாம்' என்பவர்கள், மனிதனுடன் பரம்பரை உறவின் மூலம் இணைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் வாரிசுரிமையைப் பெறுவார்கள், சிலர் பெறமாட்டார்கள்.
இரத்த பந்துக்களுக்கு இஸ்லாம் தரும் கண்ணியம்
இஸ்லாம் இரத்த பந்துக்களுக்கு அளிக்கும் கண்ணியமும் கெªரவமும் மனிதகுலம் எந்த மதங்களிலும் அறிந்திராத ஒன்றாகும். அகவே இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று வலியுறுத்தி, இரத்த பந்துக்களை துண்டிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இரத்த பந்துக்களைப் பேணுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று இதற்கு மிகச் சிறந்த அதாரமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""அல்லாஹு தஅலா படைப்பினங்களைப் படைத்தான். அவைகளைப் படைத்து முடித்தபோது அல்லாஹ்விடம் இரத்த பந்தம் நின்று, ""இது உறவை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவர் நிற்கும் சமயமாகும்'' என்று கூறி மன்றாடியது. அல்லாஹ் ""ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவர்களை நான் சேர்த்துக் கொள்வேன்; உன்னைத் துண்டிப்பவர்களை நான் துண்டித்துக் கொள்வேன் என்பதை நீ பொருந்திக் கொள்கிறாயல்லவா?'' என்று கூறினான். அதற்கு இரத்த பந்தம் "ஆம்!'' (நான் பொருந்திக் கொண்டேன்) என்றது. அல்லாஹ் ""அது உனக்குரியதாகும்'' என்று கூறினான்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பினால் ஒதிக் கொள்ளுங்கள். "நயவஞ்சகர்களே! நீங்கள் (யுத்தத்திற்கு வராது) விலகிக்கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் இரத்த பந்துக்களைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா'' இத்தகையோரை அல்லாஹ் சபித்து அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கிவிட்டான். (அல்குர்அன் 47:22,23) (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவர்களுக்கு உபகாரம் செய்வது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும், அந்தக் கடமைகளில் குறைகளை எற்படுத்தி உறவினருக்கு அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் திருக்குர்அன் வலியுறுத்தி கூறுகிறது.
...ஆகவே, அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்பு பந்தத்துவத்திற்கும் (மதிப்பளியுங்கள்)... (அல்குர்அன் 4:1)
இரத்த பந்தத்தின் மகத்துவத்தை உணர்த்தவும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அதை இறையச்சத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.. அல்லாஹ்வை விசுவாசிப்பது, பெற்றோருக்கு உபகாரம் செய்வது ஆகிய இவ்விரண்டு கடமைகளுக்குப் பின் இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று திருக்குர்அனின் பெரும்பாலான வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்....(அல்குர்அன்17:23) இதை அடுத்து சில வசனங்களுக்குப் பின், பந்துக்களுக்கும், எழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (அல்குர்அன் 17:26)
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், எழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்அன் 4:36)
இத்திருவசனத்தில் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்கு அடுத்ததாக உறவினர்களின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனித உறவுகளை சீர்படுத்துவதில் மேலிருந்து படிப்படியாக கீழே கொண்டுவரும் திருக்குர்அனின் கண்ணோட்டமாகும். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும் உபகாரம் செய்து, பின்பு மகத்தான மனித வாழ்வில் தேவையுடைய அனைத்து அங்கத்தினருக்கும் உபகாரம் செய்ய வேண்டுமென ஏவப்பட்டுள்ளது. முதலில் மிக நெருங்கியவர்களுக்கு உபகாரம் செய்வதையே மனம் விரும்பும் என்ற மனித இயல்புக்கேற்ப இவ்வாறு வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் ஒவ்வொருவரும் வரிசையாக கொண்டு வரப்பட்டுள்ளார்கள். சமூகத்திற்கான உதவியை, முதலில் குடும்ப வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு உறவு வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் செய்யவேண்டுமென விரிவாக்கப்படுகிறது. மனித வாழ்வை இன்பமானதாகவும் அழகானதாகவும் இவ்வரிசைமுறை அமைத்துத் தருகிறது.
இரத்த பந்துக்களை நேசிப்பது மிக முக்கியமான இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரசாரத்தை ஆரம்பித்து, இப்புனித மார்க்கத்தை உலகில் பரவச் செய்த காலத்திலிருந்தே இதுபெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அது மார்க்கத்தின் மாண்புகளை வெளிப்படுத்துவதாகவும், சிறந்த போதனையாகவும் அமைந்துள்ளது.
இதற்கு அபூ சுஃப்யான் (ரழி) அவர்களிடம் மன்னன் ஹிர்கல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆதாரமாகும். அவர் அபூ ஸுப்யானிடம் ""உங்கள் நபி எதை எவுகிறார்?'' என்று கேட்டதற்கு ""அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு யாதொரு இணையும் வைக்கக்கூடாது, எங்கள் மூதாதைகள் சொல்லிக் கொண்டிருந்ததை விட்டுவிட வேண்டுமென்றும், தொழுகை, வாய்மை, ஒழுக்கம், உறவினரோடு இணைந்து வாழ்வது ஆகிய நற்குணங்களையும் எங்களுக்கு ஏவுகிறார்'' என அபூ ஸுப்யான் (ரழி) பதிலளித்தார்கள்.
உறவுகளைப் பேணுவது இம்மார்க்கத்தின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வின் ஏகத்துவம், தொழுகையை நிலைநாட்டுதல், ஒழுக்கத்தையும் தர்மத்தையும் பற்றிப்பிடித்தல் போன்ற பண்புகளுடன் உறவுகளோடு சேர்ந்திருப்பதும் மார்க்கத்தின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
அம்ரு இப்னு அன்பஸா (ரழி) அவர்களின் நீண்ட ஒரு அறிவிப்பில் இஸ்லாமின் அடிப்படைகளும் ஒழுக்கப் பண்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறுகிறார்கள்: மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களை சந்திக்கச் சென்றேன். அதாவது நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அவர்களிடம் நான் கேட்டேன்: ""நீங்கள் யார்? அவர்கள் ""நபி'' என்று கூறினார்கள். நான் "நபி என்றால் யார்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்: ""அல்லாஹ் என்னை தூதராக்கி அனுப்பி இருக்கிறான்'' என்றார்கள். நான் கேட்டேன்: ""எந்த விஷயத்தைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்தான்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""இரத்த பந்துக்களோடு இணைந்து வாழுமாறும், சிலைகளை உடைத்தெறியுமாறும், அல்லாஹ்வை ஏகனாக ஏற்று, அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்பதைக்கொண்டும் அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான்...'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் இந்த சுருக்கமான விளக்கத்தில் இஸ்லாமின் அடிப்படைகளை தெளிவுபடுத்தி இரத்த பந்தத்தை முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ், அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கிய இம்மார்க்கத்தில் உறவைப் பேணுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான அந்தஸ்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. இரத்த பந்துக்களை இணைத்து வாழ்வதன் அவசியம் குறித்தும், அதை துண்டித்து வாழ்பவர்களை எச்சரித்தும் எராளமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.
அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ""அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதை அல்லாஹ்வை வணங்குவது, அவனை ஏகத்துவப்படுத்துவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது என்ற கட்டாயக் கடமைகளுடன் இணைத்து ஒரே வரிசையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இரத்த பந்துக்களுடன் இணைந்திருப்பது அதைச் செய்பவர்களுக்கு சுவனத்தையும், நரகத்திலிருந்து பாதுகாப்பையும் அளிக்கும் ஸாலிஹான அமல்களில் உள்ள ஒன்றாகிவிடுகிறது.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வது அவரது ஆகாரத்திலும் ஆயுளிலும் அபிவிருத்தியை அருளச்செய்கிறது.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவரின் செல்வம் அதிகரிக்கிறது, ஆயுள் கூடுகிறது, இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருள் அவரை மூடிக்கொள்கிறது, அவருக்கு மனிதர்களின் நேசத்தை எற்படுத்தித் தருகிறது என்று மேற்கூறிய அதாரங்களிலிருந்து விளங்கிக் கொண்டோம்.. அதுபோலவே பல நபிமொழிகள் உறவுகளைத் துண்டிப்பவருக்கு அது தீமையாகவும், மனிதர்களின் வெறுப்பையும், அல்லாஹ்வின் கோபத்தையும் எற்படுத்தி, மறுமையில் சுவனத்திலிருந்து அவரை தூரமாக்கி வைக்கவும் காரணமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது.
உறவுகளைத் துண்டித்து வாழ்பவனின் அழிவுக்கும் இழிவுக்கும் பின்வரும் நபிமொழியே சான்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""இரத்த பந்துத்துவத்தை துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான்.'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அது மட்டுமல்ல. அத்தீயவன் இருக்கும் சபைகளுக்குக் கூட அல்லாஹ்வின் அருள் கிட்டாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)
இதனால்தான் பிரபல நபித்தோழரான அபூஹுரைரா (ரழி) அவர்கள் தங்களது சபையில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் இருக்கும்போது துஆச் செய்ய விரும்பமாட்டார்கள். எனெனில் அம்மனிதர் அந்த சபையில் இருப்பது அல்லாஹ்வின் அருள் இறங்குவதையும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதையும் தடுத்து விடும் என்பதுதான் காரணமாகும்.
ஒவ்வொரு ஜும்ஆ இரவிலும் நடைபெறும் அவர்களது சபையில் ஒரு நாள் ""உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் நம்மிடம் அமர வேண்டாம், வெளியேறிவிடட்டும்!'' என்று மூன்று முறை சொன்னார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை..
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வாலிபர் மட்டும் தான் இரண்டு வருடமாக பேசாதிருந்த தனது தந்தையின் சகோதரியை (மாமியை) சந்திக்க வந்தார். அப்போது அவரது மாமி ""உன்னை இங்கே வரத் தூண்டியதற்குரிய காரணம் என்ன?'' என்று வினவினார். அதற்கு அவர் அபூஹுரைரா (ரழி) அவர்களின் சபையில் நடந்த சம்பவத்தை விவரித்து கூறினார். இதனைக் கேட்ட அவரது மாமி அதற்கான காரணத்தை விசாரித்து வருமாறு அவரிடம் கூறினார். அவர் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் கூறச் செவியுற்றுள்ளேன். நிச்சயமாக மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் வியாழன் மாலை வெள்ளி இரவு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது உறவைத் துண்டித்தவனின் அமல்கள் எற்றுக் கொள்ளப்படுவது இல்லை. (முஸ்னத் அஹ்மத்)
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் மறுமையின் வெற்றியையும் ஆசிக்கும் முஸ்லிமின் இதயம் இச்சான்றுகளைக் கண்டால் திடுக்கிட்டுவிடும். எனெனில், உறவுகளைத் துண்டிப்பது அல்லாஹ்வின் அருளுக்குத் திரையிடுகிறது. பிரார்த்தனைகள் மறுக்கப்படவும் நற்செயல்கள் வீணடிக்கப்படவும் காரணமாகிறது. உண்மையிலேயே இது மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் மாபெரும் சோதனையாகும். இவ்வாறான தண்டனைகளை அறிந்துணரும் முஸ்லிம் ஒருபோதும் உறவுகளைத் துண்டிக்கமாட்டார்.
அல்லாஹ்விற்கு வழிப்பட்டு அவனது பொருத்தத்தைத் தேடும் முஸ்லிம் ஒருபோதும் உறவைத் துண்டிக்கும் குற்றத்தை செய்யமாட்டார். இக்குற்றத்தை செய்பவன் மிகத் துரிதமாக தண்டிக்கப்படுவான். இக்குற்றவாளிகளை மறுமையில் தண்டிப்பதற்கு முன்பாகவே உலகிலும் அல்லாஹ் தண்டித்துவிடுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை..'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
உறவைத் துண்டிப்பது, அக்கிரமம் செய்வது ஆகிய இரண்டும் இரு வகையான குற்றமாகும். அன்பின் கயிற்றை அறுத்து பாச ஊற்றுகளை வறண்டு போக வைப்பதைவிட பெரும் அநீதம் எதுவாக இருக்க முடியும்? எனவேதான் இரண்டையும் நபி (ஸல்) அவர்கள் ஒன்றிணைத்துக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்த பந்துத்துவம் அல்லாஹ்விடம் இணைக்கப்பட்டதாயிருக்கும். அது ""இறைவனே! நிச்சயமாக நான் அநீதி இழைக்கப்பட்டுள்ளேன். இறைவனே! நான் துண்டிக்கப்பட்டுள்ளேன்....''என்று கூறுகிறது. அல்லாஹ் அதற்கு ""உன்னைத் துண்டித்தவனை நான் துண்டித்துவிடுகிறேன். உன்னை சேர்த்துக்கொள்பவரை நான் சேர்த்துக்கொள்கிறேன் என்பதை நீ திருப்தி கொள்ளவில்லையா?'' என்று பதில் கூறுகிறான். (அல் அதபுல் முஃப்ரத்)
அல்லாஹ் "ரஹிம்' என்ற இரத்த பந்தத்தை மிகவும் உயர்த்தியுள்ளான். அதை தனது ரஹ்மான் என்ற பெயரிலிருந்து பிரித்தெடுத்துள்ளான்.
அல்லாஹ் அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.. யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)
இதில் முஸ்லிமுக்கு ஒரு சான்று உள்ளது. இரத்த பந்துக்களுடன் இணைந்திருந்தால் அவரை அல்லாஹ் தனது அருட்கொடையின் இன்பமான நிழலில் வீற்றிருக்கச் செய்கிறான். உறவைத் துண்டித்து வாழ்பவன் அம்மாபெரும் அருட்கொடையிலிருந்து தூக்கி எறியப்படும் துர்பாக்கியவனாவான்.

முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
உறவினரோடு இணைந்திருக்கும் முஸ்லிமை உலகாதாயங்களோ, சொத்துகளோ, மனைவி, மக்களோ அந்த உறவினர்களுக்கு செலவிடுவதையும் உபகாரம் செய்து கண்ணியப்படுத்துவதையும் தடுத்துவிடக்கூடாது. அவர் இது விஷயத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதலை துணையாகக் கொள்வார். அந்த உறவுகளுக்கு உபகாரம் செய்வதில் முக்கியத்துவம் மற்றும் நெருக்கத்தை வைத்து வரிசைப் படுத்துவார். முதலில் தாய், பின்பு தந்தை, அடுத்து நெருக்கமான உறவினர்கள் என அந்த வரிசை நீண்டு செல்லும்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் தனது உறவினருக்கு உதவி செய்தால் இரட்டைக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார். உறவினருக்கு உதவியதின் நன்மையும், தர்மத்தின் நன்மையும் கிடைக்கிறது. அதனால் உறவினர்கள் தேவையுடையவர்களாக இருந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளானால் அதிகமதிகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் அல்லாஹ்விடம் அவர் நற்கூலியையும், உறவினர்களிடம் நேசத்தையும் பெற்றுக் கொள்கிறார். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பி, வலியுறுத்தியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ""பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். எனவே என் கணவரிடம், "நீங்கள் மிகக் குறைந்த செல்வம் உடையவர்களாக இருக்கிறீர். நபி(ஸல்) அவர்கள் எங்களை தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். நான் உங்களுக்கு தர்மம் செய்வது ஆகுமானதாக இருப்பின் அந்தத் தர்மத்தை உங்களுக்கே செய்துவிடுகிறேன். இல்லையென்றால் பிறருக்குக் கொடுத்து விடுகிறேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், "நீயே சென்று கேள்'' என்று கூறிவிட்டார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னைப் போலவே இதே தேவையை முன்னிட்டு இன்னொரு அன்சாரிப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களின் வாசலில் காத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் மீது எங்களுக்கு கண்ணியம் கலந்த பயம் இருந்தது.
அந்நேரத்தில் எங்களுக்கு அருகில் பிலால் (ரழி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் எங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: "உங்களது வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் இரண்டு பெண்கள் "கணவனுக்கும், தங்களது அரவணைப்பில் வாழும் அநாதைகளுக்கும் தர்மம் அளிப்பது அவர்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போதுமானதா?' என்று கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் யார் என்று நீங்கள் கூறாதீர்கள்'' என்று கூறி அனுப்பினோம்.
பிலால் (ரழி) ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்களிடம் வந்து இக்கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவ்விருவரும் யார்?'' என்று கேட்க பிலால் (ரழி) அவர்கள் ""ஒருவர் அன்சாரிப் பெண், மற்றொருவர் ஜைனப்'' என்று கூறினார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவர் எந்த ஜைனப்?'' என்று கேட்டார்கள். ""அப்துல்லாஹ்வின் மனைவி ஜைனப்'' என்று பிலால் (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள். பின்பு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "அவ்விருவருக்கும் இரண்டு கூலிகள் இருக்கின்றன. ஒன்று உறவின் கூலி. மற்றொன்று தர்மத்தின் கூலி'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஏழைகளுக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டும் இருக்கும். ஆனால் உறவினருக்கு தர்மம் செய்வதில் இரண்டு நன்மை கிடைக்கும். ஒன்று தர்மத்தின் நன்மை. இரண்டாவது உறவினருக்கு உபகாரம் செய்த நன்மை.'' (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் நெருங்கிய உறவினருக்கு உபகாரம் செய்வதன் மாண்புகளை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' (அல்குர்அன் 3:92) என்ற திருவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் "பைருஹா' என்னும் தோட்டமாகும். நான் அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன். அது எனக்கு அல்லாஹ்விடம் நன்மையாகவும் சேமிப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். எனவே, "அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ""ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்றுவிட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரழி) ""அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!'' எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினர்களுக்கும், தமது தந்தையுடன் பிறந்தவரின் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ காலங்களுக்கு முன் ஏற்பட்ட உறவுகளை நினைவுபடுத்தி தற்காலத்திலும் அதற்குரிய மரியாதை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தற்காலத்திலும் மிஸ்ரு தேசத்தவரை நேசிக்குமாறு ஏவி, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நீங்கள் விரைவில் மிஸ்ரை வெற்றி கொள்ளப் போகிறீர்கள். அப்படி வெற்றி கொண்டால் அம்மக்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நம்முடன் பாதுகாவலும் இரத்த பந்தமும் இருக்கிறது''. மற்றோர் அறிவிப்பில் ""பாதுகாவலும் திருமண உறவும் இருக்கிறது'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அறிஞர்கள் இதன் விரிவுரையில் இரத்த பந்தம் என்று கூறியது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் "ஹாஜர்' மிஸ்ர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனாலாகும். திருமண பந்தம் என்பது நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீமின் தாய் "மாரியா' (ரழி) அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதாகும்.
உறவைப் பேணுவதிலும் உபகாரம் புரிவதிலும் இஸ்லாமின் அணுகுமுறை எவ்வளவு உயர்ந்தது! காலங்கள் பல கடந்து தலைமுறைகள் பல உருவானாலும் இரத்த உறவையும் திருமண உறவையும் பேண வேண்டும் என்று எவ்வளவு அழகாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இத்தகைய அழகிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம் தனது முழு முயற்சியையும் இரத்த பந்தத்தைப் பேணி அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு செலவழிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
முஸ்லிமல்லாத இரத்த பந்துக்களுடனும் இணக்கமாக இருப்பார்
இஸ்லாம் மனித நேயத்தில் மேலோங்கி நிற்கிறது. இரத்த பந்துக்கள் முஸ்லிம்களாக இல்லையென்றாலும் அவர்களுடன் இணைந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.
ஆம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்... (அல்குர்அன் 27:214) என்ற இந்த இறைவசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை அழைத்தார்கள். சிலரைக் குறிப்பிட்டும் சிலரைப் பொதுவாகவும் அழைத்துக் கூறினார்கள்: ""அப்து ஷம்ஸ் கிளையார்களே! கஅப் இப்னு லுவய்யி கிளையார்களே! உங்களை நரகிலிருந்து பாதுகாத் துக் கொள்ளுங்கள். முர்ரா இப்னு கஅபின் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்து முனாஃப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஹாஷிம் கிளை யார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஓபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள். நிச்சயமாக உனக்கு அல்லாஹ்விடமிருந்து நான் எதையும் செய்வதற்கு உரிமையற்றிருக்கிறேன்.. ஆனால் உங்களுக்கு (என்னுடன்) இரத்த பந்தம் என்ற உறவு இருக்கிறது. அதை நான் உபகாரத்தால் ஈரமாக்குவேன்'' என்றார்கள். (ஸஹீஹ்முஸ்லிம்)
உறவினருடனான மனித நேயமானது முஸ்லிமின் இதயத்திலிருந்து எந்த நிலையிலும் நீங்கிவிடாது. உறவினர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் சரியே! நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தத்தை பூமியுடன் ஒப்பிட்டார்கள். இந்த இரத்த பந்தம், "உபகாரம் செய்தல்' என்ற நீர் உற்றப்படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.. (ஹீஹுல் புகாரி)
இஸ்லாம் முஸ்லிமல்லாத பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு கட்டளையிட்டதை முன்புள்ள பாடத்தில் படித்தோம். இங்கு முஸ்லிமல்லாத உறவினருக்கும் உபகாரம் செய்யக் கட்டளையிடுகிறது. இது இம்மார்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாகும். ஆனால் இது இஸ்லாமைப் பொறுத்தவரை ஆச்சரியத்திற்குரியதல்ல. எனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறான்.
(நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஒர் ஆம்ளாகவே அனுப்பியிருக்கிறோம். (அல்குர்அன் 22:107) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றிக் கூறினார்கள்: ""நான் அனுப்பப்பட்டதெல்லாம் நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே.'' (அல் முவத்தா)
இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதன் விசாலமான பொருளை விளங்கிக்கொள்வார்
பொருளை உறவினர்களுக்காக செலவு செய்வது மட்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதாகாது. சேர்ந்து வாழ்வதற்கு பல வழிகள் உண்டு. உதாரணமாக உறவினர்களில் எழையாக இருப்பவர்களுக்கு பொருளைச் செலவு செய்வது, (இது அன்பையும் நேசத்தையும் அதிகரித்து உறவைப் பலப்படுத்தும்) அவர்களைச் சந்திக்கச் செல்வது, அவர்களுக்கு உபதேசம் செய்வது, உதவி, ஒத்தாசை புரிவது, விட்டுக் கொடுப்பது, அழகிய வார்த்தை பேசுவது, மலர்ந்த முகத்துடன் பார்ப்பது போன்றவையாகும்.
மற்றும் இவைகள் அல்லாத பல நல்வழிகளின் மூலமாகவும் உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகக் கூறினார்கள்: ""ஸலாமைக் கொண்டாவது உங்களுடைய இரத்த பந்துக்களை ஈரமாக (பசுமையாக) வைத்திருங்கள்.'' (இந்த ஹதீஸை இமாம் பஸ்ஸார் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமாக பல வழிகளில் அறிவித்துள்ளார்கள். அவைகளில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகிறது. (முஸ்னத் பஸ்ஸார்)
உறவைப் பேணுவார் உண்மை முஸ்லிம் தமது இரத்த பந்துக்கள் தன்னுடைய உறவைப் பேணாமல் விலகிச் சென்றாலும் அவர்களுடன் உறவைப் பேணவேண்டும். உறவைப் பேணுவதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், மேன்மைக்குரிய இஸ்லாமியப் பண்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம், தன்னைப் போன்றே அவர்களும் உறவைப் பேணுபவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமின் மனிதநேயப் பண்புகளை வெளிக்காட்டும் விதமாக அந்த முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் இரத்த பந்துக்கள் மற்றும் ஏனைய உறவினர்களின் உறவைப் பேணி நடப்பார்.
நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். ""பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)
தீமையையும், வன்நெஞ்சத்தையும் கொண்டு உறவுகளைத் துண்டித்து வாழும் இரத்த பந்துக்களுடன் மேன்மையையும், மன்னிப்பையும், பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தி இணைந்திருப்பவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் புகழ்ந்தார்கள். இரத்த பந்துக்கள் இணைந்து வாழ மறுத்தாலும் அவர்களைச் சேர்ந்து வாழ்பவர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இரத்த பந்தத்தைத் துண்டித்து நன்மையை மறக்கும் கல்நெஞ்சக்காரர்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவர்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் சித்தரித்துக் காட்டினார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
கவனித்துப் பாருங்கள்! உறவுகளைத் துண்டித்து வாழும் கல்நெஞ்சக்காரர்களுடன் பொறுமையை மேற்கொண்டு, இணக்கமாக இருப்பவருக்கு அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்கிறான். அவர்களால் எற்படும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறான். அந்த மனிதநேயமிக்க உயர்வான பண்புகளில் அவரை ஸ்திரப்படுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் பாவத்தில் மூழ்கிய அந்த வன்நெஞ்சக்காரர்களைச் சுடும் சாம்பலைத் தின்பவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியது எவ்வளவு அற்புதமான உவமானம்?
உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் தனது உறவினர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இந்த இணக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். உறவினரிடமிருந்து அவ்வப்போது நிகழும் தவறுகள், மூடத்தனங்களை பொருட்படுத்தாதிருக்க வேண்டும். அவர்களிடம் எற்படும் அலட்சியம் மற்றும் சிறு குறைகளைப் புறக்கணித்துவிட வேண்டும்.
எனெனில், ""இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். "எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செவியுறும் உண்மை முஸ்லிம் உறவினர்களின் இதுபோன்ற மூடத்தனமான, அற்பத்தனமான செயல்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் நேசமாக நடந்து கொள்ள வேண்டும்.
------------------------------------------
கட்டுரையை அனப்பி த்தந்த திருப்பந்துருத்தி முஹம்மது அமீன் அவர்களுக்கு நன்றி

மரணத்திற்குப் பின்

எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்ககின்றனர். (அல்குர்ஆன் 26: 221, 222)
மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுபற்றி நாம் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளத் தேவையுமில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது திருத்தூதரும் நமக்கு போதுமான விளக்கத்தை தந்துள்ளனர்.
குர்ஆன், ஹதீஸை ஆராய நேரமில்லாதவர்கள் இறந்தவர்களின் உயிர் பற்றி தவறான கருத்துகள் கொண்டுள்ளனர். அதனை மக்களிடமும் பிரச்சாரம் செய்கின்றனர். "இறந்து போன நல்லவர்களை நாம் பலமுறை அழைக்கும்போது அவர்கள் அந்த இடத்துக்கு ஓடி வருகிறார்கள். இது நம்மில் சிலரது நம்பிக்கை. வேறு சிலர் "இறந்து போன நல்லவர்களின் உயிர்கள் உயிருடன் உள்ளவர்களின் உள்ளெ இறங்கி பேசுகின்றன" என்று கருதுகின்றனர். இரண்டுமே தவறான நம்பிக்கையாகும்.
நல்லடியாபுகளில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்" அடைந்தோர் பெறுகின்றனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் "அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரை மரித்தவர்கள் என்று நிச்சயமாக நீங்கள் எண்ணாதீர்கள்!" தம் ரப்பினிடத்தில் (இறைவனிடத்தில்) அவர்கள் உயிருடனே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:196)
அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன," என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊது(ரழி)
இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீதுகள் தங்களுக்கு கிடைத்த இந்தபெரும் பேறை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்காக அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் "உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலகமக்களுக்கு அறிவிக்கிறேன்" என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தனர். ஆதாரம் : அபூதாவூது அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் "அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை" என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன,
"அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்" (அல்குர்ஆன் 18:108)
அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது. ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.
கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் காட்டி "இதுவே கியாமத் வரை உனது தங்குமிடமாகும்" என்று மலக்குகள் கூறுவர் (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)
"கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த உடன் நான் எனது குடும்பத்தினரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்க்கை பற்றி கூறிவிட்டு வருகிறேன்" என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனைப் போல் அயாந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)
கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த பின் சுவனத்து ஆடை அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : அபூதாவூது, அறிவிப்பவர்: பரா, இப்னு ஆஸி
மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் "சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்" என்றும், "இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர்" என்றும் அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படமாட்டாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகின்றது.
இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ, யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும், மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.
மனிதனது உடலக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல. அதனை நாம் இக்கட்டுரையின் துவக்கத்தில் எழுதிய குர்ஆன் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீது தான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.
நல்லடியார்கள் தங்களுக்கு வல்ல அல்லாஹ்வால், தரப்பட்டிருக்கும் அளவிடமுடியாத பெரும் சுகவாழ்வை அனுபவித்துக் கொண்டுள்ளனர். சுவனத்து இன்பங்களில் திளைத்தவர்களாக உள்ளனர். சுகமான நித்திரையில் இருக்கின்றனர்.
அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள், அழிந்துவிடக் கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்?
நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.
"அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு "பிர்தவ்ஸ்" என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)
இந்தத் திருக்குர்ஆன் வசனமும் இந்த உண்மையைத் தான், நமக்கு உணர்த்துகிறது. "உயிரே ஓடி வா" என்று அழைத்தவுடன் எவரது உயிரும் இங்கே வரப்போவதுமில்லை. பிறரது உடலுக்குள் புகுந்து கொள்வதுமில்லை.
உறுதியான ஈமான் இல்லாதவாகளிடமும், தீய செயல் புரிவோரிடமும் கோழை மனது கொண்டவர்களிடமும், ஷைத்தான்கள் ஊடுருவிக் கொண்டு உளறுகின்றவைகளைக் கண்டு, பாமர மக்கள் "வலியுல்லா" வந்து விட்டதாக நம்பி வருகின்றனர். இவ்வாறு நம்புவதன் மூலம், சுவனத்து இன்பங்களையும், அல்லாஹ்வின் நேசர்களையும், அவமதிக்கின்றனர்.
அல்லாஹ் இதுபோன்ற தவறான நம்பிக்கை கொள்வதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! ஆமீன்!!
அந்நஜாத்: ஜுலை,1986


திக்ரு செய்வது எப்படி?

வெள்ளிக் கிழமை இரவுகளிலும், மற்றும் புனித நாட்களிலும், பள்ளிகளில் திக்ரு செய்யப் படுகின்றது. ராத்திபு என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த திக்ருகளில் காதிரியா, ஷாதுலியா, ஜலாலியா, என்று எத்தனை பாகுபாடுகள்!
அல்லாஹ்வின் பள்ளிகளில் ஒலி பெருக்கியை வைத்துக் கொண்டு, உரத்த சப்தத்துடன் கூச்சல் போடுவது திக்ரு செய்யும் முறையல்ல. எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அல்லாஹ்வே கூறுகிறான்.
(நபியே) நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனின் (திரு நாமத்தை) திக்ரு செய்துக் கொண்டு இருப்பீராக. (அல் குர்ஆன் 7:205)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம்.உடனே நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கோ இருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாக செவியேற்பவனும் அருகில் இருப்பவனுமாகிய அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்.'
எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆதாரம்: புகாரி)
குர்ஆனின் அடிப்படையிலும் நபி மொழி அடிப்படையிலும் உரத்த சப்தமின்றி மெதுவாகத் தான் திக்ரு செய்ய வேண்டும்.
இல்லல்லாஹ் என்றும் ஹூ ஹூ என்றும் சிலர் திக்ரு செய்கின்றனர். 'இல்லல்லாஹ்' என்றால் 'அல்லாஹ்வைத் தவிர' என்று பொருள். ஹூ ஹூ என்றால் அவன் அவன் என்று பொருள். இது போன்ற வாக்கியம் முழுமை பெறாத, அர்த்தமற்ற திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் உருவாக்கிய இது போன்ற அர்த்தமற்ற திக்ருகளை அடியோடு ஒதுக்கி விட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை, அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும். மார்க்க விஷயங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை என்பதை உணர வேண்டும்

ஸலவாத்துன்னாரியா

நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான்.
தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, மவ்லிது, புர்தா, ஸலவாத்துன்னாரியா, என்று இந்தக் கூலிப் பட்டாளங்களின் கண்டு பிடிப்புகள் தொடருகின்றன.
இந்த ஸலவாத்தின் கருத்துக்கள் முழுவதும் தவறானவை. அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் நாட்டங்கள் நிறைவேறுவதாகவும், கஷ்டங்கள் தீருவதாகவும், இந்த ஸலவாத்தில் காணப்படுகின்றது. இதற்கெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல் குர்ஆன் 33 : 56)
என்னும் திருமறை வசனம் அருளப்பட்ட போது, நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் 'நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் என்று துவங்கும், அத்தஹிய்யாத்தில் ஓதுகின்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.
அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட நபித் தோழர்கள், ஸலவாத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தான் தெரிந்துக் கொண்டார்கள்.அப்படியிருக்க, யாரோ உருவாக்கிய, அதுவும் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரணான கருத்துக்களை உள்ளடக்கிய ஸலவாத்தை, புனிதம் என்று கருதுவதும், அதைக் கொண்டு நாட்டங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் தீரும் என்று நம்புவதும், மார்க்கத்திற்கே விரோதமானது என்பதை மறந்து விடக் கூடாது.

புர்தாவின் பெயரால் புருடா

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே கஸீதத்துல் புர்தா என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர்;.
எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவ ர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை யாரும் வரம்பு மீறிப் புகழவேண்டாம். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவனது தூதர் என்றுமே கூறுங்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி)
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால்- நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இக்கவிதையை புறக்கனிக்க வேண்டும்.
இந்தப் புர்தாவை ஓதுவதால் கஷ்டங்கள் நீங்கும், நோய் நொடிகள் விலகும், நாட்டங்கள் நிறைவேறும், என்று கருதுவதும், இதற்காக வெள்ளிக் கிழமை இரவுகளிலும், விசேஷ நாட்களிலும், புனிதமாகக் கருதி இதை ஓதுவதும், மார்க்கத்திற்குப் புறம்பானது.
மார்க்கத்தின் பெயரால் இது போன் மடமைகளை அரங்கேற்றி தாமும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுப்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் சடங்குகளாக்கி - புதிதாகப் புகுத்துபவர்கள்- புர்தாவின் பெயரால் புருடாக்கள் விட்டு பகாமர மக்களை ஏமாற்றியவர்கள், இனியாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அறியாமையால் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும்.

முஹ்யித்தீன் மவ்லிது

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!
கொஞ்சம் கூட உண்மை கலக்காமல்- முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளால் ஹிகாயத் என்னும் சம்பவங்களை உருவாக்கி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அப்பட்டமான ஷிர்க்கை எதுகை மோனையுடன் கவிதைகளாகப் புனைந்து, அதற்கு முஹ்யித்தீன் மவ்லிது என்று பெயர் சூட்டி - அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க கட்டப் பட்ட பள்ளிவாசல்களில் ஓதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணரவில்லை.
அரபியில் இருப்பதால் உங்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. அதன் பொருளை உணர்ந்தால் துடிதுடித்துப் போவீர்கள். அந்த அளவுக்கு முஹ்யித்தீன் மவ்லிதின் படல்கள் முழுவதும், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதிக சிறப்புக்கு உரியவராகவும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தராகவும் வர்ணிக்கப் படுகிறார்கள்.
அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத - ஷிர்க் என்னும் கொடும் பாவத்தை ஏற்படுத்தும் - இந்த முஹ்யித்தீன் மவ்லிது நன்மையைத் தருவதற்குப் பதிலாக நரகப் படு குழியில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எச்சிக்கை!நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்.(அல் குர்ஆன் 4: 48) -

சுப்ஹான மவ்லிது

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர்.தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்?
பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய் விடுவார்கள்.
வசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது. ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது. என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும்.இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.
நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.
ஆம் உண்மை தான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை. பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை. வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை. ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை.தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.-
திரு மறை குர்ஆன் இறக்கப்பட்ட காரணங்களை இறைவனே திரு மறையின் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
இந்த வேதம் பயபக்தி உடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (2:2)
இது அகிலத்தாருக் கெல்லாம் உபதேசமாகும்.(81:27)
அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன் மாராயமாகவும் இருக்கின்றது.(46:12)
ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்வதற்கு இறக்கப்பட்டதாகச் சிலர் ஒதுக்கி வைத்து விட்டனர்.
திரு மறையின் ஓர் இடத்தில் கூட, இது இறந்தவர்களுக்கு ஓதுவதற்கு அருளப்பட்டதாகக் கூறப்படவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்யும்படிக் கூறவில்லை.
மார்கத்தின் எந்த ஒரு செயலும், அல்லாஹ் திருமறையில் அறிவித்ததாகவோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ இருக்க வேண்டும். நாமாக நம் விருப்பப்படி எதையும் முடிவு செய்யக் கூடாது.
குர்ஆன் ஓதுவது நன்மை தான். அதில் சந்தேகமேயில்லை.ஆனால் இறந்தவர்களுக்கு ஓத - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓத மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்றால், இல்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட ஏராளமானோர், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மரணித்துள்ளனர். அவர்களில் யாருக்கேனும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி ஹதியாச் செய்ததாக எந்த ஹதீஸிலும் காணப்பட வில்லை.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எந்த ஒரு நபித் தோழரும் அவர்களுக்காக குர்ஆன் ஓதியதாக ஆதாரம் இல்லை.
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது ரத்து செய்யப்படும். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், மறுநாளிலிருந்து தொடங்கி விடும் பாத்திஹாக்களின் அணிவகுப்பு. 3, 5, 7, 10, 15, 20, இப்படியே 40 ஆம் நாள் தடபுடலாகப் பெரிய பாத்திஹா. பிறகு 6 மாதம், 1 வருடம். பின்னர் வருடந்தோறும்.பாத்திஹாக்கள் ஓதி ஓதியே, இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து கடனாளி ஆனவர் பலர். கையில் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியும், கடன் கிடைக்காவிட்டால் வட்டிக்கு வாங்கியும், பாத்திஹா ஓதும் முட்டாள்களை என்னவென்பது? இதனால் இம்மையிலும் நஷ்டம். மறுமையிலும் ஒரு பயனும் இல்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நமது அனுமதி இல்லாத எரு காரியத்தை எவரேனும் செய்தால், அது ரத்து செய்யப்படும்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம். : புகாரி)
இந்த பாத்திஹாக்களின் மூலம் எத்தனையோ ஏழைகளுக்கு வயிறார உணவு கிடைக்கின்றதே, என்றும் இது நன்மை தானே என்றும் சிலர் கூறலாம், பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் புண்ணியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பாத்திஹா ஓதி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
பாத்திஹா ஓதி விருந்தளிப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த உறவினர்களைத் தான் அழைக்கின்றனரே தவிர, பசியால் வாடும் ஏழைகளை மனமுவந்து அழைப்பதில்லை. விருந்து சமயத்தில் வரும் ஒரு சில ஏழைகளுக்கு-வேண்டா வெறுப்பாக- அதுவும் மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. எனவே ஏழைக்கு உணவளிக்க பாத்திஹா ஓதுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.
பெற்றோர்கள் இறந்து விட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் நினைவு நாள் கொண்டாடி பாத்திஹா ஓதுவதில் அர்த்தமில்லை. தினமும் அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.ஒவ்வொரு தொழுகையிலும், தமது பெற்றோர் மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றப் படவும், மறுமையில் நற்பேற்றை அடையவும், இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இஸ்லாம் கூறும் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தச் செலவும் இல்லை.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
ஊருக்கு ஊர் கொடி மரங்கள் நட்டு பச்சைக் கொடியை அதில் பறக்க விட்டு. புனிதம் என்று கருதி பூமாலைப் போட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி, ஆண்டு தோறும் கொடியேற்று விழா நடத்துவது பல் வேறு ஊர்களிலும் பழக்கத்தில் உள்ளது.
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் தான் பெரும்பாலும் இந்தக் கொடிகள் ஏற்றப் படுகின்றன. அப்துல் காதிர் ஜீலான் (ரஹ்) அவர்களுக்கும் இந்தக் கொடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற சாதாரண அறிவு கூடச் சமுதாய மக்களிடம் இல்லாமல் போனது எப்படி?
கொடியை வணங்கும் இக் கொடிய பழக்கம், இஸ்லாமிய சமுதாயத்தில் இடம் பிடித்தது எப்படி?
பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரால் கூட உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத கொடிகள் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறியது எப்படி?
நாட்டுக்கு நாடு கொடிகள் உண்டு. கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுவது உண்டு. போர்க் களங்களிலும் போராட்டக் களங்களிலும் கொடிகள் உண்டு. அரசியல் கட்சிகளுக்குக் கொடிகள் உண்டு.அவ்லியாக்கள் பெயரால் கொடிகளை எந்தக் கொடியவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்றி வைத்தார்கள்?
இவர்கள் கொடி மரங்களில் கொடிகளை ஏற்ற வில்லை.
ஏதுமறியா பாமர மக்களின் ஈமானைக் கழுவில் ஏற்றி விட்டார்கள்.
மார்க்கம் அறியாத மக்களின் பக்தியை மரத்தில் ஏற்றி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கூண்டில் ஏற்றி விட்டார்கள்.
இறையச்சத்திற்குப் பதிலாக இணை வைத்தல் என்னும் ஷிர்க்கை இதயத்தில் ஏற்றி விட்டார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகும் சரி, எந்த நபித் தோழரும் இப்படிக் கொடியேற்றிக் குதூகலிக்க வில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற இச்சம்பவம் ஒரு மரத்தடியில் நடை பெற்றது. நாளடைவில் அந்த மரத்தை மக்கள் புனிதமாகக் கருதலாயினர். ஹஜ்ரத் உமர் (ரலி) உடனே அந்த மரத்தை வெட்டி எறியும்படி உத்தரவிட்டார்கள்.
மூட நம்பிக்கையின் வாயில்கள் எல்லா வகையிலும் மூடப்பட்ட ஒரு மார்க்கத்தில், சின்னஞ்சிறு விஷயத்தில் கூட ஷிர்க் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் சில கொடியவர்கள் இந்தக் கொடியேற்றப் பழக்கத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டனர்.
புகழ் மிக்க இறை நேசர்கள் பெயரால் - ஊருக்கு ஊர் தர்காக்களை உருவாக்க முடியாமல் கொடி மரங்கள் வைத்துக் கொள்ளிக் கட்டைகளால் தம் அரிப்பைச் சொரிந்துக் கொள்ளும் கொடியவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
கொடி மரங்களுக்கு மகிமை உண்டென்று மனதால் கூட நம்புவதும், அவற்றைப் புனிதம் என்றுக் கருதி சுற்றி வருவதும், தொட்டு முத்தமிடுவதும். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நேர்ச்சை செய்வதும், காணிக்கை செலுத்துவதும், மார்கத்தில் கொடிய குற்றம் என்பதை இனியேனும் உணர வேண்டும்.
இறை நேசர்கள் மீதுள்ள கண்ணியம் நமது இதயத்தில்.
கொடிய குற்றத்தை ஏற்படுத்தும் கொடிகள் இனி நமது காலடியில்.
----------------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து