அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.
தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும். இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.
நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத் தான் தோன்றும்.
முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம்.
ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50: 16)
என்று திருமறை குர்ஆன் பறை சாற்றுகிறது.
நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது 'நடந்தது என்ன' என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும் தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். செய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்படியானால் நாம் செய்து விட்ட தவறான செயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவே இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?
அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5) என்று குர்ஆன் கூறுகின்றது.
ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது.
சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது.....எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

எங்கே போனது மனித நேயம்?

மன நிலை சரியில்லாதவர்களையும், நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களையும், உரிய மருத்துவம் செய்யாமல் தர்காக்களில் கொண்டு போய் தங்கவைப்பதற்கும், இறுதியில் நல்லவர்கள் கூட பைத்தியங்கள் ஆக்கப் படுவதற்கும், மூட நம்பிக்கைகளே முக்கிய காரணம்.
சிகிச்சை என்ற பெயரில் தர்காக்களில் நடக்கும் சித்திரவதைகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.ஏர்வாடி தர்காவில் மனநோய்க்காகச் சிகிச்சைக்கு(?) வந்து, தனியார் காப்பகம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப் பட்ட நிலையில் மன நோயாளிகள் தங்கியிருந் கூடாரம் நள்ளிரவில் தீப்பிடிக்க, கதறிக் கதறிக் கூக்குரலிட்டு, காப்பாற்ற யாருமின்றி, கடைசியில் கரிக் கட்டைகளாய் கருகிப் போனவர்களின் கதறல் சப்தமும், ஓலக் குரல்களும், இன்னுமா உங்கள் இதயங்களைப் பிழியவில்லை? எங்கே போனது மனித நேயம்?
தர்காக்கள் என்னும் கல்லறைகளில் - மீண்டும் எழ முடியாத நீண்ட நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தம இறை நேசர்கள், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பதாக எந்தப் பைத்தியங்கள் கூறின?உண்மையில், இப்படிச் சொன்ன பைத்தியங்கள் தான் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் படவேண்டும். அப்போது தான் மனநலம் குன்றியவர்களின் மரண வேதனை இந்த மனித மிருகங்களுக்குப் புரியும்.
நீண்ட நாட்கள் மருத்துவம் செய்தும் நோய் குணம் அடையவில்லை என்றால், இன்னமும் என்ன நோய் என்பது சரியாகக் கண்டறியப் படவில்லை என்றும், உரிய மருத்துவம் செய்யப் படவில்லை என்று தான் பொருள்.
'அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் மருந்தில்லாமல் அல்லாஹ் வைக்கவில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி)
கண்மூடிப்பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.
அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

மீலாது விழா

அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?
வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது.
தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா?
நம்மை விட பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?
அண்ணல் நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும், எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவை கொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.
தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட அண்ணல் நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும் சொல்லியிருப்பார்கள்.
மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.
வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அமிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.
'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.
இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.
இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.
இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை.
இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)
இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.
ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!
எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.
இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள்.
மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.
அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

பள்ளிகளில் உண்டியல் வசூல்

புதிய பள்ளிவாசல் கட்டட நிதிக்காகவும் ஏழை மாணவர்கள் பயிலும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களுக்காகவும் வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் தொழுகைக்குக் கூடுவதால் ஜூம்ஆத் தொழுகைக்குப் பிறகு சில சமயம் நிதி வசூல் செய்வது வழக்கத்தில் உள்ளது. இது தவறும் அல்ல. ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பல பள்ளிவாசல்களில் இதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர். ஜூம்ஆத் தொழுகை முடிந்து சலாம் கொடுத்ததும் இந்த வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர்.
சமூகத்தில் ஏற்பட்ட மூடப் பழக்கங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இப்படித்தான் சிறுகச் சிறுக மூக்கை நுழைத்தன. போகப் போக பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.
முதலில் பெருநாளைக்கு மட்டும் என்று என்றிருந்த இப்பழக்கம், இப்போது ஒவ்வொரு ஜூம்ஆவுக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. பிறகு தினமும் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் என்று தொடர ஆரம்பித்து விட அதிக காலம் பிடிக்காது.
இதன் மூலம் கிடைக்கும் கிடைக்கும் தொகையைக் கொண்டு பள்ளிகளைப் பரிபாலனம் செய்வதாகப் பள்ளி நிர்வாகிகள் கூறலாம். பைத்துல்மால் என்னும் இஸ்லாமியப் பொது நிதி இல்லாத பள்ளிகளை நிர்வகிக்க பொருளாதாரம் தேவைதான் என்பமை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு வழி இதுவல்ல. அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களிடம், அல்லாஹ்வின் பள்ளிக்காக செலவுச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் வாரி வழங்க எத்தனையோ தயாள மனம் கொண்ட செல்வந்தர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிச் சொத்துக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிய நல்லவர்களிடம் ஒப்படைத்து ஹலாலான முறையில் வருமானம் கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நிரந்தர வருமானத்திற்கு வழி வகை செய்யவேண்டும்.
வாரந்தோறும் ஜூம்ஆத் தொழுகையை வசூலுக்கு பயன்படுத்தும் வன் கொடுமையை பள்ளி நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இப்பழக்கம் எதிர் காலத்தில் பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எச்சரிக்கை!
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

786 எழுதுவது கூடுமா?

சிலர் கடிதம் எழுதும் போதும், அல்லது ஏதேனும் எழுதத் தொடங்கும் போதும், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தொடங்குவதற்குப் பதிலாக 786 என்று எழுதுகின்றனர்.
நியூமராலஜி என்னும் எண் கணித முறையில், ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்துவர். இதே முறையைப் பின்பற்றி அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்தும் முறை சில வழிகேடர்களால் உருவாக்கப் பட்டது. ஜோதிடத்தில் ஒரு வகையான பால் கித்தாபு பார்க்கும் கொடிய யூத கலாச்சாரத்திற்கு இந்த அரபி நியூமராலஜி தான் அடிப்படை காரணமாகும்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... என்னும் அழகான பொருள் கொண்ட திருமறையின் உன்னத வாக்கியத்தை- இறைவன் கற்றுத் தந்த இனிய வாசகத்தை, சில வழிகேடர்கள் 786 என்னும் எண்ணாக மாற்றி வேத வரிகளுடன் விளையாடுகின்றனர். இது மிகவும் தவறு.
கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதும் போது தவறுதலாகக் கண்ட இடங்களிலும் விழுந்து விடலாம். எனவே தான் 786 எழுதுவதாகச் சிலர் கூறலாம். அப்படியானால் 786 என்பதில் புனிதம் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். புனிதம் இல்லாததை ஏன் எழுத வேண்டும்?
எவரேனும் தமது பெயருக்குப் பதிலாக இவ்விதம் பெயரில் உள்ள எழுத்துக்களை எண்களாக்கி அழைக்கப் படுவதை விரும்புவாரா? அப்படியிருக்க அல்லாஹ்வின் திருநாமத்தை எப்படி எண்களாக்குகிறார்கள்?
அரபியில் ஹரே கிருஷ்னா என்று எழுதி அதன் எண்களைக் கூட்டினாலும் இதே கூட்டுத் தொகை தான் வரும். எனவே இது போன்ற மூடப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால் எதையும் தொடங்க வேண்டும்.
வீடுகளில் மூடப் பழக்கங்கள் வியாபார நிறுவனங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அவற்றில் ஒன்று தான் புதுக் கணக்கு எழுதுதல். தொழிலில் ஏற்படும் லாப நஷ்டங்களை அறிந்துக் கொள்ளவும் வருமானக் கணக்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவும் கணக்கு எழுதி வைக்க வேண்டும்.
அரசாங்கத்தை ஏமாற்றப் பொய்க்கணக்கு எழுதுபவர்களும் உண்டு. இவர்கள் கூடப் புது வருடத் துவக்கத்தில் புதுக் கணக்கு எழுத, சிலச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாத்திஹா ஓதுவதற்குத்தான் சில அசரத்துமார்கள் இருக்கின்றார்களே! கூப்பிட்டதும் ஓடி வந்து ஒரு அவசர பாத்தியாவை ஓதிவிட்டு தட்சனையை பெற்றுக் கொள்வ தோடு அவர்கள் வேலை முடிந்து விட்டது. இப்படியெல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று எப்படி சொல்வார்கள்.புதுக் கணக்கு எழுதினால் நமக்கென்ன, பொய்க் கணக்கு எழுதினால் நமக்கென்ன? நமது வருமானக் கணக்கு சரியானால் போதும் என்று இருந்து விடுகிறார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைத்த குற்றத்துக்கு ஆளாவதை அவர்கள் உணரவில்லை.
பாத்திஹா ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் புதுக் கணக்கு எழுதிவிட்டால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்றால்- நஷ்டத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அல்லது மூடப்பட்டு விட்ட கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், அசரத்தைக் கூப்பிட்டு அல்பாத்திஹா ஓதி புதுக் கணக்கு எழுதிவிட்டால் புத்துயிர் பெற்று விடுமே!
தொழிலில் நேர்மையும், ஹலாலான முறையும், தரமான பொருளும், கனிவான பேச்சும், நியாயமான விலையும், வியாபாரத்தைப் பெருக்கும். புதுக் கணக்கு பூஜைகள் வருமானக் கணக்கில் எவ்வித மாற்றத்தையும் எற்படுத்திவிடாது.
கண்மூடிப்பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் நம்மில் சிலர், மார்க்கத்தில் இல்லாத இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பிற மதத்தவரின் தீ மிதித் திருவிழாவைப் பின் பற்றி அன்றைய திpனம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹூஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர். இப்படிப்பட்ட காட்டுமராண்டித் தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இவை யாவும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கொடிய பாவங்களாகும்.
பக்தியின் பெயரால் தீ மிதிக்கும் செயலை - கடவுள் பக்தி அறவே இல்லாத நாத்திகர்களும் கூட செய்து காட்டுகின்றனர். பஞ்சா என்ற பெயரில் அன்றைய தினம் கைச் சின்னத்தைக் கையிலேந்தி மாலை மரியாதையுடன் பவனி வருவதும் மார்க்கத்தில் மாபெரும் பாவச் செயலாகும்.
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள்.நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள். ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் இது போன்ற கொடிய குற்றங்கள் ஈமானுக்கே ஆபத்தானவை. எச்சரிக்கை.
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின் பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) நிச்சயமாக ஏவுவான்.
(அல் குர்ஆன்:24:21)
-------------------------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
மதீனாவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு, மக்கள் மறந்திருக்கும் சமயங்களில், அவ்வப்போது ஒரு பிரசுரம் சில விஷமிகளால் வெளியிடப்படும். அதில், மதீனாவில் வசிக்கும் ஷேக் அஹமத் தெரிவிப்பது என்னவென்றால், நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு கண்டேன்.... என்று துவங்கி ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பிரசுரத்திலும் அவரவர் மனதில் தோன்றியதை சேர்த்தும் குறைத்தும் எழுதிவிட்டு, இது போல் 1000 பிரதி அச்சிட்டு வெளியிட்டால், நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். பம்பாயில் ஒருவர் அச்சிட்டு வெளியிட்டார். கோடீஸ்வரர் ஆனார். கல்கத்தாவில் ஒருவர் கிழித்துப் போட்டார். கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.என்றெல்லாம் ரீல் விடப்பட்டிருக்கும்.
இதைப் படித்து விட்டு,பணக்காரர் ஆகலாம் என்று இது போல் அச்சிட்டு வெளியிட்டு ஏமாந்தவர் பலர். இதை மறுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அல்லாஹ்வை மறந்து அஞ்சியவர் பலர்.
இந்தப் பித்தலாட்டப் பிரசுரங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. அச்சிட்டு விநியோகிக்கக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை.
ஆரம்ப காலத்தில் மக்காவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு இப்பிரசுரம் வெளியானது. அதில் 'நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்று தொடங்கியதைப் பார்த்து ரவுலா ஷரீப் மதீனாவில் அல்லவா உள்ளது? என்று சிலர் கேட்க - அடுத்தடுத்த பிரசுரங்களில் மாற்றிக் கொண்டார்கள். இதிலிருந்தே மக்காவுக்கும் மதீனாவுக்கும் வித்தியாசம் தெரியாத எவனோ ஒரு மடையன் எழுதியுள்ளான் என்பதை உணரலாம்.
'ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்ற வாசகமும் பொய்யானது. ஏனனில் ரவுலா ஷரீபில் யாரையும் தூங்க அனுமதிப்பதில்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் ரவுலா ஷரீபை ஸியாரத் செய்து விட்டு வந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். பல்வேறு தர்காக்களைப் பார்த்துப் பழகிப் போனவர்கள் அதே கண்ணோட்டத்தில் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தையும் கருதி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை அல்லாஹ் எல்லா அசுத்தங்களிலிருந்தும் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.
ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை 60 ஆயிரம் முஸ்லிம்கள் இறப்பதாகவும், அதில் ஒருவருக்குக் கூட ஈமான் இல்லை என்பதாகவும் அப்பிரசுரத்தில் ரீல் விடப்பட்டுள்ளது.
ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. இன்னும் இது போன்ற ஏராளமான தவறுகள் அப்பிரசுரத்தில் காணப்படுகின்றன. இதே போன்ற பிரசுரம் திருப்பதியின் பெயரால் ஒரு சாராரும், வேளாங்கன்னியின் பெயரால் ஒரு சாராரும் வெளியிடுகின்றனர். அவற்றின் ஆரம்பத்தில் காணப்படும் செய்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் - இறுதியில் காணப்படும் எச்சிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இதிலிருந்தே இவை திட்டமிட்டு கட்டி விடப்பட்ட கதைகள் என்பதை உணரலாம்.
இது போன்ற முட்டாள்தனமான பிரசுரங்களில் ஈமானை இழக்காமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக. இறுதியாக, பெருமானார் (ஸல்) அவர்களின் ஓர் எச்சரிக்கை : யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி)
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து