பணக்காரர் ஆக வேண்டும் என்னும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்குப் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதை விட்டு விட்டு முன்னோர்கள் செய்தவை என்று மூட நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, ரஜப் மாதம் வந்து விட்டால் - பூரியானை பாயசத்துடன் சேர்த்து வைத்துப் பாத்திஹா ஓதி, விறகு வெட்டி கிஸ்ஸாவை விடிய விடியப் படித்து விட்டால் பணக்காரர் ஆகிவடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். பூரியானை நினைத்துப் பூரித்துப் போகிறார்கள்.
வீடு வீடாகச் சென்று பூரியானுக்குப் பாத்திஹா ஓதியவர்களும் பணக்காரர் ஆகவில்லை. புத்தி கெட்டு பூரியானுக்கு பணத்தை செலவு செய்து பாத்திஹா ஓத வைத்தவர்களும் பணக்காரர் ஆகவில்லை. காலமெல்லாம் ஓதியவர்கள். இப்போதும் கடன் வாங்கி ஓதிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெயில் போட்ட பூரியான்கள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை போலும்.
பூரியான் பாத்திஹா ஓதாமலேயே பணக்காரர் ஆனவர்களும் உண்டு. பூரியானுக்குச் செலவு செய்து கடனாளி ஆனவர்களும் உண்டு. அப்படியே பணக்காரர் ஆகியிருந்தாலும் பூரியானின் புண்ணியத்தால் பணக்கரர் ஆனதாக நம்பிக்கை வைத்தால் - இறை நம்பிக்கையை (ஈமானை) குழி தோண்டிப் புதைத்ததாகப் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
மார்க்கத்தில் உள்ள அனைத்து வணக்க வழிபாடுகளும் மறுமையில் கிடைக்கும் பலனை அடிப்படையாகக் கொண்டவை. இறை வணக்கத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்வாக இருக்குமானால் நம்மை விடச் சிறந்த இறை நேசர்கள் அனைவருமே செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 13:26)
-----------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
அரபி வருடத்தின் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக் காலத்தில் அரபிகளின் வழக்கம். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படி நியதி எதுவும் இல்லை.
சபர் மாதத்தின் இறுதி புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பழந்தமிழில் பெயர் சூட்டி அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கடற்கரையிலும், பூங்காக்களின் புல்வெளிகளிலும் பொழுதைக் கழிப்பதும், அன்றைய தினத்தில் முஸீபத்துகள் இறங்கும் என்று நினைப்பதும், இலைகளிலும் தட்டுக்களிலும் எதையெதையோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், அன்றைய தினத்துக்காகவே வீடு முழுவதையும் கழுவிச் சுத்தப்படுத்துவதும், இவை அனைத்தும் அறிவுக்கும் பொருந்தாத செயல். அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இல்லாத செயல்.
குடி இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதை ஒடுக்கத்துப் புதனுக்காக மட்டும் செய்வது மூடப் பழக்கம்.
ஒடுக்கத்துப் புதனை கொடிய நகசு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாக சில அண்ணடப் புளுகர்கள் அரபுத் தமிழ் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். திருமறை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. முழுக் குர்ஆனையும் படித்துப் பாருங்கள். குர்ஆனின் ஒரு இடத்தில் கூட ஒடுக்கத்துப் புதனைப் பற்றி குறிப்பிடப்படவேயில்லை. புதன் கிழமை என்னும் வார்த்தைக் கூட இல்லை.
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன், அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன், இவர்களை விட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்.(அல் குர்ஆன் 10 : 17)
-------------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
இறந்து போனவர்களின் ஆன்மா மறுபடியும் வரும் என்றும் மனிதர்களைத் தீண்டும் என்றும், இவை தான் பேய் என்றும், பிசாசு என்றும் சில மூடர்கள் நம்புகின்றனர்.
இந்த மூட நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு, முதலில் இறந்தவர் ஆத்மா குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டால், பேய் பிசாசுகளின் பெயரால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது.
ஒருவர் மரணித்து விட்டால், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட பின் மலக்குகள் அவரிடம் விசாரனை நடத்துவர். அவர் நல்லவராக இருந்தால்- 'புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக' என்று கூறப்படும். அல்லாஹ் அவரை மண்ணறையிலிருந்து எழுப்பும் நாள் வரை அவர் உறங்கிக் கொண்டே இருப்பார். கெட்டவராக இருப்பின் மறுமை நாள் வரை மண்ணறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார் என்பதை ஆதாரப்பூர்வமான நபி மொழிகளின் மூலம் அறியலாம்.
உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்று கூறப்படும். என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம் புகாரி)
இதிலிருந்து நல்லவர்களோ, கெட்டவர்களோ, எவருமே மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பி வர முடியாது என்பதை அறியலாம். இவ்வளவு தெளிவாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்ட பிறகு - இறந்தவர்கள் மறுபடியும் எழுந்து வருவார்கள் என்றோ - பேய் பிசாசுகளாக உலவுவார்கள் என்றோ நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை.
சரி, அப்படியானால் பேய்களைப் பார்த்ததாகப் பலரும் சொல்கிறார்களே! இதற்கு என்ன பதில்? பேயைப் பார்த்ததாகச் சொல்பவரிடம், துருவித் துருவிக் கேளுங்கள் இறுதியில் அவர் தாம் பார்க்கவில்லை (இருந்தால் அல்லவா பார்ப்பதற்கு?) தமக்குத் தெரிந்த ஒருவர் பார்த்ததாகத்தான் தம்மிடம் சொன்னார் என்பார். சொன்னவரைத் தேடிச் சென்று அவரிடம் விசாரித்தால் அவரும் இதே பதிலைத்தான் சொல்வார். இது சங்கிலித் தொடர் போல் நீண்டுக் கொண்டே போகும். இவ்வளவுக் கெல்லாம் யாரும் முயற்சிகள் எடுப்பதில்லை.
பேய் பிசாசுகள் பகலில் வந்ததாகவோ, இரவில் வெளிச்சம் உள்ள இடங்களில் இருப்பதாகவோ யாரும் சொல்வதில்லை. இருளில் தெளிவாகத் தெரியாத எதையேனும் பார்த்து விட்டு - ஏற்கனவே அடி மனதில் தங்கிவிட்ட பேய்க் கதைகள் நினைவுக்கு வர - இல்லாத பேய்களுக்கு கையும் காலும் வைத்து கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பேய்களைப் பற்றிக் கதைகளில் படித்தவைகளும், படங்களில் பார்த்தவைகளும் ஒன்று சேர, யாராவது கதைவிட்டால் அதுவும் இதில் சேர, பேய்கள் இப்படித்தான் கற்பனைகளால் உருவாக்கப்படுகின்றன.
பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கையில் பலரும் மூழ்கிக் கிடப்பதற்குக் காரணம் - சிறு வயதிலிருந்தே அந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டு விட்டதால் - வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் கூட மனதில் அப்படியே நிலைத்து விடுகின்றது. எனவே பெற்றோர்கள், இனியாவது தம் குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் கோழைத் தனத்தை விதைக்காமல், தைரியத்தையும் துணிச்சலையும் ஊட்டவேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சமுதாயம் வீரமுள்ள சமுதாயமாக உருவெடுக்கும். அச்சம் பயம் கோழைத்தனம் என்னும் பேய்களை ஓட்டுவோம். கற்பனைப் பேய்கள் தாமாக ஓட்டமெடுக்கும்.
--------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும், மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர்.
ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். 'நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை, எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது' என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க - சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதி அசரத்துகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. 'உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது' 'நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை' என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க - கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து - கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள்.
யாரோ யாருக்கோ செய்து வைத்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்பதைக் கூட இந்த மூடர்கள் சிந்திப்பதில்லை. இவர்களுக் கெல்லாம் தலையில் மூளைக்கு பதில் வேறு என்னவோ இருக்கின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
செய்வினை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டான். அவனது ஈனத்தனமான பிழைப்பும் வருமானமும் தொடர வேண்டுமே! 'உங்களுக்கு வேண்டியவர் - உறவினர் தான் செய்து வைத்திருக்கிறார்கள்' என்று அந்த அயோக்கியன் சொல்ல - தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், இப்படி ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தி, இதன் காரணமாக நெருங்கிய சொந்த பந்தங்கள், உடன்பிறந்தவர்,அண்டை அயலார், அனைவர் மீதும் பகைமைகொண்டு பிரிந்து போன குடும்பங்கள் எத்தனையோ!
ஒரு தாய் வயிற்றில் பிறந்து - உயிருக்குயிராய் நேசித்து அன்பு செலுத்தி - ஆதரவாய் அணுசரனையாய் இருந்த சகோதர சகோதரிகள் கூட, கண்ட கண்ட கழிசடைகளின் பேச்சையெல்லாம் நம்பி, செய்வினை என்னும் பொய் வினையில் மூழ்கிப் போய் இரத்த பந்தங்களை முறித்துக் கொள்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு கூறும். யார் என்னை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.
யாரும் யாருக்கும் எதுவும் செய்யலாம் என்று நம்புபவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எதிராகச் செய்து வைக்க வேண்டியது தானே! செயல்பட முடியாமல் கை கால்களை முடக்க வேண்டிளது தானே!
பதவிப் போட்டியிலும், அரசியல் போட்டியிலும், தொழில் போட்டியிலும், ஒருவரையொருவர் வீழ்த்த தங்கள் ஆற்றலையும் திறமையையும், பொருளாதாரத்தையும், வீணடிப்பதை விட்டு விட்டுச் செய்வினையையும், பில்லி சூனியத்தையும் பயன்படுத்த வேண்டியது தானே! இவை அனைத்தும் எமாற்று வேலை என்பதற்குச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களுக்கு - இந்த உதாரணங்கள் போதும்.
-----------------------------------------
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

தாயத்தும் தகடுகளும்

அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார். (ஆதாரம்: அஹ்மத்)
தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும்போது - வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடும் இவர்களின் மடமையை என்னவென்பது?
தாயத்துகளை நியாயப் படுத்துவோர், அதில் குர்ஆன் வசனங்கள் தானே எழுதப்படுகின்றன என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள் தானே எழுதப்படுகின்றன என்று பதில் கூறுவர். இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படிப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்துக் கொள்வதில்தான் முட்டாள்களாக இருக்கின்றனர்.
சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட 'அர்ஜன்ட்' தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான். தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.
அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விட்டவர்கள் -
இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள் -
பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்-
கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள் -
இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்.
வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த அஸ்மாத் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் - இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?
தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும் தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும், பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது, மாறாக பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து

ஜாதகமும் - ஜோதிடமும்

எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது.
(இன்னும் நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
( அல் குர்ஆன் 27 65)
ஜாதகம் எழுதி வைப்பதும், ஜோதிடத்தை நம்புவதும், பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.
பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர் அபூ ஹூரைரா. ஆதாரம் முஸ்லிம்)
நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை. தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?
ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். பால் கிதாபும் ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.
பால் கிதாபு பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புகிறிர்கள்?
ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம் என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஒரு ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக் கூட சிந்திக்க வேண்டாமா?
ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி வேண்டும்.
கண்மூடிப் பழக்க்ங்கள் மண்மூடிப்போகட்டும்
என்னும் நூலிலிருந்து
பெண்கள் பருவம் அடைந்தால் அதற்காகப் பத்திரகை அடித்து உறவினர்களை அழைத்து பூமாலை போட்டு பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து அறிவிக்க பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?
பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். இதை தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.
திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால் பெண் கேட்டு வருவார்கள் என்று காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.
பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தக்க துணையும் - தகுந்த காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பாதுகாப்பான சூழலில் அமைந்த பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமே அனுப்பவேண்டும். அதுவும் பெண்கள் மட்டுமே தனியாகக் கல்வி கற்கும் கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மார்க்கக் கல்வியை கற்பிக்க வேண்டும்.இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.
பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் 'சுன்னத்' ஆகும்.நகம் வெட்டுவதும் தாடி வைப்பதும் தேவையற்ற முடிகளைக் களைவதும் பல் துலக்குவதும் இன்னும் இது போன்ற ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு 'கத்னா' என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு 'சுன்னத்' என்நு பெயர் வைத்து பத்திரிகை அடித்து ஊர் வலம் வைத்து விழா நடத்தி விருந்து போடுவதும் பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும் பரவலாகக் கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்.
நகம் வெட்டுவதற்கு ஒப்பான- இந்த சாதாரனச் செயலைச் சிலர் - தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்காக - வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.பணக்காரர்கள் செய்யும் இந்த பண்பாடற்றச் செயலைப் பார்த்து - எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர் இதற்கென ஆகும் செலவுகளுக்கு அஞ்சி தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.வசதி படைத்தவர்கள் விருத்த சேதன விழா நடத்தும் செலவில் - தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து - மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்) கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால் உண்மையான 'சுன்னத்'தை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். மிகப் பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும் கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று 'அசரத்தைக'; கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது.குழந்தை பிறந்தாலும் 40. திரு மணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த 'மண்டலக்' கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
சிலர் வருடந்தோறும் குழந்தையின் பிறந்த நாளைர் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை.இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றிஇ கேக் வெட்டி 'ஹேப்பி பர்த் டே' கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.
'யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.' என்பது நபி மொழி.
இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.
வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்படுவது அனைவருக்கும் இயல்பு. அப்படி வீடு கட்டும்போது மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும் ஷிர்க் (இணை வைத்தல்) எந்த வகையிலும் ஏற்படா வண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்.
வீடு கட்டுவதற்கு முன் வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர்.
மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம் அடைவதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை நம் வசதிக்கு ஏற்றபடியும் இடத்திற்குத் தக்கபடியும் நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர -வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது.
எந்த சாஸ்திரமும் - சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் - நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் - அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும்-கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து கட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் - அங்கீகரிப்பதும் -கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து பூவும் பொட்டும் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் -காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்து பலியிடுவதும் -கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க வீடுவதும் -புதிய வீடு கட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும் - முதல் வேலையாக பால் காய்ச்சுவதும் -கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆனும் - மௌலூதும் ஓதுவதும் -இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.
குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். புதுமனை புகு விழாவுக்கு மட்டும் - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன்.குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓத வேண்டும். சடங்காக்கப்படக் கூடாது.
சொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும் இந்த சாதனையில் அநாச்சாரம் நுழைந்து விடாமலும் ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்'
என்னும் நூலிலிருந்து