நல்ல(!) நேரம் |
நற்சிந்தனைகள் - வாழ்வியல் |
திங்கள், 25 ஜனவரி 2010 13:47 |
மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும். உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும். ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே. இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும். அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது. அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும். ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது. உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும். இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன, |