எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் சில வாசகங்கள் விடுபட்டு, அல்லது மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் ஒப்பீட்டாய்வின் மூலம் திருத்தப்பட்டுமுள்ளன. அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தை அறியாத அறிவிலிகளும் சுயநலவாதிகளும் ஹதீஸ் என்ற பெயரில் போலியான செய்திகளை இட்டுக்கட்டி நபியவர்களின் பெயரில் பரப்பினர்.
இவ்வாறு பரப்பப்பட்ட ‘மவ்ழூ’ஆன (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களின் விபரமும் திறணாய்வுக்கலை அறிஞர்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டன. எனினும் ஹதீஸ் கலையுடன் அதிக தொடர்பு அற்ற உலமாக்கள் தமது உரைகளுக்கு அழகு சேர்ப்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு அறிவிப்புக்களை மக்கள் மத்தியில் பரப்பி அவற்றுக்கு ஒரு பிரபலத்தையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
‘என்மீது யார் நான் கூறாததை வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறுகின்றாரோ அவர்; தனது தங்குமிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்’ என்ற கருத்தில் வந்துள்ள ஏராளமான அறிவிப்புக்கள் குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை.
‘ராவிகள்’ எனப்படும் ஐந்து இலட்சம் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் வாழ்வை ஆராய்ந்து ‘இட்டுக்கட்டப்பட்டன’ என இமாம்கள் ஒதுக்கி இருப்பவற்றை நாம் மீண்டும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோமே என்ற கவலையும் இவர்களுக்கில்லை.
இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்கள் மன்றத்தில் பரவி பல்வேறுபட்ட சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அகீதா ரீதியிலான சீரழிவுகள்:
இஸ்லாமிய அடிப்படையான அகீதாவுக்கே வேட்டுவைக்கும் பல்வேறு போலி ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. இஸ்லாமிய அகீதாவுக்கு நேர் முரணான அத்வைத, சிந்தனைகளைப் பேசுவோரும் தமது வாதத்திற்குப் பல்வேறுபட்ட போலி ஹதீஸ்களையே ஆதாரங்களாக முன்வைக்கின்றனர்.
‘யார் தன்னை அறிந்து கொண்டானோ அவன் தனது இரட்சகனை அறிந்து கொண்டான்’
இது எத்தகைய அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அறிஞர் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது ‘தய்லுல் மவ்ழூஆத்’ எனும் நூலிலும் (263), ஷெய்க் முல்லா அலிகாரி(ரஹ்) தனது ‘மவ்ழூஆத்’எனும் நூலிலும் இதை இடம்பெறச் செய்துள்ளனர்.
இவ்வாறே ‘நான் அறியப்படாத பொக்கிஷமாக, புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனது படைப்புக்களைப் படைத்தேன்’ என அல்லாஹ் கூறுவதாக இடம்பெறும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியும், அத்வைதம் பேசுபவர்களால் பெரிதும் ஆதாரமாக எடுத்துப் பேசப்படுகின்றது. ஆனால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். (பார்க்க : ஸில்ஸிலதுல் அஹாதீதுல் ழயீபா வல்மவ்ழூஆ, எண்: 66)
இவ்வாறே, ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டதாக வாதிட்டு, ‘காதியானி’ மதத்தை தோற்றுவித்த மிர்சா குலாம் அஹ்மத் எனும் பொய்யனைக் காதியானிகள், மஹ்தியாகவும், மஸீஹாகவும் சித்தரிக்கின்றனர். இவர்கள் தமது தவறான வாதத்திற்கு ‘ஈஸா(அலை) அன்றி மஹ்தி வேறில்லை’ என்ற இப்னுமாஜாவில் இடம்பெறும் ஹதீஸையே எடுத்து வைத்துள்ளனர். இது ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள அறிவிப்பாகும். இமாம் இப்னுல் கையும் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தமது ‘அல்வாஹியாத்’ என்ற நூலிலும் (1447) அறிஞர் ஷெளகானி தமது ‘அஹாதீதுல் மவ்லுஆத்’ என்ற நூலிலும் இடம்பெறச் செய்து இதன் போலித் தன்மையைத் தெளிவுபடுத்தியுள்ளனர். (பார்க்க: ஸில்ஸிலா 1ஃ175-176, எண்: 77)
தவஸ்ஸுல்:
அல்லாஹ்விடம் நாம் நேரடியாகவே பிரார்த்திக்க வேண்டும். இந்த அமைப்பில்தான் அல்குர்ஆனில் இடம்பெறும் அனைத்து துஆக்களும் அமைந்துள்ளன. ஆனால் சிலர் அன்பியாக்கள், அவ்லியாக்கள் பொருட்டால் பிரார்த்திக்கின்றனர். இந்த வழிகெட்ட நிலை தோன்றுவதற்கும் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்களே காரணமாக அமைந்தன.
‘என் பொருட்டால் நீங்கள் வஸீலாக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ்விடத்தில் எனது அந்தஸ்த்து மகத்துவமானதாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எவ்வித அடிப்படையும் இல்லாத போலி ஹதீஸ் ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டார்கள் என்கின்ற அல்குர்ஆனுக்கு முரணான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பும் ‘பொருட்டால்’ பிரார்த்திப்பதற்கான வலுவான ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மக்கள் மத்தியில் இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்தித்தல், அவர்களுடைய நினைவு தினங்களைக் கொண்டாடுதல், அதனை ஒட்டி கந்தூரிகள், நேர்ச்சைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான செயல்பாடுகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
சுன்னா – மறுப்பு:
கடந்த காலத்தில் சில தனிப்பட்ட சிலரும், நவீன காலத்தில் சில குழுக்களும் சுன்னாவைப் பின்பற்ற முடியாது; குர்ஆன் ஒன்றே போதும் என்று வாதிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை அஹ்லுல் குர்ஆன் என அறிவித்துக் கொள்கின்றனர். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் உருவாவதற்கு போலி ஹதீஸ்களே காரணமாக அமைந்தன.
இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்துள்ளன. அதேபோல் அவை பகுத்தறிவுக்கும் பொருத்தமற்றவையாக அமைந்துள்ளன. இதேவேளை அவை ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளைக் காணும் சிலர் ஒன்றுக்கொன்று முரண்படும் இவை இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது என எண்ணுகின்றனர். ஆதலால் முரண்பாட்டுக்கு அப்பாற்பட்ட குர்ஆனை மட்டும் பின்பற்றினால் போதும் என வாதிக்கின்றனர். இந்த அகீதா ரீதியான சீர்கேடு உருவாவதற்குப் போலி ஹதீஸ்களும் அவை தொடர்பான அறிவு அற்றுப்போனமையுமே காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்பாக அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தமது ‘இர்வாஉல் ஙலீலின்’ முன்னுரையிலும் அறிஞர் அபூ அப்துல்லாஹ் லாகிர் நிஃமதுல்லாஹ் அவர்கள் தமது ‘அல் அஹாதீதுழ் ழயீபா வல் மவ்லூஆ வஹதருஹா அஸ்ஸெய்யிஉ அலல் உம்மா’ என்ற சிற்றேட்டிலும் உதாரணங்களுடன் விபரித்துள்ளனர்.
வணக்க வழிபாடுகள்:
அகீதாவில் பல்வேறுபட்ட சீரழிவுகளுக்கு போலி ஹதீஸ்கள் காரணமாக இருந்தது போலவே வணக்க வழிபாடுகளில் பல்வேறுபட்ட சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடுகள் தோன்றவும், பித்அத்கள் உருவாகவும் போலி ஹதீஸ்கள் துணை நின்றன. அவற்றுக்குச் சில உதாரணங்களை நோக்குவோம்.
கருத்து வேறுபாடு அருளாகுமா?:
‘இமாம்களின் கருத்து வேறுபாடு சமுகத்திற்கு அருளாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒன்று பரவலாக மார்க்க அறிஞர்களால் பேசப்படுகின்றது. இவ்வாறே ‘எனது உம்மத்தின் கருத்து வேறுபாடு அருளாகும்’ என்ற ஒரு செய்தியும் உண்டு.
இமாம் “அப்துல் பர்” அவர்கள் கூறியதாக அல்மனாவி அவர்கள் இந்தச் செய்திப் பற்றி கூறும்போது இப்படி ஒரு ஹதீஸ் அறிஞர்களிடத்தில் அறியப்பட்டிருக்கவில்லை. இதற்கு ஸஹீஹானதோ, ழயீபானதோ, மவ்லூஆனதோ எந்த வகையான சனதும் (அறிவிப்பாளர் தொடரும்) இல்லை என்கின்றார்.
எந்தச் சனதும் இல்லாத இந்தச் செய்தியை இமாம் சுயூத்தி தனது ‘அல்ஜாமிஉஸ் ஸகீரில்’ இது எம் கைக்குக்கிட்டாத ஏதாவதொரு கிதாபிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி நியாயப்படுத்த முற்படுகின்றார். போலி ஹதீஸை உறுதிப்படுத்த முயலும் இமாமவர்களின் இக்கூற்று பல்வேறுபட்ட ஸஹீஹான ஹதீஸ்கள் கூட முஸ்லிம் உலகத்தால் இழக்கப்பட்டுவிட்டன என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகின்றது.
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) தமது ‘அல் இஹ்காம் பீ உஸுலில் அஹ்காம்’ எனும் நூலில் (5ஃ64) இந்த செய்தி பற்றிக் கூறும்போது, ‘இது தவறான கருத்தாகும். கருத்து வேறுபாடு அருளாக இருந்தால் கருத்து ஒற்றுமை என்பது அருள் அற்றதாக மாறிவிடும். இப்படி ஒரு முஸ்லிம் கூற முடியாது!’ என்பதாகக் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பல்வேறுபட்ட அறிஞர்களால் இச்செய்தி விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் சரியானதை இனங்கண்டு பின்பற்றுவதை விட்டுவிட்டு தக்லீதின் அடிப்படையில் நடந்து கொள்வதற்கும், மத்ஹபுகளைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் இத்தகைய போலி ஹதீஸ்கள் மக்களை இட்டுச் சென்றுள்ளன. இதனால் எல்லா இபாதத்துகளிலும் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதையே மக்கள் அருளாக எண்ணி ஏற்றுக்கொண்டு செல்கின்றனர்.
நபி வழிகள் மறுக்கப்படல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் நேரடியாகவே சுன்னாவுக்கு முரணாக இருக்கும். பெரும்பாலும் தமது மத்ஹபுடைய இமாமின் கூற்றுக்கு வலு சேர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டிருக்கும். இவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் அந்தந்த மத்ஹபைப் பின்பற்றுபவர்களால் பிரபலமடையச் செய்யப்பட்டிருக்கும். இதன் தாக்கத்தால் பல சுன்னத்தான அமல்கள் சமூகத்தில் மங்கி மறைந்து போயுள்ளன.
‘வெள்ளிக்கிழமை தினம் இமாம் குத்பா ஓதும் போது உங்களில் ஒருவர் வந்தால் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தொழாமல் அமர்ந்துவிட்டவரைக்கூட எழுந்து தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் தமது குத்பாவின் போது கூறியுள்ளார்கள். இதன்படி இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் பள்ளிக்கு வருபவர் இரண்டு ரக்அத்து தொழுதுவிட்டுத்தான் பள்ளியில் அமர வேண்டும். ஆனால்,
கதீப் மிம்பரில் ஏறிவிட்டால் தொழுகையும் கிடையாது, பேசவும் கூடாது என்ற கருத்தில் பலவீனமான அறிவிப்பு ஒன்று உள்ளது. இந்தச் செய்தி பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் மாட்டப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வருபவர்கள் தொழாமலே இருந்து விடுகின்றனர். மாறாக யாரேனும் தொழுதால் சில இமாம்கள் அவரை அப்படியே இருக்குமாறு நேரடியாகவே ஹதீஸுக்கு முரணாகக் கூறுகின்றனர். நபியவர்கள் இருந்தவரையும் தொழச் சொல்லியுள்ளார்கள். இவர்கள் தொழுத பலரையும் தொழுகையை விட்டுவிட்டு அமரச் சொல்கின்றனர். இந்நடவடிக்கைக்கு போலி ஹதீஸே காரணமாகியுள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அய்யூப் இப்னு நுஹய்க் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் குறித்து, இமாம் அபூஹாதம் ‘அல்ஜரஹ் வத்தஃதீல்’ எனும் நூலில் (1/1/259) அவரது அறிவிப்புக்கள் மறுக்கப்படும் என்றும், அறிஞர் அல் ஹைதமி ‘அல் மஜ்மஉ’வில் (2/184) இவர் விடப்பட்டவர் என்றும், அறிஞர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ‘பத்ஹுல் பாரி’யில் (2/327) இது பலவீனமான அறிவிப்பு என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறான பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் மூலம் நேரடியாக சுன்னாவுக்கு முரணான நிலைப்பாடு சமூகத்தில் மார்க்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
இபாதத்துக்கள் புறக்கணிக்கப்படுதல்:
சில இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் ஒரு இபாதத்தை விட அடுத்த இபாதத்தை உயர்வுபடுத்திப் பேசுவதாக அமைந்து விடுகின்றன. இதனால் பாதிக்கப்படும் சிலர் குறிப்பிட்ட சில வணக்கங்களைச் செய்துவிட்டு அடுத்த இபாதத்துக்களைப் புறக்கணிக்கின்றனர். உதாரணமாக திக்ர் குறித்த சில இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் அதில் அதீத ஈடுபாட்டையும் தொழுகை போன்ற அமல்களில் கூட பொடுபோக்கையும் ஏற்படுத்தி விடுகின்றது. சிலர் தொழுவதே திக்ருக்காகத்தான். எனவே குறிப்பிட்ட திக்ருகளைச் செய்துவிட்டால் தொழவேண்டிய அவசியம் கிடையாது என எண்ணுகின்றனர். இத்தகைய நிலையைத் தோற்றுவிக்கும் அறிவிப்புகளுக்கு;
சிந்திப்பது அரைவாசி இபாதத்தாகும். குறைந்த உணவு என்பதும் இபாதத்தாகும். (ஸில்ஸிலா 1/249) என்ற எவ்வித அடிப்படையுமற்ற பாதிலான செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
முக்கியமற்றவை முக்கியத்துவம் பெறுதல்:
சில செயற்பாடுகள் ஆகுமானவையாக அமைந்தாலும், ஷரீஆவின் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆனால், போலியான செய்திகளில் அவற்றின் சிறப்புக்கள் பற்றி ஏராளமாக மிகைப்படுத்திக் கூறப்பட்டிருக்கும். இதனால் இஸ்லாம் முக்கியத்துவப்படுத்தாத பல செயற்பாடுகள் மிகக் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதையும் அது வலியுறுத்தும் உண்மையான ஷரீஆ ஓரங்கட்டப்படுவதையும் அறியலாம்.
‘தலைப்பாகையுடன் தொழப்படும் ஒரு ரக்அத்து தலைப்பாகை இல்லாமல் செய்யப்படும் 70 ரக்அத்துக்களை விட சிறந்ததாகும்.’
‘தலைப்பாகையில் தொழும் தொழுகை 10 ஆயிரம் நன்மைக்கு சமமாகும்.’
என்ற கருத்தில் பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உள்ளன. இச்செய்திகளை விமர்சிக்கும் இமாம் அல்பானி அவர்கள் தலைப்பாகையுடன் தொழுவதற்குக் கிடைக்கும் கூலி ஜமாஅத்துடன் தொழப்படும் தொழுகைக்கு சமமானது என்று கூறுவது கூட அறிவுக்குப் பொருந்தாது. ஆனால் இங்கு பன்மடங்கு பெருக்கிக் கூறப்பட்டுள்ளது. ஜமாஅத்து தொழுகைக்கும் தலைப்பாகைக்கு மிடையில் சட்டத்தில் கூட பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. தலைப்பாகையை பொறுத்தவரையில் ஆகக்கூடியது (அதிகபட்சம்) அதனை முஸ்தஹப்பு எனலாம். இது இபாதத்துக் கிடையாது. ஆதத்தின் (வழக்காறின்) அடிப்படையில் வந்ததாகும். ஜமாஅத்துத் தொழுகையைப் பொறுத்தவரை ஆகக்குறைந்தது அது கட்டாய சுன்னத்தாகும். அது தொழுகையின் ருக்னுகளில் ஒன்று; அது இன்றி தொழுகை செல்லாது என்றும் கூறப்படுகின்றது. உண்மை என்னவென்றால் அது பர்ழாகும், தனியாகத் தொழுதாலும் தொழுகை சேரும். ஆனால் ஜமாஅத்தை விடுவது குற்றமாகும்.
இப்படி இருக்கும் போது ஜமாஅத்துத் தொழுகைக்கு கிடைப்பதை விட தலைப்பாகையுடன் தொழுவதற்கு அதிக நன்மை கிடைக்குமென்று எப்படிக் கூற முடியும்?. (பார்க்க ஸில்ஸிலா 1/253)
இவ்வாறான போலி ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பரவி தலைப்பாகை போன்ற முக்கியத்துவமற்ற விடயங்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தன. இதனால் சிலர் தலைப்பாகை கட்டாத இமாமைப் பின்தொடர்ந்து தொழமாட்டோம் என அடம்பிடித்தனர். சிலர் பள்ளியில் பணிபுரியும் உலமாக்களுக்கு இதைக் கட்டாயமாக்கினர். மற்றும் சிலர் தலைப்பாகை கட்டினர். அதேநேரம் அதைக் கடைப்பிடிக்காத உலமாக்களை ஹதீஸைப் பின்பற்றாதவர், அதிக நன்மையில் நாட்டம் இல்லாதவர். சுன்னாவை கைவிட்டவர் என்று ஏளனமாகப் பார்த்தனர். சிலவேளை இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் தலையை மூடாத போதுகூட கோபப்படாத அளவுக்கு தலைப்பாகை இல்லாத இமாம்கள் மீது கோபப்பட்டனர்.
இவ்வாறே ஹஜ்ஜில் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது வலியுறுத்தப்படாத சுன்னாவாகும். ஆனால் ஹஜருல் அஸ்வத் அல்லாஹ்வின் கையாகும். அதைத் தொட்டவர் அல்லாஹ்வுடன் முஸாஹபா செய்தவராவார் என்ற மவ்லூஆன செய்தி மக்கள் மத்தியில் அதனை மிக முக்கிய சட்டமாக மாற்றிவிட்டது. அதன் விளைவை வருடா வருடம் ஹஜ்ஜில் அனுபவித்து வருகின்றோம்.
‘யார் ஹஜ்ஜு செய்துவிட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவன் என்னைப் புறக்கணித்து விட்டான்.’ என்ற கருத்தில் ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் உள்ளன. உண்மையில் ஹஜ்ஜுடன் மதீனாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் ஹஜ் செய்யச் செல்லும் பல பாமர ஹாஜிகள் நபி(ஸல்) அவர்களது கப்ரை ஸியாரச் செய்வதைத்தான் அடிமனது ஆசையாக உள்ளத்தில் ஏந்திச் செல்கின்றனர். ஹஜ்ஜுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத கப்று ஸியாரத் ஹஜ்ஜின் முக்கிய அம்சம் போல் மாறிவிட்டது. இவ்வாறான ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.
மூட நம்பிக்கைகள்:
போலி ஹதீஸ்கள் பல்வேறுபட்ட மூட நம்பிக்கைகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டன.
‘அழகிய பெண்ணின் முகத்தைப் பார்ப்பதும் பச்சைக் காட்சிகளைக் காண்பதும் கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.’ என்றொரு போலி ஹதீஸ் உண்டு. இது, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும் குர்ஆனின் கட்டளைக்கு நேரடியாக முரண்படுவதைக் காணலாம்.
‘பணக்காரர்கள் கோழியை எடுக்கும்போது அந்த ஊரை அழித்துவிட அல்லாஹ் கட்டளையிடுவான்’ என்ற செய்தி இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ள இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். (ஸில்ஸிலா 119)
இவ்வாறே ‘நீங்கள் கம்பளி ஆடையை அணியுங்கள்’ என்பவை போன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் கம்பளி அணிவது இறையச்சத்தின் வெளிப்பாடு என்ற நிலையை ஏற்படுத்தியது.
‘ஒருவர் அஸருக்குப் பின் தூங்கி அவரது அறிவு கெட்டுப்போனால் அவர் தன்னைத் தவிர பிறரை குறைகூற வேண்டாம்.’ என்ற செய்தி அஸருக்குப் பின் தூங்கினால் பைத்தியம் உண்டாகும் என்று கூறுகின்றது.
தேசியவாத சிந்தனை:
இஸ்லாமிய உலகைச் சிதைத்து, உஸ்மானிய்ய கிலாஃபத்தை உடைத்ததில் பெரும் பங்கு தேசியவாத சிந்தனைக்குண்டு. பல்வேறுபட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புக்கள் மொழி, பிரதேச, தேசியவாத வெறி உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
சிலர் குறிப்பிட்ட இடங்களைச் சிறப்பித்து போலி ஹதீஸ்களை இட்டுக்கட்டினர். மொழி வெறி பிடித்த சிலர் அவரவர் பேசிய மொழிகளைப் புகழ்ந்து இட்டுக் கட்டினர். இவை மொழி, பிரதேச வேறுபாட்டை உருவாக்கியது. இதேவேளை, தேசியவாத சிந்தனைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒரு செய்தி உலமாக்களாலும் குறிப்பாக அரசியல் தலைவர்களாலும் பரவலாகப் பேசப்படுகின்றது.
‘தாய்நாட்டை நேசிப்பது ஈமானில் உள்ளதாகும்.’ (ஸில்ஸிலா 36) என்பதே இந்த இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாகும். இதுபோன்ற செய்திகள் மார்க்கத்தின் பெயரிலேயே தேசியவாத சிந்தனைகள் தலைதூக்க உதவின.
இவ்வாறு நோக்கும் போது போலி ஹதீஸ்கள் முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை அறியலாம். இந்த சமய சமூக ரீதியிலான பாதிப்புக்களிலிருந்து சமூகத்தைக் காப்பதற்காக போலி ஹதீஸ்களை மக்களுக்கு இனம்காட்ட வேண்டிய கடமைகள் ஆலிம்களுக்குள்ளது. தாம் எழுதும் போதும், பேசும் போதும் நபி(ஸல்) அவர்கள் பெயரில் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை மக்கள் முன்வைத்து விடக்கக்கூடாது என்ற அக்கறையும் அவதானமும் அவசியம் ஆலிம்களிடம் இருந்தாக வேண்டும். ஹதீஸ் என்ற பெயரில் கிடைப்பதையெல்லாம் மக்கள் மன்றத்திற்கு போட்டுவிடுவது ஹதீஸ்களின் தூய்மையைப் பாதுகாக்கப் பாடுபட்ட இமாம்களினதும், அறிஞர்களினதும் தியாகங்களை உதாசீனம் செய்வதாகவே அமைந்துவிடும். இது உலமாக்களுக்கு அழகல்ல. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட உலமாக்கள் முன்வருவார்களா?