ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது 'எங்கே போகிறீர்கள்?' என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் -நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் -போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் -விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. மூளை என்று ஒன்று இருந்தால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் -'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி 'பல்லி விழும் பலன்' பார்ப்பதும் மூட நம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
தேதி பார்க்க காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும் ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும். பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய - குர்ஆன் வசனங்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம் கெட்ட சகுனம் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது 'ஈமான்' என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்.நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது.
'மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி)
0 comments:
Post a Comment