இறைத் தூதரின் இறுதி கட்ட மணித்துளிகள்
ஆக்கம்: குலசை சுல்தான்
கண்கள் குளமாகின்றன, நம் நேசமிகு இறைத் தூதரின் இறுதி வேளையை நினைத்து. மரணத்தின் கடைசி மணித் துளிகளில் நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கண்களின் நீரோட்டத்தை நம்மால் அடக்கிக் கொள்ள முடியாது.உங்களின் நினைவலைகளை ஓரிரு நிமிடங்கள் பின்னோக்கி நகர்த்தி, பெருமானார் வாழ்ந்த காலத்திற்கு சென்று இதை படியுங்கள்.அவர்களுக்கே இந்த நிலை என்றால்…….நமக்கு????
நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ஷசாஃ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)
வாழ்வின் இறுதி நாள்
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)மேலும், 'அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) 'எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.முன்பை விட வேதனை அதிகமானது.
கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
“யா அல்லாஹ் இந்த மரண வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” (குலசை சுல்தான்)
இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது:
அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:'நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். 'நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?' என்று கேட்டபோது, 'ஆம்!' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. 'நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?' என்று கேட்டேன். தலை அசைத்து 'ஆம்!' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.'இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: 'நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள்.
'லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.நபி (ஸல்) அப்போது 'இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி 'நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை' என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)
ஃபாத்திமா (ரழி) 'எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே' எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஷசுன்ஹ் என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். 'என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்' என்றும் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர். அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ஷகர்ஸ் என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)
நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) 'இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்' என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள்.
மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:'இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.'இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)
நபி (ஸல்) அவர்களின் இறுதி கட்ட வேளையில் (மரணத்திற்கு முன் 4x5 நாட்களுக்குள்) அவர்கள் பேசிய இறுதி வாக்கியங்கள்: அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு 'மக்களே! என்னிடம் வாருங்கள்' என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. 'யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.' எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)
தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். அப்போது ஒருவர் எழுந்து 'எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்' என்று கூறவே, 'ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.'அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.
' மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: 'தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன்.
மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி 'வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்' என்று கூறினார்கள்.
அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்:
1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும்.
3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார்.
நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.' (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)'
லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
எம்பெருமானாரின் கடைசி..... கடைசி வார்த்தைகள்:நபி (ஸல்) அப்போது 'இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள்.உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
நன்றி: குலசை சுல்தான்