இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.
கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!
RASMIN M.I.Sc


அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த கபுராளிகள் தினம் என்பது மார்க்கத்தில் உள்ளதா? நபியவர்கள் இதனை காட்டித் தந்தார்களா? கபுராளிகள் தினம் கொண்டாடுவதினால் நமக்கு ஏதும் நன்மை உண்டா? மரணித்தவர்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுமா என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்குவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும் என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

ஆக நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு இஸ்லாமிய அனுமதியுண்டா என்று பார்ப்பது முதல் கடமை. கபுராளிகள் தினம் என்று இன்றைக்கு கொண்டாடப்படும் தினத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அப்படி ஒரு இரவை அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ காட்டித் தரவும் இல்லை.

கபுராளிகள் தினம் கொண்டாடக் கூடாது, கொண்டாடுவது பாவமான காரியம் என்பதற்கு இந்த அளவுகோளே போதுமானதாகும்.

கபுராளிகள் தினம் எதற்காக ? எப்படி ?

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்.

கபுராளிகள் தினம் என்று கொண்டாடப்படும் ஷஃபான் 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று சொல்லுவார்கள். இந்த பராஅத் இரவில பல விதமான மார்க்கத்திற்கு முரனான காரியங்களும் அரங்கேற்றம் செய்யப்படும். உண்மையில் இவர்கள் சொல்லிக் கொள்ளும் பராஅத் இரவு என்றொன்று மார்க்கதில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.

குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் லைலதுல் கத்ர் (கத்ருடைய இரவு) என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் லைலதுல் பராத் என்றொரு வார்த்தை குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எங்குமே காணப்படவில்லை. காரணம் இஸ்லாமிய மார்க்கதில் அப்படியொரு முக்கியத்துவம் மிக்க இரவு இல்லை.

ஆனால் ஷபே பராஅத் என்று ஷஃபான் மாதம் 15ம் நாளை கண்ணியப்படுத்துபவர்கள் பேர் வைத்துள்ளார்கள். ஷபே என்றால் பாரசீக மொழியில் இரவு என்று அர்த்தம். பராஅத் என்ற வார்த்தையுடன் ஷபே என்பதை சேர்த்து ஷபே பராஅத் (பாராத் இரவு) என்றாக்கி விட்டார்கள்.

பாரசீக மொழியில் இந்த நாள் அழைக்கப்படுவதில் இருந்தே கண்டிப்பாக இந்த பித்அத் (மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்) ஈரானில் (பாரசீகம்) இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று யாசீன்களும், மூட நம்பிக்கைகளும்.

ஷஃபான் மாதம் 15ம் நாள் கொண்டாடப்படும் கபுராளிகள் தினத்தில் சில காரியங்கள் செய்யப்படும். அதில் மிக முக்கியமாக மூன்று யாசீன்கள் ஓதுவார்கள்.

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்.

இரண்டாவது யாசீன் கபுராளிகளுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும்.

மூன்றாவது யாசீன் அதிக பரகத் (அபிவிருத்தி) வேண்டியும் ஓதப்படும்.

குர்ஆன் மீது மக்களுக்குள்ள ஆழ்ந்த மரியாதையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக் கொள்ளும் மார்க்கம் படித்ததாக சொல்லிக் கொள்ளும் மேதாவிகள், மார்க்க வியாபாரிகள் தங்கள் பொருளாதாரத்தை சீராக்கிக் கொள்வதற்காக வேண்டி குர்ஆனையே கொச்சைப்படுத்தும் இந்த கீழ்த்தரமாக காரியத்தை கொஞ்சம் கூட மன உருத்தல் இன்றி சர்வ சாதாரணமாக செய்வதுதான் கவளையாக உள்ளது.

100 ரக்அத்தில் தொடங்கி 1000ம் ரக்அத் வரை..........

இந்த மூன்று யாசீன்களுடன் சேர்த்து அன்றிரவு முழுவதும் சுமார் 100 ரக்அத்கள் தொழுகை நடத்தப்படும். 100 ரக்அத் என்பது குறைந்த பட்சம் என்பதாகும். சில ஊர்களில் 1000ம் ரக்அத் என்றும் வைத்துள்ளார்கள்.

அல்லாஹ்வை நினைத்து நிதானமாக இறையச்சத்துடன் தொழ வேண்டிய தொழுகை என்ற கடமையை கேளி செய்யும் விதமாக 100 ரக்அத் 1000ம் ரக்அத் என்று விழுந்து விழுந்து எழும்புவதற்காக ஆக்கியிருக்கிறார்கள்.

உண்மையான இஸ்லாமிய மார்க்கதில் இப்படியொரு கேளியான, கிண்டளான தொழுகையை அதுவும் ஒரே இரவில் 100 அல்லது 1000ம் ரக்அத் என்று உருவாக்கியிருப்பது அல்லாஹ்வையும், அவன் தூதரையும் கேளி செய்வதற்கு சமனானதாகும்.

இரவு முழுவதும் கால் வீங்கும் அளவுக்கு இறைவனுக்காக நின்று வணங்கிய நபி (ஸல்) அவர்கள். 100 ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை இருக்குமாக இருந்தால் அதனை தொழுது காட்டியிருக்கமாட்டார்களா? இதனை சிந்திக்க வேண்டாமா?

மார்க்கத்தில் இல்லாத பாத்திஹாக்களும், பந்தி மேயும் ஆலிம்சாக்களும்.

100 ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை மூன்று யாசீன் தவிர, அன்றிரவு வீடுகள் தோறும் பாத்திஹாக்களும் ஓதப்படும். பாத்திஹாக்கள் என்ற பெயரில் பாக்கட் மணியை சரி செய்து கொள்வார்கள் ஆலிம்கள். இப்படி பாத்திஹா ஓதுவதற்காக வரும் ஆலிமுக்கு மூக்கு முட்டுவதற்கு சாப்பாடும் போடப்படும்.

ஆக மொத்தத்தில் தங்கள் வயிரை வளர்ப்பதற்காக மூட நம்பிக்கைகளை உரம் போட்டு வளர்க்கிறார்கள் இந்த ஆலீம்(?) பெருந்தகைகள்.

கபுராளிகள் தினம் (பராத் இரவு) அன்று நோன்பு கூடாது. மத்ஹபுகளின் நிரூபணம்.

கபுராளிகள் தினம் என்று வர்ணிக்கப் படும் இந்த ஷஃபான் 15ம் இரவில் மக்கள் நோன்பு நோற்கிறார்கள் அது நபி வழியென்றும் நினைக்கிறார்கள். ஆனால் இப்படியொரு நோன்பை நோற்பதற்கு நபி வழியில் எங்கும் ஆதாரங்கள் காணப்படவில்லை.

அதே போல் இந்த நோன்பை வணக்கம் என்று நினைத்து செயல்படக் கூடியவர்களின் மத்ஹபு நூல்களும் இப்படியொரு நோன்பு இல்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

நபியவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள். (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

(நூல் – புகாரி 1969)

ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள் லைலதுல் பராஅத் (பராஅத் இரவு) என்ற ஒன்றில் நோன்பு நோற்க வேண்டும் என்றோ அல்லது மூன்று யாசீன்கள் ஓத வேண்டும் என்றோ அல்லது 100ரக் அத் 1000ம் ரக்அத் என்று தொழ வேண்டும் என்றோ எந்த இடத்திலும் நமக்குக் கற்றுத் தரவில்லை.

இது தவிர ஷஃபான் மாதம் 15ம் நாள் பற்றி சிறப்பித்துக் கூறப்படும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானவையாகும். ஆக மொத்தத்தில் மார்க்கத்தில் இல்லா ஒரு காரியம், அழகாக மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேராளும், அவனுடைய தூதரின் பெயராலும் லாவகமாக அரங்கேற்றப்படுகிறது.

இப்படிப்பட்ட தீய காரியங்களை விட்டு விளகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் மாத்திரம் வாழ்ந்து மறுமையில் வெற்றி பெருவோமாக!