ஹதீதுகளின் பாகுபாடுகள்


ஹதீதுகளின் பாகுபாடுகள்
இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
"நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்" என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்கு, பொய்யான ஹதீதுகள் இட்டுக்கட்டப்படும் என்ற முன்னறிவிப்பைத் தருகின்றது. ஆகவே, ஹதீது என்று சொன்னவுடன் அதன் தரத்தைப் பற்றி ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். பொய்யான ஹதீதுகள், மறுமையை மறந்து, இவ்வுலக சுகபோகங்களை விரும்பியவர்களால், இட்டுக்கட்டப்பட்டவை என்பது தெளிவான ஒரு விஷயம்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சில முனாபிக்கீன்கள் இஸ்லாத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நல்லாட்சி நடத்திய 4 கலீபாக்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் பேராசையோடும் பொய்யான ஹதீதுகள் புனையப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன. அது உருமாறி, மார்க்கத்தை அற்ப உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியவர்களால், பொய்யான ஹதீதுகள் புதுப்பொலிவைப் பெற்று மக்களிடையே சகஜமாக உலாவர ஆரம்பித்தன.
ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை, 4 இமாம்களது கால கட்டத்தில் பொய்யான ஹதீதுகள் நடைமுறையில் இருந்து வந்தாலும், அவற்றின் விபரீதப்போக்கு உச்சத்தை அடையவில்லை. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஹதீதுகளைத் தரம் பிரிக்கும் முயற்சி நடைபெறவில்லை, அதற்கடுத்த காலகட்டத்தில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன. பலர் சுய வேட்கையோடு அவற்றை நெய்வார்த்து வளர்த்து வந்தனர். ஆகவே, ஹதீதுகளைத் தரம்பிரிக்கும் அவசியம் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டது.
இந்தக் கலைக்கு வித்திட்டவர் இமாம்களுள் ஒருவரான ஹிஜ்ரி 241 ல் மரணமடைந்த இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று சொல்லலாம். அவரது மாணவரான இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அவர்கள் திரட்டிய பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை இரவு பகலென்று பாராமல் அலசி ஆராய்ந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தனர். அதே போல் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், தாங்கள் திரட்டிய லட்சக்கணக்கான ஹதீஸ்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, உண்மையான ஹதீஸ்கள் என்று கண்ட சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் மட்டும் பதிவு செய்தனர்.இதற்குப் பின் தோன்றிய சில ஹதீஸ்களை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களையும் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் விஷயமாக, ராவிகள் விஷயமாக, இஸ்நாது விஷயமாகத் தங்களுக்குக் கிடைத்த விவரஙகளையும் தங்களது நூல்களிலேயே பதிவு செய்து வைத்தனர். அதன் பின் தோன்றிய சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் அறிவிப்போடு பதிவு செய்தனரே அல்லாமல், அவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு அவர்கள் குறிப்பிடாததற்கு "அஸ்மாவுர் - ரிஜால்" கலை வளர்ந்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வரிசையில் வரக்கூடிய நபர்கள் அனைவரது சரித்திரங்களும் பெரும்பாலும் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன.ஒரு ஹதீஸைப்பற்றிய ஐயம் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பாளர்களின் வரிசையையும், அவர்களின் குணாதிசயங்களையும் ஆராய்ந்து அந்த ஹதீஸின் தரத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன.மர்ஃபூஃ, முஸ்னது, முத்தஸில் போன்ற பிரிவு வாரியான அடிப்படையில் ஸஹீஹான ஹதீதுகளையும், முதல்லஸ், முர்ஸல், முன்கத்தஃ, மவ்கூஃப் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் லயீஃபான ஹதீதுகளையும், முன்கர் போன்ற அடிப்படையில் மவ்லூவான ஹதீதுகளையும் தரம்பிரித்து பாகுபடுத்தி நிர்ணயம் செய்து காட்டப்படுகின்றன.
ஆக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே, குர்ஆன் - ஹதீஸ்களுக்கு முரண்பட்ட தக்லீத், தஸவ்வுஃப் தத்துவங்கள் இஸ்லாத்தின் பேரால் நுழைக்கப்படுவதற்கு முன்பே, ஹதீஸ்கலை வல்லுனர்களாலும், 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்களாலும் ஹதீஸ்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு தெள்ளத் தெளிவாக மேற்கூறியபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய 4 இமாம்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவாகளின் வழிகாட்டுதலுக்கு விரோதமாக சில சுய நலமிகளால் மத்ஹபுகள், தரீகாக்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியோர்களால், தெளிவாக ஆராயப்பட்டு, அவர்களது கிதாபுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் ஸஹீஹ், லயீஃப், மவ்லூஃ என்று சொல்லுகிறோமெயல்லாமல், எங்கள் இஷ்டத்திற்கு நாங்களாக கூட்டி குறைத்து எதையும் சொல்லவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஆராயப்பட்டு, வடித்தெடுக்கப்பட்டு லயீஃப் என்றும் மவ்லூஃ என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பிரித்திறிவிக்கப்பட்டு அன்றைய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தும், மீண்டும் எப்படி இந்த லயீஃபான, மவ்லூஃஆன ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்து ஆழவேருன்றிக் கொண்டன? அதற்கு முன்னால் "பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஏன் செயல்படக்கூடாது?" என்று பலர் ஐயங்களைப் கிளப்புவதால் அது பற்றிய காரணத்தை முதலில் பார்ப்போம்.
அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளனர்.அதாவது அந்த ஹதீஸில் குறிப்பிட்ட விஷயத்தை நபி(ஸல்) சொன்னதாக திட்டவட்டமாகத் தெரியும் போது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும்" என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்ற சந்தேகம் தோன்றும்போது என்ன செய்வது? நாம் எப்படி நடந்து கொள்வது? அதற்கு திருக்குர்ஆன் நமக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது."உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றக் கூடாது." (அல்குர்ஆன் 17:36)திட்டவட்டமாக நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியாதபோது அதனைப் பின்பற்றுவது கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் கூறிவிடுகிறான். அவ்வாறு பின்பற்றுவதை தடை செய்கிறான். பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தவரை திட்டவட்டமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்ல முடியாத நிலை, அதனால் பலவீனமான ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படுவது கூடாது என்று தெரிகின்றோம்.
நபி(ஸல்) அவர்களும் இதுபற்றிக் குறிப்பிடும்போது "உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு! சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு!" என்று கூறியுள்ளார்கள். இதனை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது புகாரி நூலில் "வியாபாரங்கள்" என்ற பாடத்திலும் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் "கியாமத்" என்ற பாடத்திலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னத்திலும் அறிவிக்கின்றனர்.இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும், சந்தேகத்திற்குரியவைகளைப் பின்பற்றுவதை தடைசெய்து விடுகின்றது. இந்தக் கருத்தைச் சொல்லக் கூடிய இன்னும் பல ஹதீஸ்களும் வந்துள்ளன.எனவே எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸின் கருத்துடன் மோதாவிட்டாலும் அதில் சந்தேகம் இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அதனைப் பின்பற்றக்கூடாது என்பது தெளிவு.அவ்வாறிருக்க பலவீனமான சில ஹதீஸ்களை திர்மிதி போன்ற இமாம்கள் ஏன் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்? என்ற ஒரு கேள்வியும் சிலரால் கிளப்பப்படுகிறது.
அன்றைய காலத்தில் "பலவீனமான ஹதீஸ்கள்" ஆதாரப்பூர்வமானவை என்ற முத்திரையுடன் உலாவந்தன. அதனை அடையாளம் காட்டி அதன் உண்மை நிலையை உணாத்திடவே அந்த இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து அடையாளம் காட்டுகின்றனர்.உதாரணமாக "நஜாத்" தனது இதழ்களில் கதைகளின் பின்னணியில் என்று எழுதுகின்றது. அந்தக் கதைகள் ஏதோ ஆதாரமற்றவைபோல் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்படுகின்றன. அது சரியானாதல்ல என்று அடையாளம் காட்டுவதற்காக அந்தக் கதைகளை எழுதி நாம் விமர்ச்சிக்கவில்லையா? அது போல்தான் சில ஹதீஸ்களை இமாம்கள் பலவீனமானது என்று அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடுகின்றனர்.
முன்கரான ஹதீதுகள்:-
அடுத்து முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம். குர்ஆன் வசனங்களுக்கோ, உண்மையான ஹதீதுகளுக்கோ முரண்படுகின்ற ஹதீதுகள் "முன்கரான" - இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் என்று கணிக்கப்படுகின்றன.
இந்த முன்கரான, மவ்லூஃஆன ஹதீதுகளை வைத்துச் செயல்படும் போது, குர்ஆன் வசனங்களையோ, உண்மை ஹதீதுகளையோ புறக்கணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது அறிவுடையோர் செய்யும் செயல் அன்று.
உதாரணமாக, "ரமழான் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்ற, ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு உண்மை ஹதீது, 'ஸிஹாஹ்ஸித்தா' முதல் 15 ஹதீது கிதாபுகளில் "ரமழான் இரவுத் தொழுக" பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாபிர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீது, நபி(ஸல்) ரமழான் இரவில் 11 ரக அத்துகள் தொழ வைத்தார்கள்", என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீதை ஊர்ஜிதம் செய்கின்றது. மேலும் உபை இப்னு கஃபு(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சம்பவத்தை எடுத்துச் சொன்ன போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக அங்கீகரித்த இன்னொரு ஹதீது, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் அறிவிப்புக்கு இன்னும் அதிக வலுவைத் தருகின்றது.
ஆக இந்த மூன்று உண்மை ஹதீதுகளும், நபி(ஸல்) அவர்களின் ரமலான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துகள் மட்டுமே என்பதைத் தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.இந்த நிலையில் பைஹகி, தப்ரானி போன்ற நூல்களில் காணப்படும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீதில் நபி(ஸல்) ரமழான் இரவில் 23 ரகஅத்துகள் தொழுததாகக் காணப்படுகின்றது. ஆக முன்னால் நாம் பார்த்த மூன்று ஹதீதுகளுக்கும் முரணாக இந்த ஹதீது காணப்படுகின்றது. அதனால் இந்த ஹதீதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
அப்படி ஆராயும்போது 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்கள், இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் வரும், அபூஷைபா இப்றாஹிம் இப்னு உதுமான், **ஹனம் இப்னு உதைபா கூபி** ஆகிய இருவரும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். பொய்யர்கள் என்று அறிவித்திருப்பது தெரிய வருகின்றது. அதனால் ஹதீதுக் கலை வல்லுனர்கள் இந்த ஹதீதை "முன்கரான ஹதீது' என்று அறிவிக்கின்றனர்.
ஆக சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் ஹதீதுக்கு எதிராக இந்த 23 ரகஅத் என்ற ஹதீது இருப்பதால், இந்த 23 ரகஅத் ஹதீதை ஹதீதுக் கலை வல்லுனர்கள் தங்களது ஆதாரப்பூர்வமானன நூல்களில் நிராகரித்துள்ளனர்.
முரண்பட்ட கருத்துக்கள்:-
அடுத்து உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி) தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்ட, ஸாயிப் இப்னு யஸீதால்(ரழி) அறிவிக்கப்படும் ஒரு சம்பவம் முஅத்தா இமாம் மாலிக்கில் காணப்படுகின்றது. அதற்கு அடுத்து அதே முஅத்தா இமாம் மாலிக்கில், "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத்துகள் தொழுது வந்தார்கள்" என்ற சம்பவம் யஸீதுப்னு ரூமானால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரழி) அவர்கள் 23 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டதாகவும், தொழுததாகவும் ஒரு சில கிதாபுகளில் பதிவாகி உள்ளன. ஆக உமர்(ரழி) அவர்களைத் தொட்டும் முரண்பட்ட இரு கருத்துக்கள் (11 ரகஅத், 23 ரகஅத்) காணப்படுகின்றன.இவர்களை நிராகரித்தவர்கள்* அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) யஹி இப்னு முயின் அபூஜர்ஆ, அபூ ஹாதம் ராஸி, தகபி.** இப்னு ஜெளசி, அபூ ஹாதம் ராஸி, தகபி.இப்போது இந்த முரண்பட்ட இரு கருத்துக்களை ஆராய்வோம்.
உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். நபி(ஸல்) 11 ரகஅத் தொழுதிருக்க, அதற்கு மாற்றமாக உமர்(ரழி) அவர்கள் மீது நாம் நல்லெண்ணமே கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் எண்ணத்தை உமர்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கனவில் கூட நாம் நினைக்க முடியாது. 23 ரகஅத் சம்பவத்தை ஆராயும் போது அறிவிப்பாளர்களில் பல பலவீனங்களைப் பார்க்க முடிகின்றது. உதாரணமாக, "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள்" என்று அறிவிக்கும் யஜீதுப்னு ரூமான், உமர்(ரழி) அவர்களின் காலத்தில் பிறக்கவே இல்லை. பஸீதுப்னு ரூமானின் இறப்பு ஹிஜ்ரி 130 என்று அஸ்மாவுர்ரிஜால் கலை வல்லுனர் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளனர்.உமர்(ரழி) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 24. யஸீதுப்னு ரூமான் ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருந்தாலும், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவே முடியாது. ஆக தொடர்பு இல்லை. இப்படி உமர்(ரழி) 23 ரகஅத் தொழுதார்கள், தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள், உமர்(ரழி) காலத்தில் 23 ரகஅத் தொழப்பட்டது ஆகிய அனைத்து அறிவிப்புகளும் உண்மைச் சம்பவத்திற்கும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் மாற்றமாக அமைந்துள்ளன.அப்படியே, ஒரு வாதத்திற்காக உமர்(ரழி) காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதை நாம் மார்க்கமாகக் கொள்ள முடியாது. காரணம் உமர்(ரழி) காலத்தில் மக்கள் பல தவறான மார்க்க முரணான காரியங்களிலும் ஈடுபட்டிருந்திருப்பர், ஈடுபட்டிருந்திருக்கலாம். இதையெல்லாம் மார்க்கத்திற்குரிய ஆதாரங்கள் என்று எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
ஆனால் மக்கள் 23 ரக்அத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாகத் தொழுது வந்ததை மாற்றி, உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி 11 ரகஅத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள், என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது. உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி நடந்தார்கள் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டுமேயல்லாது, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு விரோதமாக 23 ரக்அத் தொழத் துணை போனார்கள் என்று நாம் ஒரு போதும் எண்ண முடியாது.
நாம் செய்ய வேண்டியது என்ன?இன்னும் ஒரு வாதத்திற்கு உமர்(ரழி) அவர்களே 23 ரகஅத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்?நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 11 ரகஅத் தொழுதார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 ரகஅத் பற்றிய அறிவிப்பு அதற்கு முரணாகக் காணப்படுகின்றது. 23 ரகஅத்தை விட்டு 11 ரகஅத்தை எடுத்துக் கொள்பவர்கள் உமர்(ரழி) அவர்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள், அதே அடிப்படையில் 11 ரக்அத்தை விட்டு 23 ரகஅத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களையே அவமதிக்கிறார்களே? இது நியாயம் தானா?
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கே முதலில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது கலிமா "லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என்பதே அல்லாமல் "லாயிலாஹ இல்லல்லாஹ், உமர் ரஸுலுல்லாஹ்" அன்று. நிச்சயமாக உமர்(ரழி) அல்லாஹ்வின் ரஸுல் அல்லர். நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் இப்படித்தான் நடந்தார்கள் என்பது தெளிவாக இருந்தால், அதை விட்டுவிட்டு நாம் வேறு யாரையும் பின்பற்ற மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் "எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷித்தீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று சொல்லியிருக்கிறார்களே, என்று யாராவது கேட்டால் அதற்குரிய பதிலாவது,நபி(ஸல்) அவர்கள்"எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று தனது சுன்னத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் சொல்லி இருக்கிறார்களே அல்லாமல், "எனது சுன்னத்தை விட்டுவிட்டு, எனது குலபாயே ராஸிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்" என்றோ, "எனது சுன்னத்திற்கு மாற்றமாக எனது குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்," என்றோ சொல்லவில்லை.
இப்படிச் சொல்லி இருந்தால் நபி(ஸல்) அவர்களின் 11 ரகஅத்தை விட்டு விட்டு உமர்(ரழி) அவர்களின் சுன்னத் (அப்படிச் சொல்லப்படுகிறது, உண்மை அல்ல) 23 ரகஅத்தை எடுத்துக் கொள்ளலாம்.அப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ளபடி நடப்பதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் எத்தனை ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது தெளிவில்லாமல் இருந்தால் மட்டுமே, உமர்(ரழி) அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
அதாவது ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்தால் மட்டுமே, குலபாயே ராஷிதீன்கள் சுன்னத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்பது தெளிவாக இருக்கும் போது, அந்த விஷயத்தில் குலபாயே ராஷித்தீன்களின் சுன்னத்திற்கு இடமே இல்லை. அதுவும் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்து என்று சொல்வதிலிருந்து ஆட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தை அமுல்படுத்துவதில் காலத்திற்குக் காலம் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்கும் விஷயங்களிலும், இது சாத்தியமே அல்லாமல், வணக்க வழிபாடு அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகும்.
காரணம் வணக்க வழிபாடுகளை விதிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். நபி(ஸல்) அவர்களுக்கும் இதில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நபி(ஸல்) மார்க்க உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்னும் உண்மையை, குர்ஆனின் பல வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. (3:20, 5:92, 5:99, 16:35, 16:82, 24:54, 29:18, 6:17, 69:44) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வோடு வஹியின் தொடர்போடு இருந்ததனால் இது சாத்தியமாயிற்று.குலபாயே ராஷிதீன்கள் வஹியின் தொடர்புடையவர்கள் அல்லர். ஆகவே குலபாயே ராஷிதீன்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் உட்பட்டே இருந்திருக்க வேண்டும். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான முடிவுகளை ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்ய நேரிட்ட போது குர்ஆனைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் அவர்கள் திருத்தப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது, அதை மறுத்த உமர்(ரழி) அவர்களின் கூற்று குர்ஆனின் வசனங்களைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஹர் தொகையை மட்டுப்படுத்தி ஆணை பிறப்பித்த போது, ஒரு சாதாரண பெண்மணியால் குர்ஆன் வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. இதுபோல் அவர்கள் செய்த தீர்ப்புக்களில் சில, உண்மையான ஹதீதுகள் கொண்டு நிராகரிக்கப்பட்டன. உதுமான்(ரழி), அலி(ரழி) இவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிச்சில சம்பவங்கள் நடைபெற்று குர்ஆன், ஹதீதைக் கொண்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் விபரம் இங்கே தரப்படவில்லை.
தவறுவது மனித இயல்புஇந்தச் சம்பவங்கள் அனைத்தும் குலபாயே ராஷிதீன்களோ, ஸஹாபாக்களோ, இமாம்களோ, மற்றும் பெரியார்களோ, குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக மார்க்கத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்ற மாபெரும் உண்மையை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
இப்படி நாம் எழுதிய மாத்திரத்தில், முன் சென்ற பெரியார்களை நாம் அவமதிப்பதாகவும், எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இமாம்களெல்லாம் தவறு செய்திருப்பார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர். அப்படியானால் இமாம்களெல்லாம் தவறே செய்யாதவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனரா? இந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய குற்றம் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. தவறே செய்யாத தனித்தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவனுக்குச் சொந்தமான தனித் தன்மையை இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், இமாம்களை அல்லாஹ்வாக்குகின்றனர்.
மரணிக்காதவன் என்ற, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனித்தன்மையை உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்கியபோது, அபூபக்கர்(ரழி) அவர்கள் "யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்து விட்டார்" என்று அறிவித்ததன் மூலம், அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனித்தன்மையை மனிதர்களுக்குக் கொடுப்பதை வணக்கம் என்றே குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த அடிப்படையில், இமாம்கள் தவறே செய்யதவர்கள் என்று நம்புகிறவர்கள் இமாம்களை வணங்குகிறார்கள் என்றே பொருள். காரணம் தவறே செய்யாத தனித் தன்மையை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை. அவர்களிலும் சில அசம்பாவிதங்களை இடம் பெறச் செய்து அவற்றை வஹி மூலம் திருத்துவது கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டியதோடு, அந்தத் தவறே செய்யாத தனித்தன்மை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை நிலை நாட்டியிருக்கிறான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் அப்படிச் சில சம்பவங்கள் இடம் பெற்று, அல்லாஹ் திருத்தியுள்ள வசனங்களை இன்று நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை. "ஆதம்(அலை) தவறு செய்தார். ஆதமுடைய மக்களும் தவறு செய்பவர்களே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தெளபா செய்பவர்கள்" என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கும் இதைத் தெளிவுபடுத்துகின்றது. நபிமார்களுக்கே சொந்தப் படுத்தப்படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அந்தத் தனித்தன்மையை குலபாயே ராஷிதீன்களுக்கோ, ஸஹாபாக்களுக்கோ, இமாம்களுக்கோ, நாம் சொந்தப்படுத்த முடியுமா என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்! ஒரு போதும் முடியாது. ஆகவே குர்ஆனுக்கோ, ஹதீதுகளுக்கோ மாற்றமாக யாருடைய சொல் இருந்தாலும், அதைவிட்டுவிட்டு குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுவதே நேர்வழி நடப்பதாகும். குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக நேர்வழி நடந்த யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே நம்ப வேண்டும்.
இந்த அடிப்படையில், 23 ரகஅத் ரமலான் தொழுகை உமர்(ரழி) அவர்கள் தொழுதிருக்க மாட்டார்கள். தொழ வைக்கக் கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே உமர்(ரழி) செய்திருந்தால், நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார்கள். மனித இயல்பின் காரணமாக நடந்த அசம்பாவிதமாக இருக்கும் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்களையே பின்பற்றி 11 ரகஅத் தொழுவதே சிறப்பாகும்.
பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மார்க்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை இந்த இதழில் காண்போம்.
பழமையை, நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்தள்ளது. ஷைத்தான், உண்மைக்கு முரணாணதை மக்கள் மனங்களில் விதைத்துவிடுகிறான். மக்களும் அவற்றில் முழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் "அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை" என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர் வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்தது.
இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைதான் அவர்களை, குர்ஆன் ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.உதாரணமாக "பராஅத்" இரவின் விசேஷ அமல்கள் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதும், பலவீனமானதுமாகும்" என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காண முடிகின்றது.
இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், "பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன்வருவதில்லை.மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த, மனப்பான்மையை மேலும் வளாத்தனர். 'கோயபல்ஸ்' தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று நம்ப வைத்தனர்.
வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே என்ற பெயரால், மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில், பாமர மக்களிடையே இந்த பலவீனமான, இட்டக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு, குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை, இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட, இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால், உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும், இன்றும் இதே நிலை தான்.மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எண்ணிய முஸ்லிம்(?) மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சாரங்கள் நடந்தாலும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும், அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிரான முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர்.
உலக ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட போலி அறிஞர்களுக்கு உதவி, அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைகொண்டு இந்தப் போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டபட்டவைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருக்கொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யென தோன்றியதற்கான காரணங்களாகும்.
நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலிபாக்களின் காலத்தில் இது போன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலை தூக்க அவர்கள் இடம் தரவே இல்லை.நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஒரு மரத்தடியில் உறுதி மொழி வாங்கினார்கள். உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரம் புனிதமாகக் கருதப்பட்டு சடங்குகள் பல அங்கே நடப்பது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ஊடனே அந்த மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்கள். அந்தத் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.அலி(ரழி) அவர்கள் காலத்தில் அலி(ரழி) பற்றி ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைக்கப்பட்டபோது , உடனே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு, அவை அத்தனையும் பொய் என்று தெளிவு படுத்தினார்கள்.குர்ஆனையும், உண்மையான ஹதீஸ்களையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள். அநாச்சாரங்கள்,பொய்கள் தலைதூக்கவிடாமல் காத்தார்கள். தங்களிடமே ஒரு தவறு நிகழ்ந்து, சாதாரண குடிமகன் சுட்டிக் காட்டினாலும், உடனே தங்களைத் திருத்திக் கொண்டார்கள்.
இந்த நேர்மை மனப்பான்மை பிற்காலத்தில் ஆட்சி நடத்திய மன்னர்களிடம் காணப்படாததால், பொய்யான ஹதீஸ்கள் தனது ஆட்சியை நடத்தின. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.மக்கள் மனப்பான்மை, உலமாக்கள், சிலரின் சுயநலப் போக்கு மன்னர்களின் பதவி ஆசை, இவை தான் போலி ஹதீஸ்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் மகத்தான இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணங்களாகும்.
பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.
ஹதீதுகளை நாங்களாக எங்கள் இஷ்டத்திற்கு லயீஃப் என்றும் கூறி வருகிறோம் என்று பரவலாக எங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தது. ஆகவே லயீஃப் மவ்லுஃ ஹதீதுகளின் நிலையையும் எங்களது உண்மையான நிலையையும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவே இத்தொடரை ஆரம்பித்தோம்.
ஹதீதுகள் சம்பந்நதப்பட்ட முழு விவரங்களையும் தெளிவாக அறியத் தருமாறு வாசகர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அடுத்த இதழில் 'நபிமொழி வரலாறு' என்ற தொடரில் மெளலவி S. கமாலுத்தீன் மதனி அவர்கள் அவற்றின் விவரங்களைத் தர இருக்கிறார்கள். ஆனவே நாம் இது வரை எழுதி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுக்குள் கொண்டு வந்து இந்தத் தொடரை முற்றுப் பெறச் செய்கிறோம்.
மீண்டும் பார்ப்போம்
1) பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. அவையே சமுதாயத்தில் அதிகம் உலா வருகின்றன.
2) ஆயினும் அவை அறிஞர்களால் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, 1000 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு இனம் காட்டப்பட்டுள்ளன.
3) அவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அறிஞர்கள் அந்த பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைத் தங்கள் நூல்களில் இடம் பெறச் செய்தனர். ஆனால் உலக ஆதாயம் தேடுவோர் அவை தவறானவை என்பதை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பி வந்தார்கள்.
4) பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளை வைத்துக் கண்டிப்பாக அமல்கள் செய்யக்கூடாது.
5) மார்க்கத்தில் கூட்டிக் குறைக்க உள்ள அதிகாரம், அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தமான தனி அதிகாரம் ஆகும். நபிமார்களுக்கும் அதில் பங்கு கொடுக்கப்படவில்லை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டி இருந்தோம்.
6) நாங்கள் பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் என்று எடுத்துக் காட்டுபவை அனைத்தும் 1000 வருடங்களுக்கு முன்பே அறிஞர் பெருமக்களால் தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அந்தக் கிதாபுகளை புரட்டிப் பார்த்து உண்மையை உணாந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) அவனால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் அதாவது அல்குர்ஆனையும், அவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளையும் (இது வஹியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும்), அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இம்மூன்றாலும் நிலைநாட்டப்பட்டவற்றையும் மட்டுமே மார்க்கமாக ஏற்றுக் செயல்படும் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்மை சேர்த்து வைப்பானாக. ஆமீன்.
முற்றும்
அந்நஜாத் 1986
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
j



ஸஃபருல் முழஃப்பர் எனும் வெற்றி வாய்ந்த ஸஃபர் என்று சிறப்பித்தழைக்கப்படும் மாதம், “எம் மாதத்தால் எத்தீங்கும் நிகழ்வதில்லை” என்று நபி(ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ அத்தகைய ஸபர் மாதம் நம்மிடையே வந்திருக்கிறது.
அவர்கள் தமக்கு அல்லாஹ்வின் சொல்லையும், அவனது ரசூலின் வார்த்தைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதிருக்க, தவறுகள் மலிந்து காணப்படும் அரபுத் தழிழ் கிதாபுகளை ஆதாரம் காட்டி பின்வருமாறு அதில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது வருடத்திற்கு 1,24,000 பலா முஸீபத்துகள் இறங்குவதாகவும், அவை ஒட்டு மொத்தமாக ஒடுக்கத்து புதனன்றுதான் இறங்குகின்றன என்றும், அதற்குப் பரிகாரமாக குர்ஆனில் குறிப்பிட்ட சில வசனங்களை ஒரு தட்டையில் எழுதி கரைத்துக் குடித்து விட்டால் அவை நம்மை வந்தணுகாது என்கிறார்கள்.
வேறு சிலரோ, அல்லாஹ் “ஆது” கூட்டத்தாரை புதன்கிழமை அன்று தான் பலமான காற்றை விட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி “அய்யாமின்னஹிஸாத்தின்” (பீடை நாட்களில்….) என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் பீடை நாள் என்று கூறுகிறோம் என்கிறார்கள். வேறு சிலரோ, நமது நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதத்தில் தான் சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் இதைப் பீடை மாதமென்று கூறுகிறோம் என்று அனைவரும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.
வல்ல அல்லாஹ் ஆது கூட்டத்தாரை ஷவ்வால் மாதத்தின் இறுதி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை முடிய ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றை அனுப்பி, அவர்கள் செய்த அநியாயம் அக்கிரமத்திற்குத் தண்டனையாக அழித்து, நாசமாக்கினான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய “ஹுது”(அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான்.அல்லாஹ் அவர்களை ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் அழித்து நாசமாக்கியதற்கும், அதன் பெயரால் இவர்கள் ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் இஸ்லாத்தைப் போட்டு நாசமாக்குவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மாதத்தில் சுகக்குறைவு ஏற்பட்டதினால், அம்மாதம் பீடைமாதமென்று கூற முற்பட்டால், நபி(ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் மாத்திரம் தானா சுகக்குறைவு ஏற்பட்டிருக்கிறது? அது அல்லாத எத்தனையோ மாதங்களிலும் சுகக்குறைவு ஏற்படத்தானே செய்திருக்கிறது? அதனால் வேறு பல மாதங்களையும் பீடை மாதங்கள் என சொல்ல வேண்டியதாகி விடுமே!குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தையே பீடை பிடித்த மாதம் எனக் கூறும் நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அம்மாதத்தில் தானே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகியுமிருக்கிறார்கள். எனவே காலம் பொதுவானது. அது நல்லது, தீயது என அவரவர் செயல்களைப் பொறுத்தே அமைகிறதே அன்றி, வெறுமனே ஒரு மாதம் ஒரு நாள் அனைவருக்கும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைவது கிடையாது.
இதோ, இம்மாதம் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதொரு ஹதீஸைக் காண்போம். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொற்று நோய் என்று ஏதுவுமில்லை என்றும் அவ்வாறே ஆந்தையின் சப்தத்தால் ஆவப்போவதொன்றுமில்லை. எனவே (மற்றொரு அறிவிப்பில் பறவை, மான், பூனை முதலியவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் குறுக்கே செல்வதால் நலமோ, இடரோ விளைவதில்லை) என்றும், அதுபோன்ற ஸஃபர் மாதத்தாலும் நடக்கப் போவதொன்றுமில்லை என்றும் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மானைப் போன்று (ஒரு வியாதி கூட ஏற்பட்டிருக்காத) ஓர் ஒட்டகை சொரி பிடித்த வேறொரு ஒட்டகையுடன் சிறிது காலம் சேர்ந்து பழகி விட்டால் அச்சொரி இதனையும் பற்றிக் கொள்கிறதே என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (விஷயம் அவ்வாறென்றால்) முதன் முதலாகச் சொரி ஏற்பட்ட அந்த ஒட்டகைக்குச் சொரியை ஒட்டி விட்டவர் யார்? என்று கேட்டார்கள் (புகாரி)
மேற்காணும் ஹதீஸில் , நபி(ஸல்) அவர்கள், அக்கால மக்களிடையே ஆழமாய்ப் பதிந்து கிடந்த மூன்று மூடநம்பிக்கைகளைக் களைந்துள்ளார்கள்; அவையாவன:1) குறிப்பிட்ட சில வியாதிகளுக்குப் பிறரைத் தொற்றிக் கொள்ளும் சக்தியுண்டு.2) ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால், அவ்வீட்டில் எவருக்கேனும் மரணம் சம்பவிக்கும்.3) ஷஃபர் மாதம் வந்துவிட்டால் அதன் வருகையால் பொதுவாக மக்கள் அனைவருக்கும் கஷ்டம் ஏற்படும்.ஆகவே நபி(ஸல்) அவர்கள், அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல அல்லாஹ்விடம், அனைத்து ஆதிக்கமும் இருக்கும் பொழுது, சுயமே அவனது நாட்டமின்றி, கேவலம் ஒரு மாதத்தின் வருகையோ, ஓர் ஆந்தையின் சப்தமோ, அடுத்தவனிடமுள்ள ஒரு நோயோ பிறரை எதுவும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை எடுத்துணர்த்தியுள்ளார்கள்.பொதுவாக அல்லாஹ்வை அன்றி மற்றெவராலும், அவர்கள் மலக்குகளாகட்டும், நபிமார்களாகட்டும், வேறு இறைநேசச் செல்வர்களாகட்டும், இவ்வுலகத்தில் ஒரு துரும்பையேனும் ஆட்டவோ அல்லது ஆடும் ஒன்றை அமைதிப்படுத்தவோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் முடியவே முடியாது. காரணத்தை இதோ திருமறை கூறுகிறது: “பியதிஹீ-மலக்கூத்து - குல்லி - ஸைஃ” அவனது கரத்திலேயே அனைத்துப் பொருட்களின் ஆதிக்கமுமிருக்கிறது.ஆதிக்கமனைத்தும் இருக்க வேண்டியவனிடத்தில் ஒட்டுமொத்தமாக அமைந்திருக்கும் பொழுது, யாராலும், எதுவாலும், எதுவும் நடக்காது.
உண்மைநிலை இவ்வாறிருக்க, இவர்களாகவே ஒடுக்கத்து புதன் என்று ஒன்றை உண்டுபண்ணிக் கொண்டு, அதில் பலாமுஸீபத்துகள் இறங்குவதாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி இவர்களாவே கற்பனை செய்துகொண்டு, அவை தம்மை வந்தணுகாமலிருப்பதாக, நபருக்கிரண்டு மா இலைகளாம்! ஆயத்துகள் எழுதப்பட்டவைகளாம்! ருபாய்க்கு இரண்டாம், தலைக்கும் உடம்பிற்கும் தேய்த்துக் குளிக்க ஒன்றாம்! குளித்து விட்டு, கரைத்துக் குடிக்க ஒன்றாம்! அவ்வாறு செய்து விட்டால் அன்றைக்கிறங்கும் அனைத்து முஸீபத்துகளும் அடியோடு போய்விடுமாம்! இப்படி கதையளக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அந்த பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.
இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலமிகளால், சமுதாயப் புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையே அன்றி, உண்மையில் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறெல்லாம் எதுவுமேயில்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு இவை போன்றவை அனைத்தும் மூடப்பழக்கங்கள் என்பதை அநேகர் உணர்ந்து கொண்டு, குர்ஆன் ஹதீஸ்களுக்குப் புறம்பாக கப்ஸா விடுவோர், கதைளயப்போரின் பக்கம், கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டதால், மேற்கூறிய மூடப்பழக்க வழக்கமெல்லாம் புறமுதுகு காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.அநேக ஊர்களில் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிக்கும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. எத்தனை காலம் தான் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருப்பார்கள். ஏமாறுவோர் இருந்தால் தானே ஏமாற்றுவோர் இருக்க முடியும்?
இன்றைக்கு ஓரளவேனும் குர்ஆன் ஹதீஸ்களை மக்கள் சிந்திக்கத் துவங்கியதன் பயனாக மூட நம்பிக்கை, தீய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பேரருளால் இந்நிலை நீடிக்கும் பொழுது, இம்மூட நம்பிக்கைகள் எல்லாம் ஓடி மறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.இத்தகைய மூடப் பழக்கங்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
மேலதிக விபரங்களுக்கு: http://tamilnadumuslims.blogspot.com/
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.நடை மவ்லிது, விடி மவ்லிது நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,மாயமந்திரங்கள் பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!போலிகளிடம் ஏமாறாதீர்!இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
மரணச் சடங்குகளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்
அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!பக்கவாத்தியங்கள்இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி 'பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா' என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர்.
பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?விஞ்ஞானயுகத்தில் கற்காலம்விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்!
நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக!
இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
'முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? 'முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?''
அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.' (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,'யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!' (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி, சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்' இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)
நன்றி: கும்பகோணம் முஸ்லிம் ஜமாஅத்
மேலதிக கட்டுரைகளுக்கு: http://tamilnadumuslims.blogspot.com/